இறைவன்

ஒரு ராஜா தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார். திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும். மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார். ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது. காட்டு வழியே வரும்போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள். மந்திரியும் காவலர்களும் வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நின்று விடுகிறார்கள். எங்கிருந்தோ ஆறு இளையர்கள் வந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்.

மந்திரியுடன் ஆறு இளையர்களும் ராஜாவிடம் வருகிறார்கள். ராஜாவும் மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம் உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்று கூறுகிறார். முதல் இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான். இரண்டாவது இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான். மூன்றாவது இளைஞன் தான் வசிக்கும் கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான். நான்காவது இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான். ஐந்தாவது இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான். அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன ராஜா ஆறாவது இளைஞனைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். இளைஞன் சற்று தயங்குகிறான் ராஜா மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான். அரசே எனக்கு பொன் பொருள் என்று எதுவும் வேண்டாம். வருடம் ஒரு முறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும் என்று சொன்னான். ராஜாவும் இவ்வளவு தானா என்று முதலில் கேட்டான். பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை தெரிந்து கொண்டான். ராஜா அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால் அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும். அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். வேலைக்காரர்கள் வேண்டும். அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும். சொல்லப் போனால் முதல் ஐந்து இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும் என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,

இந்தக் கதையில் கூறிய ராஜாதான் அந்த இறைவன். பொதுவாக எல்லோரும் இறைவனிடம் கதையில் கூறிய முதல் ஐந்து இளைஞர்களைப் போல் தனக்கு வேண்டிய செல்வம் திருமணம் குழந்தைகள் வேலை ஆரோக்கியம் என்று கேட்பார்கள். கடைசி இளைஞனைப் போல் இறைவனே நம்மிடம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.