சிரஞ்சீவி என்றால் என்ன அர்த்தம்?

மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை சிரஞ்சீவி ஆவார்கள். அஸ்வத்தாமன் மகாபலி வியாசர் அனுமன் விபீஷணன் கிருபாச்சாரி பரசுராமன் மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் ஆவார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பல யுகங்களாக தங்களின் உடலுடனே தங்கள் ஆன்மாவுடன் இந்த உலகத்தில் தற்போதும் உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள். தகுதி பெற்றவர்களுக்கே தங்களை வெளிப்படுத்திக் காட்டிக் கொள்வார்கள். இந்த சிரஞ்சீவிகளில் முக்கியமானவர் மார்கண்டேயன். இவரை காப்பாற்ற வேண்டி சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார். மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று? இதன் பின்னணியில் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.

மார்கண்டேயனுக்கு இளம் வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும் அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்டு மகரிஷிக்கும் தெரியும். ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்டு முனிவர் அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர் பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக என்று பணித்தார். மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான். சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்டு முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்த போது மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற அவர்களும் தீர்க்கா யுஷ்மான் பவ என்று வாழ்த்தி விட்டார்கள். பிறகு தான் தெரிந்து கொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா? இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள். பிரம்மாவிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கி விடுகிறார்.

மார்க்கண்டேயன் இப்படித் தான் பார்க்கும் ஞானிகள் அனைவரிடமும் ஆசி பெற்றான். அவர்கள் அனைவரது ஆசியும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றி விடுகிறது. சத்தியத்தை கடைபிடிக்கும் ஞானிகளின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா? ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.

பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார். பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும். அது தீய விதியை மாற்றி நன்மையை கொடுத்து காக்கும் அரண் போல் இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.