ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 538

அகத்திய மாமுனிவர் பொது வாக்கு

இறைவன் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இது போல் நலம் எண்ணி நலம் உறைத்து நலம் செய்ய நலமே நிகழும். ஒவ்வொரு மாந்தரின் வாழ்விலும் என்பதை யாம் எமை நாடும் மாந்தர்களுக்கு எப்பொழுதுமே கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் கூட பல்வேறு மாந்தர்கள் அறியாமையாலும் புரிதல் இன்மையாலும் என்ன எண்ணுகிறார்கள்? என்றால் எமக்கு தத்துவார்த்தம் வேண்டாம். எமக்கு போதனைகள் வேண்டாம். நாங்கள் வந்து அமர்ந்த உடனேயே இதுபோல் வாழ்வியல் பிரச்சனைகள் இருக்கிறது அது இத்தனை நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்று சித்தர்கள் கூற வேண்டும். அதேபோல் பிரச்சினைகள் தீர வேண்டும். அப்படி தீர்ந்தால் ஓலையை நம்புவோம். சித்தர்களை நம்புவோம் என்று. ஆனாலும் கூட விதியானது அத்தனை எளிதாக மாறிவிடாது. ஒருவேளை மனிதர்கள் ஆசைப்படுவது போல நாங்கள் இறையிடம் மன்றாடி சட்டென்று ஒருவரின் கடுமையான விதியை மாற்றினால் ஏற்கனவே பழக்கப்பட்ட துன்பம் சென்று விதி புதியதாக ஒரு துன்பத்தை தரும். அப்போது அந்த மனிதன் எண்ணுவான் இந்த துன்பத்திற்கு அந்த துன்பமே பாதகம் இல்லை என்று. எனவே தான் படிப்படியாக மனிதன் துன்பத்திலிருந்து விடுதலை பெற்று இன்பமும் மகிழ்ச்சியும் சாந்தியும் நிலவக்கூடிய ஒரு வாழ்வை பெற வேண்டும். அதற்கு மனிதர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான் இந்த ஜீவ அருள் ஓலையில் நாம் அடிக்கடி இயம்பிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஞான நிலையில் இருந்து கூற சிஷ்யர்கள் எழுதிய ஓலையின் தன்மை வேறு. யாமே இறைவனருளால் நேரடியாக ஓதுகின்ற இந்த ஓலையின் தன்மை வேறு என்பதை மனிதர்கள் புரிந்து கொண்டு விட்டால் குழப்பங்களும் விரக்தியும் தளர்வும் ஏற்படாது. எனவே மீண்டும் மீண்டும் கூறுகிறோம். மனதை தளரவிடாமல் தினமும் செய்கின்ற வழிபாடு. சோர்ந்து போகாமல் வாழ்கின்ற தன்மை. திடமான மனம் தர்மங்கள் சத்தியம் இவற்றை கடை பிடித்தால் கட்டாயம் நன்மைகள் ஒவ்வொரு மனிதனையும் தொடரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.