ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -27

வசிஷ்டரும் மந்திரிகளும் அரச சபையை முறைப்படி கூட்டினார்கள். பரதனுக்கு தூது அனுப்பி பரதனை அரசவைக்கு வரவழைத்தார்கள். நாதம் சங்குகள் முழங்க பரதனை வரவேற்றார்கள். நிறுத்துங்கள் அனைத்தையும் என்று பரதன் கத்தினான். சத்ருக்கனனை பார்த்து ராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிவிட்ட பிறகு என்னை ஏன் இவ்விதம் துன்புறுத்துகிறார்கள். தாய் செய்த சூழ்ச்சியால் இந்த நாடு நல்ல அரசரை இழந்து தவிக்கிறது இதில் எனக்கு இந்த வரவேற்பு தேவையா என்று சொல்லி துக்கப்பட்டான். வசிஷ்டர் பரதனிடம் நாடு அரசன் இல்லாமல் இருக்ககூடாது நாட்டிற்கு அது நல்லது இல்லை. ராமரும் லட்சுமணனும் தற்போது இல்லை. ஆகவே தாங்கள் அரச பட்டத்தை ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. நீங்கள் அரசராக முடிசூட்டிக்கொள்ளுங்கள் அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் தங்கள் தந்தை இருக்கும் போதே ராமருக்காக செய்து வைத்திருந்தார். இப்போது அந்த ஏற்பாட்டின் படி நீங்கள் பதவி ஏற்றுக்கொண்டு இந்த நாட்டை காப்பாற்றுங்கள் என்று கூறினார். சபையோர்கள் இதனை ஆமோதித்தார்கள். அனைத்தையும் கேட்ட பரதன் பட்டாபிஷேகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாக குண்டம் மற்றும் யாக பொருட்களை வலம் வந்து அனைவரையும் வணங்கினான்.

சபையில் கூடியிருந்த அனைவருக்கும் ஒரு செய்தி சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். நான் நல்ல முறையில் வளர்க்கப்பட்டவன். இக்ஷ்வாகு வம்சத்தின் குலத்தின் பண்பாட்டை அறிந்து கொண்டவன். இந்த இக்ஷ்வாகு குல வழக்கப்படி மூத்தவரே அரசனாக மூடிசூடிக் கொள்ளவேண்டும். மூத்த குமாரனுக்கு உரிமையான ராஜ்யத்தை என்னை எற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துகின்றீர்கள். குல வழக்கத்திற்கு மாறாக நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு உரிமையற்ற பதவியை நான் ஏற்க மாட்டேன். இந்த ராஜ்யத்தை ஏற்க தகுதியானவர் ராமர் ஒருவரே. இக்ஷ்வாகு குல மூதாதையர்களான தீலிபன் நகுஷன் போன்ற பலருக்கு சமமானவர் இவர். இக்ஷ்வாகு குலத்தின் மூத்தவரான ராமர் மற்றும் சீதை லட்சுமணன் இப்போது வனத்தில் இருக்கிறார்கள். இங்கிருந்தே வனத்திலிருக்கும் ராமரை வணங்குகின்றேன். ராமருக்கு வனத்திலேயே முடிசூட்டி அயோத்திக்கு அரசனாக்கி அரண்மனைக்குள் அழைத்துவரவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். இதற்கு வேண்டிய பரிவாரங்களை திரட்டி வனத்திற்குள் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யுங்கள். இது உங்களுடைய கடமை. இதுவே என்னுடைய முடிவு என்று தீர்மானமாக சொன்னான். பரதன் கூறியதை கேட்ட அனைவரும் தங்களையும் அறியாமல் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

சுமந்திரனை பார்த்த பரதன் ராமர் சென்ற வனத்திற்கு செல்லும் ஏற்பாட்டை உடனே செய்வாயாக என்று கட்டளையிட்டான். பரதனுடைய யோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டு அதற்கான பணிகளை விரைவாக செய்ய ஆரம்பித்தார்கள். வனப்பிரதேசத்தை நன்கு அறிந்தவர்கள். காட்டு வழியில் மிருகங்களை தாண்டி செல்ல பயிற்சி பெற்றவர்கள். கரையை கடக்க படகு செய்யத்தெரிந்தவர்கள். ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக யாகம் செய்ய அந்தணர்கள். அனைத்து பொருட்களையும் சுமந்து செல்ல பணியாளர்கள் என்று பெரும் கூட்டத்துடன் பரதன் தலைமையில் புறப்பட்டார்கள். மக்கள் அனைவரும் ராமரை பரதன் எப்படியாவது அழைத்து வந்துவிடுவார் என்று நம்பினார்கள். ராமன் இப்போதே அயோத்திக்கு வந்துவிட்டதை போல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.