ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 100

அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பொது வாக்கு:

இறைவன் அருளால் எப்பொழுது மனித குலம் தாங்கொண்ணா துயரை நுகர்கிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த சமுதாயத்தில் தர்மம் குறைந்திருக்கிறது என்று. தர்மம் குறைவதுகூட பாதகமில்லை. பாவத்தில் கொடிய பாவம் எது தெரியுமா? ஒருவன் தர்மம் செய்யலாம் அல்லது செய்யாமல் போகலாம். அது அவனின் கர்மவினையைப் பொறுத்தது. அது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் நல்லவர்களை இனம் காண முடியாமல் நல்லவர்களையெல்லாம் ஏளனம் செய்து ஒதுக்கிவிட்டு தீயவர்களையும் ஆளுமை கொண்டு கர்வத்தோடு இருக்கக்கூடிய மனிதர்களை வெறும் பதவிக்காகவும் தனத்திற்காகவும் அவன் பின்னால் ஒரு கூட்டம் சென்று கொண்டேயிருக்கிறது. ஒருவன் நான் பாவம் செய்யவில்லை என்று மார் தட்டலாம். ஆனால் பாவம் செய்து கொண்டிருக்கும் மனிதனை அண்டிப் பிழைக்கிறானே? அதுதான் மாபெரும் பாவம். இப்பேற்ப்பட்ட சமுதாயக் கூட்டம் இருக்கும் வரையில் எங்கெல்லாம் நல்லவை நடக்கிறதோ அதை புரிந்து கொள்ளாத அறியாமை இருள் இருக்கும் வரையிலும் எங்கெல்லாம் நல்ல விஷயங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் குதர்க்கவாதம் பேசி விமர்சனம் செய்துவிட்டு வெறும் வெற்று ஆர்பாட்டத்திற்கும் வெற்று வேடிக்கைக்கும் கூட்டத்திற்கும் செவி கொடுத்து பார்வை கொடுத்து அதை நோக்கி ஒரு மனித சமுதாயம் செல்லும் வரையிலும் நதி வரண்டுதான் இருக்கும். வருணன் பொய்த்துதான் போவான். முதலில் ஒருவன் தான் நல்லது செய்வது என்பது அடுத்த நிலை. ஏற்கனவே அவனை சுற்றி நடக்கக்கூடிய உண்மையான நல்ல விஷயங்களையெல்லாம் செவி கொடுத்து கேட்க வேண்டும். கண் கொண்டு பார்க்க வேண்டும். எதைப் பார்த்தாலும் அதில் குற்றம் கண்டு கொண்டே இருப்பதைவிட இது தக்கது இது தகாதது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயங்களை முதலில் கேட்க பழக வேண்டும். கேட்டு கேட்டு கேட்டு கேட்டு கேட்டு மனதிலே பதிய வைத்து வைத்து வைத்து பிறகு அதனையே விவாதம் செய்து செய்து செய்து செய்து பிறகு அதனை நடைமுறைப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். நல்லதை எண்ணி நல்லதை உரைத்து நல்லதை செய்ய அப்படி செய்யக்கூடிய மனிதர்கள் எல்லாம் சத்சங்கமாக கூட கூட வருணன் பொழிவான். நதி கரைபுரண்டோடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.