உயர்ந்த தர்மம்

பூலோகத்தில் மரணத்துக்குப் பின் மேலுலகம் சென்ற கர்ணன் சூரிய லோகத்தில் உள்ள தன் தந்தை சூரியனின் இருப்பிடத்தை அடைந்தான். தந்தையே நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த தர்மத்தை காப்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தர்மத்திற்காக துரியோதனன் பக்கம் இருந்து போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கிருஷ்ணர் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டார் இதன் காரணம் எனக்கு புரியவில்லை என்று புலம்பினான். அதற்கு சூரிய பகவான் கர்ணா கிருஷ்ணரை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கிருஷ்ணர் உயர்ந்த தர்மமாக விளங்குபவன். உயர்ந்த தர்மம் செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மம் என்ற இரண்டு தர்மங்களில் எதை காப்பாற்ற வேண்டும் என்று வருகையில் உயர்ந்த தர்மத்தையே கிருஷ்ணன் காப்பாற்ற எண்ணுகிறான். நீ சாமானிய தர்மத்தை காப்பாற்ற எண்ணி உயர்ந்த தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய்.

தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தர்மம். அதற்காக இரண்யனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடக்கவில்லை. நரசிம்மர் என்ற உயர்ந்த தர்மத்தை பிரகலாதன் பிடித்துக்கொண்டான். பிரகலாதனை இறைவன் காப்பாற்றினான். தாயிற் சிறந்த கோவிலில்லை. தாய் சொல்லை கேட்பது தர்மம். ஆனால் பரதன் கைகேயியின் ஆசைக்கு உடன்படவில்லை. ராமர் என்னும் உயர்ந்த தர்மத்தை பற்றினான். விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி செய்யும் சாமானிய தர்மத்தை விட்டு உயர்ந்த தர்மமான ராமனை வந்து பற்றினான். கர்ணா சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும். ஆனால் உயர்ந்த தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில் உயர்ந்த தர்மத்தையே பிடித்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.

One thought on “உயர்ந்த தர்மம்

  1. உமாபதி Reply

    உண்மை தான் வாழ்க்கை நெடுந்தூர பயணம்.இது.இறைவனை பிடித்துக்கொண்டு பயணத்தை முடிக்கவேண்டும்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.