ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -8

அதிகாலை விடிந்தது. பட்டாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வசிஷ்டர் செய்து முடித்தார். தசரத சக்ரவரத்தியை முடிசூட்டும் இடத்திற்கு அழைத்து வரச்சொல்லி சாரதி சுமந்தனிடம் வசிஷ்டர் தகவல் சொல்லி அனுப்பினார். கைகேயி இருக்கும் அந்தப்புரத்திற்கு வந்த சுமந்தன் தசரதரிடம் செய்தியை கூறினான். தசரதர் பேச இயலாமல் அமைதியாக இருந்தார். கைகேயி சுமந்தனிடம் ராமரை உடனே இங்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டார். தயங்கியபடியே தசரதரை பார்த்தான் சுமந்தன். ராமரை பார்க்க விரும்புகின்றேன் அவரை அழைத்து வா என்று வருத்தம் கலந்த குரலில் கூறினார் தசரதர். தசரதரின் முகவாட்டத்தை கண்ட சுமந்தன் ஏதோ விபரீதம் நடந்திருக்கின்றது என்று எண்ணி ராமருடைய மாளிகைக்கு ரதத்தை செலுத்தினான்.

பட்டாபிஷேகத்திற்கு சீதையுடன் தயாராக இருந்தார் ராமர். தங்கள் சிற்றன்னை கைகேயியின் மாளிகையில் தசரத சக்ரவர்த்தி தங்களை காணவேண்டும் என்று தங்களை அழைத்து வரச்சொன்னார் என்று சுமந்தன் ராமரிடம் கூறினான். அலங்காரத்துடன் இருந்த சீதையை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு ராமர் லட்சுமனனை அழைத்துக்கொண்டு சுமந்தனுடன் தசரதரை பார்க்க கிளம்பினார். செல்லும் வழி எங்கும் மக்கள் ராமரை பார்த்து போற்றினார்கள். ராமர் மாளிகைக்குள் நுழைந்ததும் ராமா என்று அலறிய தசரதர் கீழே விழுந்தார். மேற்கொண்டு அவரால் பேச இயலவில்லை. இக்காட்சி ராமரை திகிழடையச் செய்தது. தன் தந்தைக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் ஏதேனும் செய்து விட்டேனோ என்று பயந்தார் ராமர். தன் தந்தையை சாந்தப்படுத்தி அவர் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினார். பின்பு கைகேயியின் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினார். வழக்கமாக கைகேயியின் முகத்தில் இருக்கும் தாயன்பு தற்போது இல்லாததை ராமர் கவனித்தார்.

அம்மா எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் தந்தை என்னிடம் அன்பாக பேசுவார். ஆனால் இப்போது வாடிய முகத்துடன் இருக்கிறார். நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா. தங்கள் கோபம் அடையும்படி நடந்துகொண்டேனா எதுவாக இருந்தாலும் தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள். இங்கு இருக்கும் சூழ்நிலைகளை பார்த்து எனக்கு அச்சமாக இருக்கிறது என்றார். ராமரின் பேச்சைக்கேட்ட கையேயி தன் காரியத்தை நிறைவேற்ற நல்ல சந்தர்ப்பம் அமைந்துவிட்டது என்று எண்ணி பேச ஆரம்பித்தாள். அரசருக்கு யார் மீதும் கோபம் இல்லை. அவர் மனதிலுள்ள செய்தியை உன்னிடம் சொல்ல பயப்படுகிறார். அதனால் பேசாமலிருக்கிறார். அதனை நானே சொல்லுகிறேன். உன் தந்தை பல வருடங்களுக்கு முன்பு எனக்கு இரண்டு வரங்கள் தந்தார். அதனை இப்போது நான் கேட்டுப்பெற்றுக் கொண்டேன். அந்த இரண்டு வரத்தில் ஒரு வரத்தோடு நீ தொடர்பு கொண்டிருக்கின்றாய். அதனை சொல்லவே உன் தந்தை தயங்குறார் என்றாள் கைகேயி.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.