ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 385

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணுகின்ற நன்மைகளை எண்ணுகின்ற நல்ல ஆத்மாக்களுக்கு இறைவன் அருள் என்றும் தொடரும். இறைவனின் கருணையைக்கொண்டு நாங்கள் சில ஆத்மாக்களை கடைத்தேற்ற என்றென்றும் ஒரு முயற்சியில் இறங்கிக் கொண்டே இதுபோல் இறைவன் இறைவன் என்று கூறிக்கொண்டே அந்த இறைவனின் கருணையை அந்த ஆத்மாக்கள் உணரும் பொருட்டு உய்யும் பொருட்டு ஒரு கருவியாக இருந்து செயல் பட்டுக் கொண்டே இருக்க அதே இறைவன் எம்மை படைத்த காரணம் என்று எண்ணி யாம் என்றென்றும் எம்வழி சென்று கொண்டிருக்கிறோம். இதுபோல் பலவிதமான ஆர்வம் எம்மீது கொண்ட பல்வேறு மனிதர்களை யாங்கள் அறிவோம். அதுபோல் மெய்யாக மெய்யாக மெய்யாக எம் மீதும் எம் வழிமுறை மீதும் ஆர்வம் கொண்ட அனைத்து ஆத்மாக்களுக்கும் நாங்கள் நல்லாசிகளை என்றுமே வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.

ஆனாலும் மனிதர்கள் தாம் தாம் அறிந்த வகையிலே சிந்திப்பது யாதென்றால் தன்னை விட உயர் சக்தியின் துணை கிடைத்து விட்டால் தன்னை விட மேம்பட்ட சக்தியின் உதவி கிடைத்து விட்டால் குறிப்பாக இது போன்ற சித்தர்களின் அருளாசி கிடைத்து விட்டால் அல்லது சித்தர்களின் தொடர்பு இருந்து விட்டாலே எவ்வித துன்பங்களும் இல்லாமல் வாழ்க்கை சுகபோகமாக செல்ல வேண்டுமே ஆனால் அவ்வாறு செல்வதில்லையே? பிறகு எப்படி இது போன்ற விஷயங்களை நம்புவது? சித்தர்களை நம்பி ஓரளவு சித்தர்கள் வழியில் வருகின்ற மனிதர்களுக்கும் துன்பம் இருக்கிறது. இதனை நம்பாத மனிதர்களுக்கும் துன்பம் இருக்கிறது. என்ன பெரிய வேறுபாடு? என்றெல்லாம் மனிதர்கள் எண்ணுகின்ற எண்ண ஓட்டங்கள் அனைத்தையும் யாம் அறிவோம்.

பலமுறை யாங்கள் ஞானமார்க்கம் குறித்து விதவிதமான வார்த்தைகளை பயன்படுத்தி கூறினாலும் கூட அறியாமையும் மாயையும் பற்றும் பாசமும் மனிதனை ஒரு நிலைக்குமேல் சிந்திக்க விடுவதில்லை. இறைவனின் கருணையால் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டியது யாதென்றால் இதுபோல் ஆசையும் தீவிர ஆசையும் நிலையற்ற தன்மை மேல் வைக்கின்ற பற்றும் என்றுமே துன்பத்தை தந்து கொண்டுதான் இருக்கும். விழிப்புணர்வற்ற ஞானமற்ற ஒன்றின் மீது மனிதன் வைக்கின்ற விருப்பமோ ஆசையோ பற்றோ கட்டாயம் ஒரு நிலையில் அவனுக்கு இன்பத்தை தருவதுபோல் இருந்தாலும் மறுநிலையில் துன்பத்தைத் தரும். அதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு வனாந்தரம் செல்ல வேண்டுமா? குகையிலே அமர்ந்து சதா சர்வகாலம் தவம் செய்ய வேண்டுமா? என்றெல்லாம் மனிதர்கள் வினவலாம். அது ஒரு நிலை.

இந்த சமூக வாழ்க்கையை நன்றாக நேர்மையாக மேற்கொள்வதோடு எந்த பந்தபாசத்திலும் பற்றிலும் ஆழ்ந்து விடாமல் வாழப்பழகுவதே மெய் ஞானத்தை நோக்கி நன்றாக வலுவாக செல்வதற்குண்டான வழிமுறையாகும். ஒன்று தீவிரமான நேர்மையான சிந்தனையை வளர்த்துக் கொண்டு அந்த நேர்மையான சிந்தனைக்கு பங்கம் வராமல் வாழக் கற்றுக் கொண்டிட வேண்டும். இல்லையென்றால் பரிபூரண சரணாகதி பக்தியிலே தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அனைத்தும் இறைவனுக்குத் தெரியும். இறைவன் பார்த்துக்கொள்வார் என்று வாழ்ந்து விட வேண்டும். ஆனால் மனிதர்கள் சில சமயம் அப்படியும் சில சமயம் இப்படியும் வாழ்வதே பல்வேறு விதமான குழப்பங்களுக்கு வழி வகுக்கிறது. இப்படி வழி வகுத்திடாமல் மனிதன் தன்னையும் நிம்மதியாக வைத்துக் கொண்டு தன்னை சுற்றி உள்ளவர்களையும் நிம்மதியாக வாழும்படி செய்வதற்குண்டான செயலை செய்வதே வாழ்க்கையை எமது வழியில் வாழ்வதற்கு ஒப்பாகும். தன்னை சுற்றியுள்ள எல்லா வகை உயிர்களுக்கும் எந்த வகையிலும் தீங்கை செய்யாமல் எண்ணுகின்ற எண்ணத்தில் கூட பிறரை இழிவாக தரக் குறைவாக எண்ணாமல் பிறரை பற்றி ஒரு தவறான விமர்சனத்தை உருவாக்கி விடாமல் வாழக் கற்றுக்கொள்ள அதே இறைவழியில் செல்வதற்குண்டான சரியான வழியாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.