ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -9

ராமன் எந்த சலனமும் இல்லாமல் கைகேயியிடம் கம்பீரத்துடன் பேச ஆரம்பித்தார். பெற்றோர்களிடமிருந்து வரும் ஆணையை செயல்படுத்துவது மகனின் கடமை. என் தந்தை மட்டுமல்ல தாங்கள் எனக்கு ஆணையிட்டாலும் கொளுந்து விட்டு எரியும் தீயில் குதிப்பேன். ஆழ்கடலில் மூழ்குவேன். விஷத்தையும் அருந்துவேன். எனக்கு எந்த ஒரு வருந்தமும் இல்லை. தாங்கள் ஆணையிடுங்கள் அதற்கு அடிபணிந்து அச்செயலை இப்போதே செய்து முடிக்கிறேன் என்றார்.

ராமர் இவ்வாறு சொன்னதும் கைகேயி நமது காரியத்தை சுலபமாக சாதித்துவிடலாம். நாம் நினைத்த காரியம் இனிது முடியப்போகிறது என்று மகிழ்ச்சியுடன் மகா பயங்கரமான செய்தியை ராமரிடம் சொல்ல ஆரம்பித்தாள். முதல் வரமாக உனக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் பரதனுக்கு முடிசூட்டி அரசனாக்க வேண்டும். இரண்டாவது வரமாக நீ தவம் செய்யும் பொருட்டு காட்டிற்கு 14 வருடங்கள் வனவாசம் செல்லவேண்டும். இதுவே நான் உனது தந்தையிடம் கேட்ட வரம். இதனை கொடுக்க உனது தந்தை மறுத்தால் கொடுத்த சத்தியத்தில் இருந்து மீறியவர் ஆவார். இந்த இரண்டு வரங்களும் என்னால் மாற்ற முடியாத திட்டங்களாகும் என்று சொல்லி முடித்தாள். ஆனால் ராமரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

என் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றும் பொருட்டு இப்போதே அரச உடைகளை களைந்து மரவுரி தரித்து காட்டுக்கு செல்கின்றேன். என் தந்தையின் வாக்கை எனது வாக்காக காப்பாற்றுவது எனக்கு கிடைத்த பாக்கியம். அதனை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவேன். பரதனுக்காக எதையும் விட்டுக்கொடுத்து பரமசந்தோசத்தை அடைவேன். இதனால் எனக்கு எள் அளவும் வருத்தம் இல்லை. பரதனை தூதுவர்கள் மூலம் அழைத்து வரச்செய்து குறித்த நேரத்தில் முடிசூட்டி விடுங்கள். பரதன் அரசாள்வது எனக்கு மகிழ்ச்சியே. எனது தந்தை தாயாரிடமும் சீதையிடமும் லட்சுமனனுடனும் விடைபெற்று செல்லவேண்டும். அதற்கான கால தாமதத்திற்கு மட்டும் சிறிது அனுமதி தாருங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டான். ராமருடைய முகத்தில் சிறிதளவும் வருத்தத்திற்கு உண்டான அறிகுறி கூட கைகேயிக்கு தெரியவில்லை. ராமரை பார்த்து திகைப்படைந்தாள். உடன் சென்ற லட்சுமனனுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பம் தெளிவாக புரிந்தது. தாய் தந்தையை எதிர்த்து பேச இயலாமல் மிகவும் துன்பத்தில் மூழ்கியவனாக தென்பட்டான். தசரதர் ராமர் நிலை என்ன ஆகுமோ என்று நடுநடுங்கிப்போய் பேச வார்த்தைகள் வராமல் அமர்ந்திருந்தார்.

ராமர் தசரதரையும் கைகேயியிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து லட்சுமனனுடன் தனது தாய் கௌசலையை பார்க்க சென்றார். கைகேயி தனக்கு பின்னால் வரும் வரப்போகும் துக்கத்தை அறியாமல் தன்னுடைய திட்டம் வெற்றி அடைந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.