குரோதம்

பலராமனிடம் ஒரு அரக்கன் சண்டைக்கு வரும்படி சவால் விட்டான். பலராமனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார். பலராமன் தனது புஜத்தை உயர்த்தி அந்த அரக்கனின் தலையை நசுக்கப் போனார். அப்போது அந்த அரக்கன் பலராமனின் உருவத்தை விட இரண்டு மடங்கு வளர்ந்து நின்றான். பலராமனும் தனது வரத்தைப் பயன்படுத்தி, இரண்டு மடங்கு வளர்ந்து அரக்கனைத் தாக்கச் சென்றார். அரக்கனோ மேலும் வளர்ந்து பலராமன் மீது குன்றுகளைப் பிடுங்கி எறியத் தொடங்கினான். ஒருகட்டத்தில் பலராமன் தன்னால் அரக்கனை வெல்லமுடியாதென்று உணர்ந்து கொண்டான். சகோதரன் கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டான்.

அண்ணா இந்தப் பிரச்சினையை என்னிடம் விடுங்கள். நான் அந்த அரக்கனைப் பார்த்துக் கொள்கிறேன். என்று உறுதியளித்த கிருஷ்ணன் அரக்கன் இருக்குமிடத்திற்கு வந்தார். கிருஷ்ணனின் கையில் எந்த ஆயுதமும் இல்லை. இரண்டு கைகளையும் அகலவிரித்து அரக்கனைப் பார்த்து புன்னகை பூத்தார். அரக்கனின் உருவம் சாதாரண மனித வடிவை அடைந்தது. வா என் தோழனே என்று மீண்டும் கூப்பிட்டு அவன் அருகில் சென்றார். அரக்கனின் உருவம் சிறியதாகிக் கொண்டே சென்றது. அரக்கன் அருகில் சென்ற கிருஷ்ணன் அவனை அரவணைத்து தட்டிக்கொடுத்தார். இன்னும் சிறியவனாகிவிட்டான் அரக்கன். இதைப் பார்த்த பலராமனுக்கோ ஆச்சரியம். தம்பி எனக்கு இந்த விஷயம் புரியவேயில்லை. அவனை எப்படி இத்தனை சிறியனவனாக்கினாய்? என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர் இந்த அரக்கனின் பெயர் குரோதம். நீ கோபமாகும் போது அவனுக்கு அது உணவாகும். மற்றவனின் கோபத்தில் தன்னை வளர்த்துக் கொள்பவன் இவன். நீ உன்னுடைய கோபத்தைத் துறந்து விட்டு அன்பை அவனுக்கு ஊட்டினால் அவன் மிகவும் சிறியவனாகி விடுவான் என்று சொல்லி முடித்தார்.

வெறுப்பால் வெறுப்பை யாராலும் சமாதானப்படுத்தவே இயலாது. அன்பின் மூலமாக எல்லாவற்றையும் வெல்லமுடியும்.

OLYMPUS DIGITAL CAMERA

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.