யானையின் ஆசிர்வாதம்

யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தெய்வீக ரகசியம் உள்ளது. மூலிகை தாவரங்களை மட்டும் சாப்பிட்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை. மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு.

நம்முடைய ஒரு நாசி வழியாகவே எப்போதும் சுவாசம் நடைபெறும். தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசம் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில் மாறிக் கொண்டே இருக்கும். இதற்கு சூரியகலை சந்திரகலை என்ற பெயரும் உண்டு. வலது நாசி வழியாக சுவாசம் நடைபெறும் போது சூரியகலை என்றும் இடது நாசி வழியாக சுவாசம் நடைபெறும் போது சந்திரகலை என்றும் பெயர். சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர். பிராணயாமம் வாசியோகம் போன்றவைகளும் நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றம் அடைய வைக்கும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும். யோகப் பயிற்சி செய்பவர்கள் வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் மேல் நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் திறமையை பெற்று விடுவார்கள். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.

இரண்டு நாசிகளாலும் சதாசர்வ காலமும் சுவாசிக்கும் தன்மையை பெற்றவர்கள் ஞானிகளாகின்றார்கள். ஞானிகளிடம் ஆசி பெற்றால் நன்மை நடைபெறுவது போலவே இயற்கையாகவே சுழுமுனை வாசியோகம் உள்ள யானை அதன் தும்பிக்கையை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வதால் ஆசிர்வாதம் பெற்றவர்களுக்கு அவர்களின் மூச்சுக்காற்று சீராக செயல்பட்டு மனதில் தீய எண்ணம் வராமல் தடுத்து நல்ல சிந்தனைகளை வளரச் செய்யும். நல்ல சிந்தனைகள் இறைவனை சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும். ஒழுக்கத்தை கொடுக்கும். தர்ம சிந்தனை வளரும். மனதில் அன்பு நிறைந்து இருக்கும். இறைவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எந்நாளும் துன்பம் இல்லை என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள தெய்வீக ரகசியம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.