ராமர் சென்ற ரதம் தசரதரின் கண்ணை விட்டு மறைந்ததும் கதறிக்கொண்டே கீழே விழுந்தார். ஒரு பக்கம் கௌசலையும் மறுபக்கம் கைகேயியும் தசரதரை பிடித்தார்கள். தசரதர் கைகேயியை பார்த்து பாவியே என்னை தொடாதே. என் முகத்தை பார்க்க நான் விரும்பவில்லை. உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. உன்னை விட்டேன் உன்னை விட்டேன் என்று சொல்லிக்கொண்டே கைகேயியின் கையை உதறினார். உன்னுடைய வரத்தின் படி பரதன் இந்த ராஜ்ஜியத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டானேயானால் என் இறுதிக்காலத்தில் அவன் எனக்கு செய்யும் பிதுர்கடன் என்னை வந்து சேராது. உன் காரியத்தை நீ நடத்தி முடித்துக்கொண்டாய். கணவன் இல்லாத விதவைக்கோலத்தில் நீ மகிழ்ச்சியுடன் இரு. உன்னை நான் இனி பார்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி கௌசலையின் மாளிகைக்கு திரும்பினார்.
தரசதர் கௌசலையிடம் புலம்ப ஆரம்பித்தார். ராமர் எவ்வாறு காட்டில் வசிப்பான். மெத்தையில் படுத்து சுகமாக உறங்கியவன் காட்டில் தரையில் படுத்து தலைக்கு கல்லை வைத்து தூங்குவான். உணவிற்கு காட்டில் அவனுக்கு என்ன கிடைக்குமோ சாப்பிட்டானோ இல்லையோ என்று கதறிக்கொண்டே இருந்தார். கௌசலை ராமர் சென்ற மிகப்பெரிய துக்கத்தில் இருந்த படியால் தசரதருக்கு ஆறுதல் ஒன்றும் கூற முடியாமல் அமைதியாகவே அழுதுகொண்டிருந்தாள்.
சுமத்ரை கௌசலைக்கு ஆறுதல் சொன்னாள். அக்கா சாஸ்திரமும் தருமமும் தெரிந்த தாங்கள் ஏன் துக்கப்படுகின்றீர்கள். தசரதருக்கு தைரியம் சொல்ல வேண்டிய தாங்கள் தைரியம் இழக்காதீர்கள். தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற ராமர் ராஜ்ஜியத்தை துறத்து வனம் சென்றிருக்கின்றான். சத்தியத்திற்கு மறுபெயரான ராமரை பெற்ற தாங்கள் பெருமைப்படவேண்டும். ராமர் சென்றதை நினைத்து துக்கப்பட வேண்டாம். ராமருடன் சீதையும் லட்சுமணனும் சென்றிருக்கிறார்கள். அவர்களை ராமரை நன்றாக பார்த்துக்கொள்வார்கள். நிச்சயமாக மூவரும் திரும்பி வருவார்கள். ராமர் அயோத்தியை அரசாள்வான் என்று சமாதானம் செய்தாள். சுமத்ரையின் வார்த்தைகளால் கௌசலை சிறிது ஆறுதல் அடைந்தாள்.
ராமர் சென்ற ரதத்துடனே மக்கள் பெருங்கூட்டமாக வனம் போக வேண்டாம் நாட்டிற்கு திரும்புங்கள் என்று கூக்குரலிட்டவாரே பின் தொடர்ந்து சென்றார்கள். ரதத்தை நிறுத்திய ராமர் மக்களிடம் பேச ஆரம்பித்தார். அயோத்தி நகரத்து மக்களே என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பிரியமும் நான் அறிவேன். அதே அன்பையும் பிரியத்தையும் இனி நீங்கள் பரதன் மீது செலுத்தி பரதனை திருப்தி அடைய செய்யுங்கள். அதுவே எனக்கு திருப்திதரும். என்னைவிட வயதில் சிறியவனாக இருந்தாலும் ஞானத்தில் சிறந்தவன் பரதன். என் தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தருமத்தின் படி வனம் செல்கின்றேன். விரைவில் திரும்பி வந்துவிடுவேன். அரசரின் ஆணைப்படி நீங்கள் நடந்து கொள்ளவேண்டும். அனைவரும் திரும்பிசெல்லுங்கள் என்று தன் அன்பு நிறைந்த பார்வையால் மக்களை பார்த்து உத்தரவிட்டார். மக்கள் அனைவரும் நகரத்திற்கு திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். ரதத்தை காட்டை நோக்கி செலுத்தினான் சுமந்திரன்.



