ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 471

கேள்வி: பொதுவாக குரு சுக்ர ஹோரைகளை சுபகாரியங்களுக்கு பயன்படுத்துவதும் சுபகாரியங்களுக்கு இராகு காலத்தை தவிர்ப்பதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் வெள்ளிக்கிழமை அன்று 10.30 லிருந்து 11.00 மணி வரை குரு ஹோரையும் இராகு காலமும் சேர்ந்து வருகிறது இதை எப்படி கையாள்வது?

இறைவனின் கருணையைக் கொண்டு ஞானப் பார்வையிலே ஞானத்தை முழுமையாக அடைந்து விட்ட மனிதனுக்கோ அல்லது அடைய முயற்சி செய்யும் மனிதனுக்கோ இதுபோன்ற பேதங்கள் தேவையில்லை. இருந்தாலும் இவைகள் எதற்காக கூறப்பட்டுள்ளன? சாலை விதிகள் போலதான் இதுவும். ஒரு சாலையிலே எப்படி வேண்டுமானாலும் வாகனத்தை ஓட்டினால் வாகனம் ஓடும். ஆனால் இப்படித்தான் ஓட்ட வேண்டும் இன்ன திசையில்தான் வரவேண்டும் இன்ன திசையில்தான் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் ஒரு சில சட்ட திட்டங்கள் கூறப்படுகின்றன. எதற்காக? என்பது மனிதர்கள் அறிந்ததே. அதைப் போலத்தான் மனிதர்கள் சுயநலமாய் இந்த உலக வாழ்வை வாழ்வதற்கும் தன் சொந்த பிரச்சினைகளுக்காகவும் துன்பங்களுக்காகவும் பிராயச்சித்தம் செய்வதற்கும் சில சுப ஹோரைகளையும் சுப தினங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் எல்லாம் இறை செயல். நான் எனக்கென்று எதையும் செய்யப் போவதில்லை வாழப் போவதில்லை. எப்பொழுதுமே எனக்கு பொது தொண்டுதான் தியாகம்தான் தர்மம்தான் பிறர் நலன்தான் குறிக்கோள் என்று வாழக் கூடிய மனிதர்களுக்கு இதுபோன்ற ஹோரையோ இராகு காலமோ எமகண்டமோ பார்க்க தேவையில்லை.

இருந்தாலும் சராசரி மனிதர்கள் வாழ்க்கையிலே இன்ப துன்பங்களால் ஆட்படும் பொழுது சில குறிப்பிட்ட கால கட்டத்தில் சில விஷயங்களை செய்தால் நல்லது. செய்யாமல் தவிர்த்தாலும் நல்லது என்பதற்காக கூறப்பட்டுள்ளது. இந்த வகையில் பார்க்கும் பொழுது செய்யக் கூடிய செயல் பொது நலமான செயலா? சுயநலமான செயலா? என்று பார்த்து ஹோரையையும் எமகண்டம் இராகு காலத்தையும் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் இராகு காலம் எமகண்டம் சுப ஹோரை ஆகியவற்றை பார்க்கும் பொழுது அவசரமான தீவிர சிகிச்சையை ஒரு மனிதனுக்கு செய்ய வேண்டும். இராகு காலம் முடியட்டும் சிகிச்சை செய்கிறேன் என்று மருத்துவன் கூறினால் ஏற்றுக்கொள்வாயா? அல்லது எமகண்டம் முடியட்டும் என்றால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? பசியினால் மயங்கி விழுகிறேன். ஏதாவது அன்னம் கொடுங்கள் என்று ஒருவன் அங்காடியில் கேட்கிறான். சற்று பொறு அப்பா. எமகண்டம் முடியப் போகிறது. இன்னும் ஐந்து மணித்துளிகள் கழித்து உனக்கு உணவு தருகிறேன் என்றால் யாராவது கேட்பார்களா? எனவே மனோ நிலையை பொறுத்தும் சூழலை பொறுத்தும் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதன்முதலாக வீட்டிற்கு ஒரு விலையுயர்ந்த பொருள் வாங்கப் போகிறார்கள் அல்லது பெண் பார்க்கப் போகிறார்கள் அல்லது ஒரு சுப நிகழ்வு நிகழப்போகிறது என்றால் அதற்கு ஓரளவு துல்லியமாக நாளை பார்க்கலாம். மனிதர்கள் அதில்கூட அறியாமையால் தவறுதான் செய்கிறார்கள். கிடைத்த பஞ்சாங்கமோ தவறான பஞ்சாங்கம். அதைவிட சூரிய உதயத்தை மனதில் வைத்துதான் இராகு காலம் எமகண்டம் பார்க்க வேண்டும். சூரிய உதயம் என்றாலே 6 மணி என்று இவர்கள் வைத்துக் கொண்டு அதற்கேற்பத்தான் இராகு காலத்தையும் எமகண்டத்தையும் பார்க்கிறார்கள். இதேபோல் மதியோன் வாரம் பார்த்தால் இராகு காலமும் சுப ஹோரையும் குறுக்கிடும். எனவே இதுபோன்ற தருணங்களிலே சுப ஹோரையா இராகு காலமா என்று பார்ப்பதை விட செய்கின்ற செயல் சுய நலமா அல்லது பொது நலமா என்று பார்த்து முடிவெடுப்பதே சிறப்பிலும் சிறப்பாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.