பாண்டவ சகோதரர்கள் அவர்களின் மனைவி திரௌபதியும் வன வாசத்தின் போது பத்ரிகாஷ்ரமத்திற்கு வந்தனர். ஐவரில் பலசாலியான பீமனும் திரௌபதியும் புனிதமான இடமாகக் கருதப்படும் பத்ரிகாஷ்ரம வனத்தில் நடமாடும் போது திரௌபதியின் பாதங்களுக்கு அருகில் விண்ணுலகப் பூவான சௌகந்திகா என்ற அழகிய மணம் மிக்க மலர் விழுந்தது. அதன் அழகு மற்றும் நறுமணத்தால் வசீகரிக்கப்பட்ட திரௌபதி அந்த மலரை இன்னும் அதிகமாக விரும்பினாள். இதனால் பீமன் மலரைத் தேடிப் புறப்பட்டார். அவனுக்கு உதவி செய்ய அனுமன் எண்ணினார். இமயமலைச் சாரலை அடைந்து அங்கு பீமன் வரும் வழியில் பாதையை அடைத்தவாறு படுத்துக் கிடந்தார். வேகமாக வந்து கொண்டிருந்த பீமன் வழியில் வாலை நீட்டியவாறு படுத்திருந்த அனுமனை தள்ளிப் படுக்குமாறு கூறினான். அனுமன் முடியாது என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. அனுமன் பீமனைப் பார்த்து நீயே என் வாலை இழுத்து அப்பாற் தள்ளிவிட்டுச் செல் என்றார். பீமன் அவரது வாலை அலட்சியமாக தள்ளினான். ஆனால் ஆஞ்சநேயருடைய வால் கல்போல் கனத்தது. பீமனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. பீமன் பிரமித்தான். தான் ஆணவத்தோடு செய்த செயலை நினைத்து தலைகுனிந்தான்.
பீமா நான் உன் அண்ணன் ஆஞ்சநேயன் என்று அனுமன் கூறியதும் பீமன் மகிழ்ந்து அவரை அணைத்தான். பின்னர் ஆஞ்சநேயர் இமயமலையில் உள்ள கந்தமாதன மலை வந்தடைந்தார்கள். அங்கு சௌகந்திகா மலர் நிறைந்த குளத்தைக் காட்டினார் அனுமன். அந்த தோட்டமும் குளமும் செல்வத்தின் அதிபதியான குபேரனுடையது. இதை மணிமான் மற்றும் க்ரோதவாஷா என்ற அரக்கர்கள் பாதுகாத்தனர். கடுமையான போருக்குப் பிறகு பீமன் காவலர்களை வெற்றி பெற்று சௌகந்திகா மலருடன் திரௌபதியிருக்கும் இடம் வந்து சேர்ந்தான்.
இடம்: சித்தேஸ்வரர் கோவில் ஹவேரி மாவட்டம் கர்நாடக மாநிலம். இன்னோரு சிற்பம் வைகுண்டநாதர் கோயில் திருக்குறுங்குடி.