ராமர் பரதனிடம் பேச ஆரம்பித்தார். தந்தை உனக்கு தந்த ராஜ்யத்தை விட்டு தபஸ்விகளுக்கான உடைகளை அணிந்து கொண்டு ஏன் இங்கு வந்திருக்கிறாய். மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கும் போது கடமையை விட்டு வந்திருக்கும் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் சொல் என்றார். பரதன் பல தடவை பேச ஆரம்பித்து பேச முடியாமல் திக்கி திணறி மெதுவாக பேச ஆரம்பித்தான். உங்களை காட்டுக்கு அனுப்பிவிட்டு யாரும் செய்யத் துணியாத காரியத்தை செய்துவிட்டேனே என்று துக்கத்திலேயே வெந்து மேலுலகம் சென்று விட்டார் தந்தை. என்னை பெற்றவளும் தான் விரும்பிய சந்தோசத்தை பெற முடியாமல் மகா பாவம் செய்து உலகத்தால் பழிக்கப்பட்டு உயிருடன் நரக வேதனை அனுபவித்துக் கொண்டு சோகத்தில் மூழ்கி இருக்கின்றாள். அயோத்தி மக்கள் துக்கமே வடிவமாக மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். மாற்றங்கள் ஏதும் செய்து இனி தந்தையை பெற முடியாது. ஆனால் நீங்கள் அரச பதவியை எற்க சம்மதம் தெரிவித்து உங்களுக்கு உரிய ராஜ்யத்தை நீங்கள் அடைந்தால் அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். தாயார் கௌசலையும் சுமத்ரையும் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். தாயார் கைகேயி இனி வரப்போகும் பழிச்சொல்லில் இருந்து மீள்வார். சூழ்ச்சியால் ராஜ்யத்தை பெற்றேன் என்ற பழிச்சொல் என்னையும் விட்டு நீங்கும். அரச குடும்பத்தில் மூத்தவர் அரசனாக வேண்டும் என்ற நமது குல தர்மம் காப்பாற்றப்படும்.
சொர்க்கம் சென்ற தந்தையும் இதனையே விரும்புவார். உரிய அரசனில்லாமல் அயோத்தி நகரம் தேய்ந்த சந்திரனைப்போல் இருட்டாக இருக்கிறது. அதனை அகற்றி அயோத்தியை பூரண சந்திரனைப்போல் மங்கள நகரமாக்கி வெளிச்சமாக்குங்கள். உங்கள் பாதங்களில் வீழ்ந்து கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அரசனானால் அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமூகமான தீர்வு கிடைத்துவிடும். அரச பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்ற தங்களின் வார்த்தையை கேட்க ஆவலுடன் நமது தாயார் மூவர் முதல் மக்கள் வரை காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மறுத்துவிடாதீர்கள் என்று கண்களில் நீர் வழிய ராமரின் காலை பிடித்துக்கொண்டான் பரதன்.
பரதனை தூக்கிய ராமர் தன் அருகில் அமர வைத்து பேச ஆரம்பித்தார். நாம் நால்வரும் நற்குலத்தில் பிறந்தோம். நல்ல முறையில் வளர்க்கப்பட்டோம். நாம் நால்வரும் ஒரு நாளும் தவறு செய்ய மாட்டோம். உன்னிடம் எள் அளவும் குறைகளை நான் இதுவரை கண்டதில்லை. நீ துக்கப்பட வேண்டாம். உனது தாயாரையும் குற்றம் கூற வேண்டாம். நம்முடைய குல பண்பாட்டுக்கு இது தகாது. நம்மை பெற்ற தந்தையும் தாயும் நமக்கு எந்த ஆணையும் இடலாம். அது அவர்களுடைய உரிமை. காட்டிற்கு அனுப்புவதும் ராஜ்யத்தை கொடுப்பதும் அவர்களுடைய உரிமை. அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றி தாய் தந்தையை கௌரவிப்பது நமது கடமை. உனக்கு ராஜ்ய பொறுப்பை தந்து எனக்கு 14 ஆண்டுகள் வனத்தின் தவ வாழ்க்கையை வகுத்துக் கொடுத்திருக்கிறார். இதனை நாம் மீறலாகாது. 14 ஆண்டுகள் 14 நாட்கள் போல் கழித்துவிட்டு விரைவில் அயோத்தி திரும்பிவருவேன் என்றார் ராமர்.