ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 309

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

பொதுவாக மனிதர்கள் தாங்கள் நல்லவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அப்படி எண்ணுவதை நாங்கள் குற்றம் ஒன்றும் கூறவில்லை. மனிதர்கள் என்ன எண்ணுகிறார்கள் நாங்கள் என்ன கொலைக் குற்றமா புரிந்து விட்டோம் உயிரையா எடுத்து விட்டோம் அல்லது பிறர் சொத்தை எல்லாம் அபகரித்து விட்டோமா அல்லது ஒரு ஊரையே வாழவிடாமல் செய்து விட்டோமா என்ன குற்றம் செய்து விட்டோம்?

குற்றம் என்பது மேற்கூறிய விஷயங்கள் மட்டுமல்ல ஒரு தனி மனிதனை வாழவும் விடாமல் அந்த வாழ்க்கையில் இருந்து வெளியே செல்லவும் விடாமல் நேரிடையாக பாதிக்காமல் மறைமுகமாக அந்த மனிதனை சுற்றி ஒரு வேலி போன்ற சூழலை ஏற்படுத்துவது கூட ஒரு வகையான பாவம் தான். ஒருவன் தான் சொல்வதை எல்லாம் மற்றவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக தன்னுடைய இயலாமையையும் வேதனையையும் வறுமையையும் கூட ஒரு வலிமையான மனிதனை பார்த்து அடிக்கடி பேசி அவனுக்கு வேதனையை உண்டாக்கினாலும் அதுவும் பாவம் தான். அதேசமயம் வறுமையின் காரணமாக இப்படி இவன் புலம்புகிறானே இவனை இப்படி புலம்ப விடலாமா? இவன் இப்படி புலம்பும் முன்னரே நம்முடைய பொருள் ஆதாரத்தை பயன்படுத்தி இவன் வறுமையை நீக்கி விட வேண்டாமா? என்று எண்ணி செயல்பட வேண்டும். அப்படி செயல்படா விட்டால் அவனுக்கும் அந்த பாவம் வரும். பாவம் இங்கே இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. ஒன்று தன்னுடைய வேதனையை வறுமையை இந்த செல்வந்தனிடம் அடிக்கடி கூறினால் இவன் ஏதாவது உதவி செய்வான் என்றோ அல்லது மன வேதனை குறையும் என்பதற்காகவோ அல்லது வேறு எந்த விதமான தீய எண்ணங்களோ இல்லாமலோ கூட கூறினாலும் இப்படி திரும்ப திரும்ப கூறுவதால் அந்த செல்வந்தன் மன உளைச்சலுக்கு ஆளாகி இவனை வர வேண்டாம் என்று கூறவும் இயலாமல் தவிர்க்கவும் இயலாமல் தவிக்கும் அந்த மனநிலையால் வரக்கூடிய பாவம் அந்த எளியவனுக்கு உண்டாகும். இன்னொன்று அப்படி அந்த எளியவனை தொடர்ந்து புலம்ப வைத்து அவன் தனக்கு பாவத்தை சேர்த்துக் கொள்ள வைத்த பாவம் அந்த செல்வந்தனுக்கு உண்டாகும். இப்படியெல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்தால் தான் வினை பயன்களின் தன்மை என்ன என்பது விளங்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.