ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 134

கேள்வி: முருகனின் படை வீடுகளில் பழனியை சேர்க்காமல் ஆவினன்குடியை மட்டும் சேர்க்கிறார்களே அது பற்றி

அது மட்டுமா ஆவினன் குடி? ஆ என்றால் என்ன? பசு. பசு என்றால் என்ன? ஆத்மா. இந்த பசுவானது அந்த பதியான இறையோடு ஒன்று கலக்க வேண்டும். ஆ (ஆத்மா) தன் இனமான பதியோடு (இறையோடு) சேர வேண்டும். அப்படி சேரக்கூடிய ஸ்தலங்கள் எல்லாமே ஆவினன்குடிதான். அந்த நிலையிலே ஆ (ஆத்மா) ஆனது அப்படி பதியோடு (இறையோடு) சேர விடாமல் தடுப்பது எது? அதனை கட்டியிருப்பது எது? பாசம் என்கிற கயிறு. இந்த கயிற்றை அபாயமற்ற முறையிலே அவிழ்த்துவிட்டு பதி (இறை) தன்னோடு சேர்த்துக் கொள்ளக்கூடிய நிலைதான் மிக முக்கியமான முக்தி மோட்ச நிலையாகும். சாயுச்சம் சாரூபம் சாமீபம் சாலோகம் என்கிற நான்கு நிலைகள். இதனையும் தாண்டி பல்வேறு நிலைகள் இருக்கின்றன. ஆனால் எடுத்த எடுப்பிலேயே இதை மட்டும் மனிதன் புரிந்து கொண்டால் போதும். அதாவது தன்னுடைய ஆன்மா எனப்படும் ஆ அல்லது பசு இறைவனோடு இரண்டற கலக்கக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று.

அதற்காக அடிவாரத்தில் (திருஆவினன்குடி) உள்ளது மட்டும்தான் (ஆறு) படை வீட்டிலே சேர்க்க வேண்டும். அங்கே மலை மீதிலே இருக்கின்ற முருகனை சேர்க்கக்கூடாது என்றெல்லாம் நாங்கள் (சித்தர்கள்) வகுக்கவில்லையப்பா. படை என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வழி என்று இந்த இடத்திலே பொருள் கொள்ள வேண்டும். படை என்றால் ஏதோ மன்னர்கள் வைத்திருக்கும் படையை எடுத்துக் கொள்ளக்கூடாது. முக்திக்கு வழிகாட்டக்கூடிய ஸ்தலங்கள் அனைத்துமே படைவீடுகள்தான். அனைத்தையும் படைவீடு என்று கொள்ளலாம். குறிப்புக்காக சிலவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி பார்த்தால் சுவாமி மலையை பிற்காலத்தில்தான் மனிதர்கள் உண்டாக்கினார்கள் என்று வைத்துக் கொண்டு ஓதிமலையும் (கோயம்புத்தூர் மாவட்டம்) ஒரு படை வீடு என்று கொள்ளலாம். இதையெல்லாம் இப்போதுள்ள மனிதர்கள் ஏற்றுக் கொள்வார்களா? எனவே இதுபோன்ற தர்க்க வாதங்களில் எமக்கு (அகத்திய மாமுனிவர்) ஈடுபாடு இல்லை.

ஓதிமலை முருகனைப்பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

File source: http://commons.wikimedia.org/wiki/File:Palani_Hill.JPG

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.