கங்கை

கைலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களில் எல்லொரது பாவமும் போய்விடுமா?என்பதுதான் அந்த கேள்வி. அதற்க சிவபெருமானோ அதற்கான பதிலை ஒரு சிறு நாடகமாக நடத்தி காட்ட எண்ணி பார்வதி என்ன செய்யவேண்டும் என்று கூறினார். அதன்படி சிவன் வயதான ரிஷி போலவும், பார்வதி ரிஷி பத்தினியாகவும் மாறினார்கள். கங்கையில் தீர்த்தமாடி வரும் வழியில் சிறு பள்ளம் தோன்றச் செய்து சிவன் அதில் விழ்ந்து தத்தளித்தபடியும், பார்வதிதேவி பள்ளத்தின் அருகே நின்று தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டு கத்தியபடி இருந்தார். கங்கையில் குளித்துவிட்டு வந்த பலர் பள்ளத்தில் கிடந்த சிவனை வெளியே தூக்க வந்தபோது பார்வதிதேவி தனது கணவர் ஒரு உத்தமமான ரிஷி என்றும் அவரை பாவம் செய்தவர் தொட்டால் மறுகணமே சாம்பலாகி விடுவார்கள் என்று கூறி எச்சரிக்கை செய்தார். இதனால் உதவ வந்த அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர். அப்பொழுது ஒருவன் துணிந்து வந்து பள்ளத்தில் இருந்தவரை தூக்க முனைந்தான். பார்வதி தேவியார் அவனையும் எச்சரிக்கை செய்தார். ஆனால் அவன் தான் இப்பொழுதுதான் கங்கையில் நீராடி வருவதாகவும் தன்னுடைய பாவமெல்லாம் கங்கையில் கரைந்து விட்டது என்று உரைத்து அவரைத் தூக்க பள்ளத்தில் இறங்கினான். அவனது பதிலைக் கேட்டு சிவனும், சக்தியும் மகிழ்ந்து அவனுக்கு சுய உருவில் காட்சி தந்து ஆசி கூறி மறைந்தனர். இதிலிருந்து நம்பிக்கையோடு கங்கையில் நீராடுபவர்களுக்குத்தான் அவர்களது பாவம் போகும் என்ற உண்மையை பார்வதி தேவியார் உணர்ந்து கொண்டார். கங்கையில் நீராடுவது மட்டுமல்ல, எந்த ஒரு செயலின் பலனும் அதைச் செய்வர் கொண்டிருக்கும் நம்பிக்கையை பொறுத்தே கிடைக்கும்.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.