ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 140

கேள்வி: பேரளம் (திருவாரூர் மாவட்டம்) அருகே உள்ள பவானி அம்மன் கோவிலின் ஆற்றல் குறித்து:

நீ செல்லும் பொழுது மணி ஒலித்தது இறையின் அருளாசியைக் காட்டுகிறது. ஒரு மனிதனின் பூர்வீக பிரம்மஹத்தி கர்மாக்கள் போகக்கூடிய உன்னதமான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. அது மட்டுமல்லாது பார்வதி சுயவர யாகம் நடத்த ஏற்புடைய ஸ்தலம். பெண்களின் மாங்கல்ய தோஷம் நீங்குகின்ற ஸ்தலம். புத்திரப் பேறை அருளுகின்ற ஸ்தலம். உலகியல் ரீதியான பதிலப்பா இது. தத்துவார்த்தமான பதில் என்பது வேறு. ஏனென்றால் இங்கு சென்றால்தான் அதெல்லாம் கிட்டுமா? வேறு ஸ்தலங்களுக்கு சென்றால் கிட்டாதா? என்ற வேறோரு வினா எழும். இருந்தாலும் நீ கேட்டதால் இப்படி கூறினோம்.

இந்த நிலையிலே உலகியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து முன்னர் கூறினோம். அது போக இங்கு (பேரளம் பவானி அம்மன் ஆலயம்) ஸ்ரீ சக்ரம் வைத்து பூஜை செய்வதாலும் ஸ்ரீ சக்ர உபாசனையை இங்கு வைத்து கற்றுக்கொண்டு முறையாக துவங்கினாலும் அந்த அன்னையின் அருளால் மூலாதாரத்திலிருந்து முளைத்தெழுகின்ற ஜோதியை உணர்ந்து மேலேறி மேலேறி செல்லலாம். மெய்ஞான வாழ்விற்கு யோக மார்க்கத்திற்கு ஏற்படைய ஸ்தலம் இது.

கேள்வி: காட்டில் தனியாக செல்லும் பொழுது கொடிய மிருகங்களை வசியப்படுத்தும் மந்திரங்களை தங்களை போன்ற சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த மந்திரங்களை உபயோகப்படுத்தலாமா?

இறைவனின் கருணையால் இயம்புகிறோம் மிருகங்களை ஏனப்பா நீ வசியம் செய்யப்போகிறாய்? முற்காலத்தில் வேறு சூழல் இல்லை என்பதால் வனத்திற்கு (காட்டிற்கு) சென்று பல்வேறு மனிதர்கள் தவம் செய்ய நேரிட்டது. இப்பொழுதுதான் நல்ல வசதியான இல்லங்களை கட்டிக் கொள்ளக்கூடிய நிலை வந்துவிட்டதே? எனவே தாராளமாக இல்லத்தில் அமைதியாக நல்ல நிலையில் இருந்தே தவம் செய்யலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.