ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 572

கேள்வி: ஐயனே மனிதர்களாகிய நாங்கள் எந்த விதத்தில் சிறந்தவர்களாக இருக்கிறோம்? தங்களுடைய எல்லையற்ற கருணையை கொண்டு மெய்சிலிர்த்து வியந்து நமஸ்கரிக்கிறோம். இறையும் தாங்களும் எங்களின் மேல் இத்தனை பரிவும் அன்பும் வைத்ததன் காரணம் என்ன?

இறைவன் அருளாலே இதற்கு வேறு விதமாக கூறினால் உனக்கு புரியும். ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்ற நீயோ அல்லது உன்னொத்து இருக்கக் கூடியவர்களோ அதைப் போல் அந்த நிறுவனம் தயாரிக்கின்ற தயாரிப்புகளையும் பிற போட்டி நிறுவனம் தயாரிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து அவ்வப்போது தன் நிறுவன தயாரிப்புதான் தலை சிறந்ததாக இருக்க வேண்டும் என்றெல்லாம் குழுக்களாகக் கூடி விவாதித்து முடிவெடுப்பதும் தாம் தம் தயாரிப்பு எப்பொழுதுமே தலைசிறந்ததாக இருக்க வேண்டும் என்பதை ஒரு நேர்மையான நிறுவனம் எப்பொழுதுமே விட்டுக் கொடுக்காமல் இருக்கும். தரத்திற்கு ஒரு முன்னுரிமை தரும். பொதுவாக விதிவிலக்குகளாக சிலர் இருக்கலாம். சிலர் குறுக்கு வழியில் அதனை மேம்படுத்தவோ அல்லது தகுதியே இல்லாத ஒரு பொருளை தயாரித்து விட்டு வெறும் விளம்பரங்கள் மூலமாக அதற்கு ஏகப்பட்ட தகுதி இருப்பதாக கூறி கூவி விற்பனை செய்கிற செய்கின்ற தந்திரங்களும் உண்டு. அவற்றை விட்டு விட்டு ஒரு நேர்மையான மனிதன் நடத்தும் ஒரு நேர்மையான நிறுவனம் பெரும்பாலான நேர்மையான மனிதர்களை கொண்ட நிறுவனம் பெரும்பாலும் நேர்மையான ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் நேர்மையாகவே பொருளை தயாரித்து சட்ட திட்டங்களை மதித்து தரமாக இருக்க வேண்டும் என்று விரும்பும். ஆனால் அதனையும் மீறி தயாரிப்பிலேயே குறை வரும் பொழுது அதனை நிவர்த்தி செய்ய நிறுவனம் போராடும். மீண்டும் அது போன்ற தவறுகள் வரக்கூடாது என்று.

இறைவனும் அப்படித்தானப்பா. தான் ஒவ்வொரு படைப்பும் தவறில்லாமல் குற்றமில்லாமல் பிழையில்லாமல் மிக சரியாக திருத்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் படைக்கிறார். அப்படித்தான் பெரும்பாலும் அவரின் ஆதி படைப்பு இருக்கிறது. ஆனாலும் கர்ம வினையும் மாயையும் ஒருவனை நல்லவனாக வாழ விடுவதில்லை. எனவே தான் பொருள்கள் அஃறினை. அதனை திருத்தமாக ஒரு மனிதனோ இயந்திரமோ செய்து விடும். ஆனால் உணர்வு பெற்ற உயிர்களும் குறிப்பாக மனிதர்களும் அப்படியல்ல. அவனை அவ்வப்போது நெறிப்படுத்த வேண்டி இருக்கிறது. நல்வழிப்படுத்த வேண்டி இருக்கிறது. அதற்குதான் இறைவன் மகான்கள் மூலமாக ஞானிகள் மூலமாக தத்துவங்களையும் ஞானக் கருத்துக்களையும் கூறி இது பாவம் இது புண்ணியம் இந்த வழி செல்லலாம் இந்த வழி செல்லக்கூடாது என்றெல்லாம் எப்பொழுதுமே அறிவுறுத்திக் கொண்டேயிருக்கிறார். இப்பணியை இறைவன் எம்போன்ற மகான்கள் மூலமாக எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார். இது ஒரு விளக்கம்.

