காமத்தை வெல்வது பற்றி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் மிகுந்த பதட்டத்துடன் இளைஞன் ஒருவன் வந்து என் மனத்தை எவ்வளவு அடக்க முயற்சி செய்தாலும் சில நேரங்களில் கீழான ஆசைகளும் வெறுக்கத்தக்க உணர்ச்சிகளும் என் மனத்தை அலைக்கழிக்கின்றன. அதனால் நான் அமைதியை இழந்து தவிக்கிறேன் காமம் எப்படி விலகும்? என்று கேட்டன்.

அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அப்பா இறைக்காட்சி கிட்டாதவரை காமம் அடியோடு விலகுவதில்லை. அதன் பிறகும் உடல் இருக்கும் வரை அதன் சுவடு சிறிது இருக்கவே செய்யும். அதனால் எவ்விதத் தொந்தரவும் இருக்காது. என்னிடமிருந்து முழுமையாகக் காமவாசனை போய்விட்டதென்றா நினைக்கிறாய்? காமத்தை வென்று விட்டதாக நான் ஒரு சமயம் நினைத்தேன். அதன் பிறகு ஒருநாள் பஞ்சவடியில் அமர்ந்திருந்தபோது என்னைமீறிக் காம உணர்ச்சி பீறிட்டு எழுந்தது. என்னால் அடக்கவே முடியாது போல் தோன்றிற்று. நான் ஆடிப் போய்விட்டேன். உடனே தரையில் விழுந்து புழுதியில் முகத்தைத் தேய்த்துக் கொண்டு அழுத வண்ணம் அன்னை காளியிடம் அம்மா நான் பெரிய தவறு செய்துவிட்டேன். காமத்தை வென்றதாக இனி எண்ணவே மாட்டேன் என்று முறையிட்டேன். அதன் பின்னரே அந்த உணர்ச்சி என்னை விட்டு நீங்கியது. நீயோ வாலிபன். அதனால்தான் உன்னால் அந்த வேகத்தை அடக்க இயலவில்லை. பெரு வெள்ளம் புரண்டு வரும்போது அது கரையைப் பற்றி கவலைப்படவா செய்யும். கரையோவஎதுவோ வழியிலுள்ள அனைத்தையும் உடைத்துக் கொண்டு அது முன்னேறுகிறது. வயல்களில் புகுந்து பெரும் உயரத்திற்குத் தேங்குகிறது.

கலியுகத்தில் மனத்தினால் அறியாமல் செய்கின்ற பாவம் பாவமே இல்லையென்று கூறப்பட்டுள்ளது. ஏதோ ஒருமுறை கெட்ட எண்ணம் எழுந்து விட்டதற்காக ஏன் இப்படிப் படபடக்கிறாய்? உடலின் இயற்கைப் படி இந்த உணர்ச்சிகள் சில சமயம் வந்துபோகத்தான் செய்யும். இதையும் மலம் கழிப்பது போன்ற சாதாரண உணர்ச்சியாக எண்ணிக் கொள்ள வேண்டும். மலம் கழிக்க வேண்டியிருக்கிறது என்பதற்காக யாராவது கன்னத்தில் கைவைத்து கொண்டு கவலைப்படுகிறார்களா? அதேபோன்று இத்தகைய உணர்ச்சிகளையும் இயல்பானவையாக அற்பமானவையாகக் கருது. அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காதே. இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய். இறை நாமத்தை ஜெபி. அவரது பெருமையில் ஈடுபடு. கெட்ட எண்ணங்கள் வரட்டும் போகட்டும். அவற்றைக் கண்டு கொள்ளாதே. தாமாகவே அவை கட்டுக்குள் அடங்கி விடும் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.