ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 211

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 211

கேள்வி: தியானம் செய்யும் பொழுது மனம் அலை பாய்கிறது:

இது இயல்புதான். உன்னுடைய எண்ண ஓட்டத்தைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிரு. எண்ணங்களை அடக்க முயன்றால் அது திமிறிக் கொண்டு எழும். எண்ணங்களை கவனிக்கப் பழகு. தானாகவே அனைத்தும் உன்னை விட்டு மெல்ல மெல்ல சென்று விடும். அதற்குத் தான் யாங்கள் (சித்தர்கள்) எடுத்த எடுப்பிலேயே தியானம் குறித்து உபதேசம் செய்யாமல் ஸ்தல யாத்திரை தர்மம் தொண்டு என்று கூறி அதன் மூலம் பாவங்களைக் குறைத்து பாவங்கள் குறைந்த நிலையில் ஒருவன் தியானத்தை செய்ய அமர்ந்தால் அந்த தியானம் சற்று சற்று எளிதாக வசப்படும். பொதுவாக மனிதர்கள் அறிந்திட வேண்டும். நாங்கள் இப்படி கூறுவதால் மனித விஞ்ஞானம் இதனை ஏற்றுக் கொள்ளாது என்றாலும் கூட ஓரளவு புற விஞ்ஞான அறிவும் அக மெய்ஞான அறிவும் ஓரளவு புரிந்த மனிதன் புரிந்து கொள்வான். ஏனைய மனிதர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வது ஏற்புடையது. அதாவது எத்தனையோ விஷய ஞானங்களை ஆய்வு செய்து இறைவன் அருளால் புறத்தே தன்னை வளர்த்துக் கொண்ட மனித குலம் இந்த பிரபஞ்சம் அனைத்துமே சில விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறது. பிரபஞ்சம் மட்டுமல்லாது இந்த அண்ட சராசரங்களும் பல்வேறு விதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது.

இந்த விதிகளை மீறி மனிதன் எதையாவது செய்ய வேண்டுமென்றால் அதற்கும் அந்த விதிமுறைகளுக்கும் ஒரு தொடர்பும் ஒரு எதிர்சக்தியும் இருக்க வேண்டும். அந்த வகையிலே ஒரு வாகனம் சீராக ஓட வேண்டும் என்றால் அந்த வாகனம் எல்லா வகையிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். வாயு உருளைகள் வடிவம் மிகவும் சிறப்பான முறையிலும் நல்ல முறையிலும் இருக்க வேண்டும். வேகமாக செல்வதற்கென்று வாகனம் வடிவமைக்கப்பட்டால் அதற்குரிய வாயு உருளை அகமில்லாமல் இருக்க வேண்டும். உதாரணமாக அதிக வேகம் என்றால் வாகனத்தின் எடை குறைவாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த வாகனம் எந்தளவிற்கு விரைவாக செல்கிறதோ அந்தளவிற்கு செல்லுகின்ற பாதையிலே வாயு உருளையால் உராய்வுத் தன்மை ஏற்படும். இந்த உராய்வு எதிர்விசையை ஏற்படுத்தி வேகத்தை மட்டுப்படுத்தும். அந்த உராய்வு தன்மையை குறைப்பதற்கென்று அந்த வாயு உருளைகள் வடிவமைக்கப் பட்டிருந்தால் அது எதிர் விளைவை குறைவாகத் தரும். அப்படி குறைக்கப்பட வேண்டுமென்றால் அதன் ஒட்டு மொத்த பாகத்திலே ஓடுகின்ற தளத்திலே மிக மிக மிக குறைவான பகுதியே அந்த வாயு உருளை படவேண்டும். அந்த அளவிற்கு அது குறைவாக படும் பொழுதுதான் குறைவான எதிர் விளைவுகள் ஏற்படும். வேகம் மட்டுப்படாது. இதையெல்லாம் தாண்டி ஓடுகின்ற ஓடுதளம் என்பது சமச்சீராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பொது விதி. அதே சமயம் வேகம் எந்தளவிற்கு முக்கியமோ அந்த வாகனத்தை சட்டென்று நிறுத்த வேண்டுமென்ற நிலை வந்தால் அந்த சமச்சீரான தளம் அதற்கு பாதகத்தை தந்துவிடும். அதற்காக சற்றே சீரற்ற ஓடுதளத்தை உருவாக்கினால் அது ஓரளவு பாதுகாப்பைத் தந்தாலும் வேகத்தை மட்டுப்படுத்தும்.

