ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -6

தசரதர் அரண்மணையில் ராமனுடைய பட்டாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் கைகேயியின் அந்தபுரத்திற்குள் நுழைந்தார். அந்தபுரத்தில் இருக்கும் பணிப்பெண் தசரதரிடம் கைகேயி நகைகளை அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு பழைய உடை உடுத்திக்கொண்டு விகாரமாக தரையில் படுத்திருப்பாக கூறினாள். இதனைக்கேட்டு திடுக்கிட்ட தசரதர் விரைவாக அந்தப்புரத்திற்குள் நுழைந்து கைகேயியை தேடினார். கைகேயியின் அறையில் அவள் தலை கலைந்து அலங்கோலமாக தரையில் படுத்திருந்தாள் அழுக்குப்படிந்த ஆடைகளை அணிந்திருந்தாள். அவளது நகைகள் தரையில் சிதறிக்கிடந்ததை கண்ட தசரதர் அவளிடம் சென்று பேச ஆரம்பித்தார். என் அன்புக்குறியவளே எதைக்குறித்து நீ துன்பப்படுகிறாய். அரண்மணையில் யாராவது உன்னை ஏதேனும் சொல்லிவிட்டார்களா என்ன காரணமாக இருந்தாலும் என்னிடம் சொல் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். உனக்கென்ன ஆயிற்று உடல்நிலை ஏதும் சரியில்லையா மருத்துவரை வரவழைக்கவா எதுவாக இருந்தாலும் பயப்படாமல் சொல் இப்போதே அதனை நிறைவேற்றுகின்றேன் என்றார்.

கைகேயி எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். நோய் எதுவும் எனக்கு வரவில்லை. யாரும் என்னை எதுவும் சொல்லவுமில்லை. தீங்கு எதுவும் எனக்கு வரவில்லை. எனக்கு ஆசை ஒன்று உள்ளது. அதனை தாங்கள்தான் நிறைவேற்றி வைக்கவேண்டும். தங்களால் மட்டுமே அது முடியும் தாங்கள் நிறைவேற்றுவதாக உறுதி மொழி தந்தால் அதனை பற்றி சொல்கிறேன். இல்லை என்றால் இப்பேச்சை இப்போழுதே விட்டுவிடலாம் என்றாள்.

தசரதர் கைகேயியிடம் எனது மகன்களில் மூத்தவனான ராமன் எனக்கு எப்படி பிடித்தமானவனோ அது போல் எனது மனைவியரில் நீ என் அன்புக்கு பாத்திரமானவள் அது உனக்கும் நன்றாக தெரியும். ராமனை யாராலும் வெல்ல முடியாது. நால்வரில் தலைசிறந்தவன் அவன். எனது உயிராக இருப்பவன் அவன். என்னை விட்டு பிரிந்தால் என் உயிரும் உடனே சென்றுவிடும். அந்த ராமரின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன் உன்னுடைய ஆசைகளை நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்று கைகேயியிடம் உறுதியளித்தார் தசரதர்.

அரசரே உங்களுக்கு நினைவிருக்கின்றதா பல ஆண்டுகளுக்கு முன்பு அசுரர்களுடன் போர் புரிந்தபோது யுத்த களத்தில் தாங்கள் மயக்கமடைந்தீர்கள். அப்போது ரதத்தை வேகமாக வேறு இடத்திற்கு எடுத்துச்சென்று தங்களை தங்களை காப்பாற்றினேன். அப்போது நீங்கள் எனக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தீர்கள். அந்த வரத்தை பிறகு பெற்றுக்கொள்வதாக தங்களிடம் கூறியிருந்தேன். அதனை இப்போது நான் கேட்கின்றேன். நீங்கள் உடனே எனக்கு அதனை தாருங்கள் என்றாள் கைகேயி. அந்த வரம் உனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றாள் இப்போதே தருகிறேன் உனக்கு என்ன வேண்டுமோ கேட்டு பெற்றுக்கொள் என்று தசரதர் கைகேயியிடம் உறுதி அளித்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.