ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -31

அதிகாலை விடிந்ததும் பரத்வாஜ முனிவரின் குடிலை நோக்கி சென்றான் பரதன். தனது நித்திய பூஜைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த பரத்வாஜ முனிவரை பார்த்து வணங்கினான் பரதன். இரவு அளித்த விருந்து உபசாரங்கள் திருப்தியாக இருந்தனவா என்று கேட்டார் பரத்வாஜ முனிவர். படை பரிவாரங்கள முதல் மந்திரிகள் வரை அனைவரும் தாங்கள் அளித்த விருந்தை சாப்பிட்டு சுகமாக தங்கினோம். அனைவரது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன. தேவலோக நந்தவனத்தில் தங்கியது போன்று உணர்ந்தோம். ராமரின் இருப்பிடம் செல்ல வழியும் நாங்கள் இங்கிருந்து செல்ல அனுமதியும் கேட்டு வந்திருக்கின்றேன் என்று வணங்கினான் பரதன்.

பரத்வாஜ முனிவர் பரதனுடன் வந்திருந்த மூன்று பெண்களை தனக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். சுமத்திரை கைகேயி என மூவரையும் ஒருவர் பின் ஒருவராக அறிமுகம் செய்து வைத்து ஆசிபெறச்செய்தான். முதலில் கௌசலையை வரச்செய்து துக்கப்பட்டு பட்டினியால் வாடிய முகத்துடன் நிற்பவர் பட்டத்து ராணி பெயர் கௌசலை இவரே ராமரை பெற்றெடுத்த புண்யவதி என்று அறிமுகம் செய்தான். கௌசலையின் வலது புறத்தில் இருப்பவர் சுமத்திரை இரண்டாவது பட்டத்து ராணி லட்சுமணன் சத்ருக்கணனை பெற்றடுத்த பாக்கியவதி. இடது புறத்தில் நிற்பவர் அரசி வடிவத்தில் இருக்கும் அரக்கி. எங்களுடைய துக்கங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பவள் என்று கைகேயியை அறிமுகம் செய்தான். மூவரும் பரத்வாஜ முனிவரை சுற்றி வந்து வணங்கி நின்றனர். கைகேயி கவலையுடன் முகத்தை மறைத்துக்கொண்டு வணங்கி நின்றாள். பரத்வாஜ முனிவர் பரதனிடம் உலகத்தின் நன்மைக்காகவே அனைத்தும் நடந்தது உனது தாயை அப்படி சொல்லாதே என்று கேட்டுக் கொண்டு ராமர் இருக்கும் இடத்திற்கு செல்ல வழியை கூற தொடங்கினார். இங்கிருந்து இரண்டரை யோசனை தூரத்தில் மந்தாகினி நதி ஓடுகின்றது. நதியை தாண்டினால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத காடு இருக்கின்றது. அதன் தெற்கு பகுதியில் சித்ரகூட மலை இருக்கின்றது. மலை அடிவாரத்தில் ஒரு குடில் அமைத்து மூவரும் வசித்து வருகின்றார்கள் என்று செல்வதற்கான வழிமுறைகளை பரதனிடம் சொல்லி வாழ்த்துக்களை கூறி விடை கொடுத்தார்.

பரதன் தன் படை பரிவாரங்களுடன் பரத்வாஜ முனிவர் காட்டிய பாதையில் சென்றான். தூரத்தில் சித்ரகூட மலையும் மலை அடிவாரத்தில் லேசான புகையும் தெரிந்தது. ராமர் இருக்கும் இடம் அது தான் என்று அனைவரும் உற்சாகமடைந்து விரைவாக செல்ல ஆரம்பித்தனர்.

சித்ரகூட மலையின் கம்பீரமும் வனத்தின் அழகும் பறவைகளின் சத்தமும் விலங்குகளின் விளையாட்டும் அவர்களின் உள்ளத்தை கவர்ந்தது. ஊரையும் உறவினர்களையும் பிரிந்த துக்கம் ஏதும் இல்லாமல் ராமர் சீதை லட்சுமணன் மூவரும் மிகவும் மகிழ்ச்சியாக காலம் கழித்துவந்தார்கள். பெரும் தூசி புகை கிளம்பியதையும் கண்டார் ராமர். லட்சுமணனிடம் தம்பி ஏதோ தூரத்தில் ஏதோ பெரும் சத்தம் தூசி படலத்துடன் கிளம்புகின்றது. விலங்குகள் அனைத்தும் நாலாபக்கமும் ஒடுகின்றது. அரச குலத்தவர்கள் யாரேனும் வேட்டையாட வந்திர்க்கின்றார்களா பார் என்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.