ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 206

அகத்தியர் மாமுனிவர் பொது வாக்கு:

இன்று மதியம் தான் அன்னவனுக்கு ஒரு காதையை (கதை) நினைவூட்டினோம். அன்னவனுக்கு கூறிய கதையை இன்னவன் பொருட்டு அனைவருக்கும் நினைவூட்டுகிறோம். அது அனைவரும் அறிந்த கதைதான் என்றாலும் மீண்டும் நினைவூட்டுகிறோம்.

ஒருமுறை அசுர சக்திகள் (தீயவர்கள்) எல்லாம் சேர்ந்து மாநாடு போட்டன. அந்த காலத்திலே தீடீரென்று அதர்மங்கள் குறைந்து தர்மம் தலை தூக்கி விட்டது. இதை அசுர சக்திகளால் தாங்க முடியவில்லை. அசுர சக்திகளுக்கு எப்பொழுதும் கொண்டாட்டம் என்றால் இப்பொழுது பூமி இருப்பது போல் இருந்தால்தான் அசுர சக்திகளுக்கு (தீயவர்களுக்கு) கொண்டாட்டம். அங்ஙனம் இல்லாமல் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் திடுமென்று புவியெங்கும் தர்மம் தழைத் தோங்குகிறது. மனிதர்கள் அனைவரும் சாத்வீகமாக மாறிவிட்டார்கள். எல்லோரும் தானுண்டு தன் வேலையுண்டு என்று அவரவர் கடமையை செய்வதும் இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் வலிய சென்று உதவிகள் செய்வதும் ஒரு வேளை உதவி செய்தாலும் அதை பெறுகின்ற நிலையில் யாரும் இல்லாத நிலைமையும் உருவாக அசுர சக்திகளுக்கெல்லாம் (தீயவர்கள்) வருத்தம் வந்துவிட்டது. நம் போன்ற அசுர சக்திகளுக்கு புவியில் வேலை இல்லாமல் போய் விடுகிறது என்று எண்ணி கூட்டம் போட்டு என்ன செய்யலாம் என்று எண்ணும் பொழுது ஒரு அசுர சக்தி எழுந்து நான் சென்று மனிதர்களை குழப்புகிறேன் திசை மாற்றுகிறேன் அவர்களை தவறான வழிக்கு திருப்புகிறேன் என்று பேசியது. உன்னால் முடியுமா என்று கேட்டது தலைமை அசுர சக்தி என்னால் முடியும் என்றது சிறிய அசுர சக்தி.

அந்தப் பகுதியிலே அது எந்த நாட்டை சேர்ந்திருக்கிறதோ அதில் மிகுந்த நல்லவன் என்று கருதப்பட்ட ஒருவனை சென்று பார்த்தது. அந்த மனிதன் அன்றாடம் எழுவதும் இறைவனை வணங்குவதும் தன் கடமைகளை நேர்மையாக ஆற்றுவதும் பிறருக்கு உதவி செய்வதும் இன்னுரையாக பேசுவதுமாக வழக்கம் கொண்டவன். இந்த சிறிய அசுர சக்தி சாதுர்யமாக நுழைந்து அவனுக்குள் மனசாட்சியாக கலந்து அவனைக் கேட்க ஆரம்பித்தது. ஏ மூடனே இத்தனை ஆண்டு காலம் இறைவனை வணங்குகிறாயே? உனக்கு ஏதாவது கிடைத்ததா? எத்தனையோ தர்மங்கள் செய்தாயே? உனக்கு என்ன பலன் கிடைத்தது? இதையெல்லாம் சேர்த்து வைத்திருந்தால் நீ இன்றைக்கு மிகப் பெரிய செல்வந்தனாகி இருக்கலாமே? ஏன் இப்படி காலத்தை வீணாக்கிவிட்டாய் என்றெல்லாம் வினா எழுப்ப அவனும் குழப்பத்தில் நான் என்ன செய்வது என்று கேட்க இன்றிலிருந்து தர்மத்தை நிறுத்து. ஆலயம் செல்லாதே. இறைவனை வணங்காதே. அப்பொழுதுதான் நீ முன்னேறலாம் என்று அந்த அசுர சக்தி துர்போதனை செய்ய அவனும் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டான்.

