ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 60

கேள்வி: சீரடி சாய்பாபாவை பற்றி?

இறைவனின் கருணையால் மனிதர்களை நல்வழியில் திசை திருப்புவதற்கு அவ்வப்பொழுது இறைவன் பல்வேறு ஞானிகளைப் படைக்கிறான். சில ஞானிகள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். பல ஞானிகள் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளாமலேயே மனித குலத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட ஞானிகளில் ஒருவன்தான் இன்னவள் விளம்பிய அன்னவன் (சீரடி சாய்பாபா). பல்வேறு விதமான இறை நிகழ்வை தன்னை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இறைவன் செய்ய தன்னுடைய புண்ணிய பலத்தை அதற்கு இறைவன் பயன்படுத்திக் கொண்டார் என்ற மனநிறைவோடு பல்வேறு மக்களுக்கு நல்லுபதேசங்களையும் கர்மவினை குறித்தும் அந்தந்த சமுதாய சூழலுக்கு ஏற்ப அவன் (சீரடி சாய்பாபா) இறைவன் அருளால் எடுத்து இயம்பியிருக்கிறான். இறைவன் விரும்பி பல்வேறு மகான்களை அனுப்புவது உண்டு. சில மகான்கள் தாமாகவே விரும்பி இது போன்ற பணிகளை தேர்ந்தெடுப்பதும் உண்டு. இந்த நிலையில் இறைவன் அனுப்பிய மகான்களில் ஒருவனே அவன் (சீரடி சாய்பாபா).

கேள்வி: தக்க குருவை அடைவதற்கான வழியை தெரிவிக்க வேண்டும்?

இறைவன் அருளால் தக்க குரு குறித்து பல்வேறு மனிதர்கள் எம்மிடம் வினவுகிறார்கள். சிலர் வந்து கேட்பார்கள் என் குரு யார்? எங்கிருக்கிறார்? எந்த குருவை நான் பின்பற்ற வேண்டும்? என்றெல்லாம் கூட கேட்பதுண்டு. நாங்கள் கூறுவது என்னவென்றால் ஒரு மனிதனுக்கு நல்ல விஷயங்களை போதிக்கின்ற எல்லோருமே குருமார்களே. ஒவ்வொரு அனுபவமும் கூட ஒரு மனிதன் நல்ல விஷயத்தைக் கற்றுக் கொள்ள உதவினால் அதுவும் குருதான். எனவே நாங்கள் போதுவாகக் கூறுவது என்னவென்றால் குருவைத் தேடி நல்ல சீடர்கள் அலையக்கூடாது. சீடனை தேடித்தான் குரு வரவேண்டு்ம். அந்த அளவிற்கு அந்த சிஷ்யன் நடந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் ஆழ்வார்களின் கதையை நினைவூட்டிக் கொண்டால் நன்றாகவே புரியும். அந்த புளிய மரத்தின் அடியிலே கிடந்த ஆழ்வானைத் தேடித்தான் குரு சென்றார் என்பதை நினைவூட்டிக் கொண்டால் மற்றவை தானாக விளங்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.