பேதம்

ஒரு முறை கிருஷ்ண பகவான் உதங்க முனிவரிடம் என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். ஒன்றும் வேண்டாம் என்றார் முனிவர். கிருஷ்ணர் வற்புறுத்தினார். நான் சுற்றிக் கொண்டே இருப்பவன். சில சமயம் தாகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது என்றார் உதங்கர். கிருஷ்ணர் அதை ஒப்புக்கொண்டார். அதே சமயம் ஒரு நிபந்தனையும் விதித்தார். தாகம் எடுக்கும்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கிடைக்கும். ஆனால் நான் எப்படித் தண்ணீரை அனுப்பினாலும் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணர். உதங்கர் ஒப்புக் கொண்டார். நாட்கள் கடந்தன. உதங்கர் ஒரு முறை பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அவருக்குத் தாகம் எடுத்தது. பக்கத்தில் தண்ணீர் கிடைக்க வழி இல்லை. அப்போது கிருஷ்ணனை நினைத்தார்.

கிருஷ்ணரின் திருவுள்ளம் தொலை தூரத்தில் இருந்தாலும் உதங்கரின் எண்ணத்தை உணர்ந்த கிருஷ்ணர் உடனே தேவேந்திரனைத் தொடர்புகொண்டார். உதங்கருக்கு தேவாமிர்தம் தரும்படி சொன்னார். தேவேந்திரன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மனித ரூபத்தில் உள்ளவர்களுக்கு தேவாமிர்தம் தருவதில்லையே என்றான். கிருஷ்ணரின் வற்புறுத்தலின் பேரில் சம்மதித்தான். ஆனால் என் விருப்பப்படிதான் செல்வேன் என்றான். கிருஷ்ணர் ஒப்புக் கொண்டார். இந்திரன் ஒரு புலையரின் வடிவத்தில் உதங்கரிடம் சென்றான். அழுக்கான உடல் அதைவிட அழுக்கான ஒற்றை ஆடை பஞ்சடைந்த தாடி மீசை கையில் அழுக்குப் பிடித்த ஒரு தகரக் குவளை பக்கத்தில் சொறி பிடித்த நாய். இந்தக் கோலத்தில் சென்றான். உதங்கரிடம் சென்று தகரக் குவளையை நீட்டினான். அருவருப்படைந்த முனிவர் அவனை விரட்டி விட்டார். மாற்றுருவில் வந்த இந்திரன் வற்புறுத்தினான். முனிவர் கேட்கவில்லை. இந்திரன் சென்றுவிட்டான். உதங்கருக்கு மகா கோபம். கிருஷ்ணன் இப்படிச் செய்து விட்டானே என்று வருந்தினார். எப்படியோ சமாளித்துச் சற்றுத் தொலைவில் உள்ள ஊருக்குச் சென்று தாகத்தைத் தணித்துக் கொண்டார்.

கிருஷ்ணரை வேறொரு நாளில் மீண்டும் சந்தித்தார். உதங்கர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். புன் சிரிப்போடு நெருங்கிய கிருஷ்ணர் என்ன முனிவரே உங்களுக்காக இந்திரனிடம் தேவாமிர்தம் கொடுத்து அனுப்பினேன் நீங்கள் அவனை விரட்டிவிட்டீர்களே என்றார். உதங்கருக்குத் தன் தவறு புரிந்தது. உதாங்கர் பெரிய தவயோகி. ஆனால் ஏன் அவரால் கிருஷ்ணர் அனுப்பிய அமிர்தத்தைக் குடிக்க முடியவில்லை. விஸ்வரூபம் காட்டிய பரந்தாமனே அனுப்பிய நீர் என்றால் யோசிக்காமல் எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? அப்படிச் செய்ய விடாமல் உதங்கரைத் தடுத்தது எது? உயிர்களிடத்தில் உயர்வு தாழ்வு பேதம் பார்க்கும் அவரது குணம் காரணம். ஒருவர் எவ்வளவு தவம் செய்கிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சாஸ்திரங்களைப் படித்துக் கரைத்துக் குடிக்கிறார் என்பதும் முக்கியமல்ல. புறத் தோற்றம் முக்கியமல்ல தோற்றத்துக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை உணர்வதே முக்கியம். இதைத்தான் கிருஷ்ணர் உதங்கருக்கு உணர்த்தினார். உதங்கர் எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும் அவருக்கு மனிதர்களிடத்தில் பேதம் பாராட்டும் தன்மை இருந்தது. தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் தன்மை இருந்தது. அது இருக்கும்வரை ஒருவர் கடவுளை நெருங்க முடியாது. ஆகவே தனது மாய விளையாட்டால் இதனை உதாங்க முனிவருக்கு உணர்த்தி அவரது குணத்தை மாற்றினார் கிருஷ்ணர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.