அன்றிலிருந்து இறைவனை வணங்கவும் தவம் செய்யவும் ஜபங்கள் செய்யவும் பிராத்தனை செய்யவும் வேண்டாம் என்று முடிவெடுத்து தர்மம் செய்வதையும் நிறுத்திவிட்டான். இரண்டு தினங்கள் அவனை கவனித்து விட்டு அந்த சிறிய அசுர சக்தி உற்சாகத்தோடு மேலே சென்றது. சென்று தன் மற்ற இனங்களை பார்த்து நான் எப்படி ஒருவனை குழப்பி விட்டேன் தெரியுமா? இதே போல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனிதனை குழப்பினால் போதும். புவியில் மீண்டும் தீய சக்திகள் தலையெடுக்கும் என்று கூற அப்பொழுது தலைமை அசுர சக்தி பலமாக சிரித்து. நீ ஏதோ அவனை கெடுத்து விட்டதாக எண்ணியிருக்கிறாய். ஆனால் நீ செய்தது அவனுக்கு மிகுந்த நன்மையைத் தந்துவிட்டது. என்ன நடக்கிறது என்று கவனி என்று சொல்ல இந்த அசுர சக்திக்கு ஒன்றும் புரியவில்லை. அவன்தான் ஆலயம் செல்லவில்லையே? வேறென்ன வேண்டும் என்று கேட்க அவன் மனதை கவனி அதற்கு இறைவன் தந்த அருளாசியை கவனி என்று சொல்ல தன் அசுர பலத்தால் அவனை கவனிக்கும் பொழுதுதான் அனைவருக்கும் புரிய வருகிறது. அவன் ஆலயம் செல்லவில்லை. இறைவனை வணங்கவில்லை. பிராத்தனை செய்யவில்லை. தர்மம் செய்யவில்லை. ஆனால் அவன் எண்ண எண்ணுகிறான். ஐயகோ ஆலயம் செல்ல முடியவில்லையே? அடடா இன்று தர்மம் செய்யவில்லையே? அடடா இன்று மந்திரம் சொல்லவில்லையே? அடடா இன்று பூஜை செய்யவில்லையே? செய்திருக்கலாமே செய்திருக்கலாமே என்று. அவன் ஆலயம் சென்றிருந்தால் அவன் ஆலயத்தில் இருக்கும் அந்த பொழுதில் மட்டும்தான் இறைவனை எண்ணியிருப்பான். பூஜை செய்திருந்தால் அந்த நாழிகையில் மட்டும்தான் இறைவனை எண்ணியிருப்பான். ஆனால் அன்று முழுவதும் வேறு எந்த வேலை செய்தாலும் பூஜை செய்யவில்லையே பூஜை செய்யவில்லையே என்று சதா சர்வகாலம் 60 நாழிகையும் (ஒரு நாள்) இறைவனை எண்ணத் தொடங்கிவிட்டான். நீ ஏதோ அந்த மனிதனை தவறான வழியில் திசை திருப்புவதாக எண்ணி ஏதோ ஒரு சில நாழிகை பூஜை செய்த மனிதனை 60 நாழிகையும் (ஒரு நாள்) இறைவனை எண்ண வைத்து விட்டாயே என்று தலைமை அசுர சக்தி சிறிய அசுர சக்தியை பார்த்து கூறியது.

இந்த கதையை எதற்காக உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் நான் சிறப்பாக செய்யவில்லை. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்று எண்ணும் பொழுதே அந்த பூஜை பூர்த்தியடைந்து விடுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.