இன்னொன்று எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ அப்படி வாழ ஒரு மனிதன் தனக்குத்தானே போராடி ஒரு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். நூற்றுக்கு நூறு சத்தியம் பேசுகின்ற தன்மையாலும் நூற்றுக்கு நூறு தர்மத்தை கடைபிடிக்கின்ற தன்மையாலும் தன்னை போராடி மாற்றிக் கொள்ள வேண்டும். பிறரோடு தொடர்பு கொள்கின்ற மனிதன் கூடுமானவரை யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வார்த்தையை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் எந்த ஒரு நியாயமான காரணத்தின் அடிப்படையில் கூட உறவாக இருக்கலாம் நட்பாக இருக்கலாம் பெற்ற பிள்ளையாக இருக்கலாம் உரிமை இருக்கிறது என்பதற்காக அடுத்தவரின் மனம் புண் படும்படியாக (அது நல்லதற்காக கூட இருக்கலாம்) அப்படி ஒருவன் நடந்து கொண்டு விட்டால் அது உடனடியாக யாருக்கும் எந்த ஒரு பலனும் தராவிட்டாலும் பின்னர் அதுவும் ஒரு பாவப் பதிவாக மாறி அவனுக்கு வேறு விதமான துன்பங்களையும் சேர்த்து அழைத்து வருகிறது. எனவே கோடான கோடி உயிர்களிலே பிறந்து இறந்து தன்னைத்தான் உணர முடியாமல் வெறும் ஜடம் போல் வாழ்ந்து மறையும் உயிர் கூட்டங்களிலே சற்றே மனிதனுக்கு ஒரு விதமான வரம் கொடுக்கப் பட்டிருக்கிறது. என்னதான் மனிதன் விதியின் கைப்பாவையாக இருந்தாலும் சற்றே சிந்திக்கும் ஆற்றலும் தரப்பட்டிருப்பதால் இது தக்கது இது தகாதது இவ்வழியில் செல்லலாம் இவ்வழியில் செல்லக்கூடாது என்று ஒரு மனிதனுக்கு புரியும் படியான ஓரளவு சிந்தனையாற்றால் தந்துதான் இறைவன் படைத்திருக்கிறார். ஆனாலும் மனிதன் என்ன எண்ணுகிறான்? உடனடியாக லாபம் தராத எதையும் செய்ய மனிதன் விரும்பவில்லை. நேர்மையாக நடப்பதும் உண்மையை பேசுவதும் எப்பொழுதுமே அறத்தை செய்வதுமாக இருந்தால் உடனடியாக எந்த பலனும் இல்லையே? எப்பொழுதுமே குறுக்கு வழியில் சென்றால் தான் வெற்றி உடனடியாக வருகிறது என்று எண்ணி மேலும் அவன் தவறையே செய்கிறான். தவறு தொடர்ந்து செய்ய செய்ய பாவமாக மாறுகிறது. பாவம் சேர சேர எல்லாவிதத்திலும் அது துன்பமாக மாறி தன்னுடைய பங்கை அளித்துக் கொண்டே இருக்கிறது. சுருக்கமாக கூறப்போனால் இறை ஒரு மனிதனிடம் எதிர்பார்ப்பது மகான்கள் ஒரு மனிதனிடம் எதிர்பார்ப்பது என்ன? தவறு செய்வது இயல்பு. ஏனென்றால் பலகீனம் கொண்ட மனிதன் தவறு செய்யாமல் இருக்க இயலாது. அதனால்தான் மனதை முன்னரே கூறியது போல் வைரம் போல் வைராக்கியம் பெற்ற மனமாக மாற்றிக் கொண்டால் ஒரு மனிதன் தவறு செய்யாமல் இயல்பாக நல்லவனாக வாழக்கூடிய ஒரு நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்ள முடியும். அப்படி செய்ய வேண்டும் என்பதையே ஒவ்வொரு மனிதனிடமும் இறையும் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.