ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 675

கேள்வி: குழந்தை வளர்ப்பு பற்றி:

ஒரு குழந்தை நன்றாக வளர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். குழந்தைக்கு முன்னால் சதா சர்வகாலமும் நல்ல அறச் சொற்களை பேசிக்கொண்டே இருந்தால் குழந்தையும் அதை இயல்பாக கற்றுக் கொள்ளும். குழந்தைக்கு முன்னாள் சதா சர்வ காலமும் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தால் இறைவனின் நாமத்தை கூறிக் கொண்டிருந்தால் குழந்தையும் அதனை இயல்பாகக் கற்றுக் கொள்ளும். குழந்தையை வைத்துக் கொண்டு பொய் கூறுவது பெற்றோர்களே. எனவே பொய்யே கூறலாம் என்று அங்கீகாரம் கொடுப்பதே பெற்றோர்கள்தான். எத்தனைதான் இடர் வந்தாலும் உண்மையை கூறு என்பது போல பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு வேலை குடும்பத்தை விட்டு கல்வி கற்க வெளியே சென்றால் அங்கே சூழல் ஏற்புடையது இல்லை என்றால் என்ன செய்வது? என்று அப்படி செல்வதற்கு முன்னரே பலமான அடித்தளத்தை குழந்தை மனதிலே ஏற்படுத்தி விட வேண்டும். அந்த அளவிற்கு ஒரு குழந்தையின் தாயும் தந்தையும் ஒரு கடுமையான தவம் போல் குழந்தை வளர்ப்பை கவனிக்க வேண்டும். அதுபோல் குழந்தையை வைத்துக் கொண்டு நிறைய தர்ம காரியங்களை செய்யும் பொழுது அதனை இயல்பாக குழந்தை கற்றுக் கொள்ளும். இது ஒரு எளிமையான வழியாகும். இதோடு நல்விதமான இறை ஸ்லோகங்களை அன்றாடம் சொல்லி சொல்லி பழகுவதும் ஆலயம் செல்ல பழகுவதும் நல்ல நீதி நூல்களை வாசிக்க கற்றுக் கொடுப்பதுமாக இருந்தால் கட்டாயம் அந்த குழந்தை வழி தவறுவதற்கான விதி அதன் வாழ்க்கையில் குறுக்கிட்டாலும் இந்த அடிப்படை விஷயங்கள் அதன் வாழ்க்கையில் கவசம் போல் காத்து நிற்கும். ஆனால் இவைகள் மட்டும் போதாது. கடுமையான பித்ரு தோஷங்களும் கடுமையான முன் ஜென்ம பாவங்களும்தான் பருவ காலத்தில் ஒரு பருவ தடுமாற்றம் குழந்தைகள் வாழ்விலே ஏற்பட்டு அதனால் கல்வி தடைபடுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இதற்கு வழக்கம் போல் திலயாகம் வழிபாடு போன்றவற்றை செய்வதோடு கூடுமானவரை குறைந்தபட்ச தேவைகளோடு ஒரு குடும்பம் வாழ்ந்து எஞ்சியவற்றையெல்லாம் தக்க ஏழைகளுக்கு தர்மமாக கொடுத்துவிட்டால் கூடுமானவரை குழந்தைகள் குறித்த கவலைகள் இல்லாமல் வாழலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.