இப்படி எல்லாவகையிலும் பார்த்து அதிவிரைவாக ஓடுவதற்கென்று ஒருவகையான ஓடுதளமும் அதற்கேற்ற வாகனமும் அதில் செல்ல வேண்டும். மற்றபடி சராசரி மாந்தர்கள் (மனிதர்கள்) பயணம் செல்கின்ற அந்த பயண ஓடுதளமானது அதிக விரைவை ஏற்க வல்லாத நிலையில்தான் இருக்க வேண்டும். ஒரு வாகனம் அதன் உச்சகட்டத்தில் செல்கிறதென்றால் என்ன பொருள்? வாகனம் மட்டும் செல்லவில்லை. வாகனத்தில் செல்கின்ற மனிதர்களும் அதே வேகத்தில்தான் செல்கிறார்கள் என்று பொருள். சட்டென்று வாகனத்தை ஏதாவது ஒரு காரணத்திற்காக நிறுத்தவேண்டிய ஒரு தருணம் வந்துவிட்டால் வாகனத்தின் உள்ளே இருக்கின்ற தடையமைப்பு உள்ளேயிருக்கின்ற மனிதர்களை தடை செய்வதில்லை என்பதால்தான் சிறு விபத்துகளும் பெருவிபத்துகளும் ஏற்படுகின்றன. எப்படிப் பார்த்தாலும் தெளிவற்ற மனிதர்கள் குழப்பமான மனிதர்கள் மூடத்தனமான மனிதர்கள் இருக்கின்ற இந்த பரந்த பகுதியிலே அதிக வேகம் என்பது ஏற்புடையதல்ல. எதிர் நோக்கின்ற வேகத்தை விடவே 60 கல் வேகம் என்பதே அதிகம்தான். இப்படி குறைவாக செல்வதால் என்ன லாபம் வந்துவிடும்? என்றெல்லாம் பாராமல் பாதுகாப்பை மட்டும் கருதி வாகனத்தை இயக்குவதே எம்வழி (அகத்திய மாமுனிவர்) வரும் சேய்களுக்கு (பிள்ளைகளுக்கு) ஏற்புடையதாகும். ஏனென்றால் வாகனத்தின் பாகங்கள் பல்வேறு விதமான முறையிலே ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மனிதர்கள் எண்ணிக் கொண்டாலும் கூட அதிக அனலும் அதிக உராய்வும் கண்பார்வைக்குத் தெரியாத வெடிப்புகளையெல்லாம் ஏற்படுத்தி திடீர் அழுத்தத்தால் அவைகள் விலகவும் சுயகட்டுப்பாட்டை இழக்கவும் ஏற்புடையதான ஒரு சூழலில்தான் இருக்கிறது. இறைவன் கருணையும் ஒருவனின் ஜாதகப்பலனும் நன்றாக இருக்கும் வரையில் நலமே நடக்கும். எப்பொழுது ஒருவனுக்கு பாவ வினை குறுக்கே வரும்? என்பதை மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. எனவே இறைவனை வணங்கி அமைதியான முறையில் சாந்தமான முறையில் குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்குதலே பொதுவாக அனைவருக்கும் ஏற்புடையதாகும். ஆனால் மனித மனம் இதை எந்தளவு ஏற்கும் எந்தளவு ஏற்காது என்பது எமக்குத் தெரியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.