ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 512

பல ஆலயங்களுக்கும் சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்தும் மோட்ச தீபம் ஏற்றியும் இப்பிறவியல் தர்ம சிந்தனையோடு வாழும் ஒரு குடும்பத்தில் ஒரே குழந்தையை கொடுத்து அது வாய் சரியாக சரளமாக பேச முடியாமல் அனுதினமும் அனைவரும் மனவேதனையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வழி காட்டுங்கள்:

இறைவனை இறைவனின் கருணையை கொண்டு இதுபோல் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று எமை நாடுகின்ற மாந்தர்களுக்கு யாம் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் இதுபோல் ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் என்பது போல பாவ வினைகளை அத்தனை எளிதாக ஒரு மனிதனால் நீக்கி கொள்ள முடியாது. அதனால்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். ஒரு பாவத்தை செய்வது எளிது. நீக்கிக் கொள்வது கடினம் இருந்தாலும் மனதை தளர விடாமல் தொடர்ந்து இறை வழிபாட்டில் இருந்தால் நல்ல பலன் ஏற்படும் என்பது உறுதி. ஒருவேளை நிறைய பரிகாரங்களை செய்து விட்டோம். நிறைய தர்மங்களை செய்து விட்டோம். எந்த பிரச்சனையும் தீரவில்லை என்றால் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் பரிகாரங்களை செய்த மனிதனுக்கு வேண்டுமானால் அதிகமாக செய்தது போல் தோன்றும். விதிக்கோ எமக்கோ தோன்றவில்லை என்பதுதான் உண்மை.

இதை வேறு விதமாக நாங்கள் அடிக்கடி கூறுவோம். ஒரு வங்கியிலே ஒருவன் பல லகரம் ருணம் (கடன்) பெறுகிறான். மாதாமாதம் ஒரு தொகையை அடைத்துக் கொண்டே வருகிறான். சில ஆண்டுகள் ஆகிறது. உழைத்த ஊதியத்தில் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டே வருகிறோம் இன்னுமா கடன் தீரவில்லை? என்று வங்கியின் சென்று பார்த்தால் அப்பனே நீ வாங்கியது இந்த அளவு. இதற்கு வாசி (வட்டி) விகிதம் இந்த அளவு. நீ இதுவரை செலுத்தியது இந்த அளவு. இன்னும் செலுத்த வேண்டியது இந்த அளவு என்று கூறுவார்கள். ஆனால் அடைத்த அவனுக்கு தான் வழியும் வேதனையும் தெரியும். நான் எந்த சுகத்தையும் காணாமல் ஊதியத்தையெல்லாம் கொண்டு கடனை அடைத்து வருகிறேன். இன்னுமா ருணம் (கடன்) தீரவில்லை என்று அவன் வேதனைப்படுவான். எனவே எமை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கூறுகிறோம். எத்தனையோ பரிகாரங்களை செய்து விட்டோம். இவையெல்லாம் வீண் வேலை. ஏமாற்று வேலை. பரிகாரம் செய்து எந்த பலனும் இல்லை என்று சோர்ந்து போகின்ற உள்ளங்கள் சோர்ந்து போகாமல் தொடர்ந்து இறை வழியில் வந்தால் வெற்றி கட்டாயம் கிட்டும். தெய்வம் தோன்றாததோ தெய்வம் அருளாததோ தெய்வத்தின் குற்றமல்ல. மனிதரிடம் தான் குற்றம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட பிரச்சினைகள் வேண்டாம் என்றாலும் கூட மனித வேதனை அதனை தாண்டி கேட்க வைக்கிறது. இருந்தாலும் அண்மையிலே இதழ் ஓதும் மூடனை அவனறியாமல் ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றோம். அந்த ஆலயம் பெருமாள் ஆலயம். பேசுகின்ற பெருமாள் என்று காஞ்சி மாநகரத்தை ஒட்டி இருக்கக் கூடிய ஒரு சிறிய ஆலயம். இதுபோன்று வார்த்தைகளில் தடுமாற்றம் பெற்றவர்கள் வாக்கு வராத குழந்தைகள் அந்த ஆலயத்திற்கு சென்று முடிந்த பொழுதெல்லாம் வழிபாடு செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. திருசீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் சென்று முறையாக அமைதியாக பிரார்த்தனை செய்து கொண்டு வந்தால் பலன் உண்டு. ஏற்கனவே இவ்வாறு குறைகள் உள்ள குழந்தைகளை கொண்ட அமைப்புக்கு முடிந்த உதவிகளை செய்தாலே நல்ல பலன் உண்டு. இந்த குற்றம் குறை எதனால் வருகிறது? என்றெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு மனிதன் ஒரு பிறவியிலே எந்த துன்பத்தை தீர்க்க முடியாமல் துன்பத்தில் ஆழ்கிறானோ அந்த துன்பத்தை அவன் பிறருக்கு செய்திருக்கிறான் என்பது பொருள். எனவே இந்த ஜென்மத்தில் கூடுமானவரை இது போன்ற பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்து கொண்டு மனதை தளரவிடாமல் இறை பிரார்த்தனை செய்து கொண்டு வந்தால் கட்டாயம் இறைவன் அருளால் நன்மைகள் நடக்கும். இறைவனை வேண்டி எமக்கு இதுவரை எந்த பலனும் இல்லை என்று எண்ணக் கூடியவர்கள் இரண்டு முடிவுகள் எடுக்கலாம். ஒன்று இறை மறுப்பு நிலைக்கு சென்று விடலாம் அல்லது மீண்டும் மனம் தளராமல் இறை வழியில் செல்லலாம். மரணம் தளராமல் பிரார்த்தனை செய்தால் நன்மை உண்டு நன்மை உண்டு நன்மை உண்டு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.