ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 703

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் மனமது உணர்வுகளால் ஆளப்பட்டு உணர்வுகளால் உந்தப்பட்டு அந்த உணர்வுகளுக்கு தீர்வினை தேடி அந்த வடிகால் கிட்டினால்தான் அந்த உணர்வு உடலின் எந்த உறுப்புகளோடு தொடர்பு கொண்டிருக்கிறதோ அதனால் ஏற்படக்கூடிய உளைச்சல் குறைகிறது என்பது மனித நிலையாக இருந்து வருகிறது. இதுபோல் நிலையிலே புற சமூக சூழல் இந்த சமூகத்திலே இதையிதை செய்யலாம் இதையிதை செய்யக்கூடாது என்று மனிதனாக வகுத்துக் கொண்ட வாழ்க்கை நெறி. இவைகள் இருந்தும் இதனையெல்லாம் தாண்டிதான் மனிதனை உணர்வுகள் ஆட்டிப் படைக்கின்றன. இதுபோல் நிலையிலே எந்த விதமான உணர்வுகளும் இல்லாத நிலையில் ஒரு உயிர் இயங்குமா? என்றால் அப்படி இயங்க சாத்தியம் இல்லை.

உயிர் எனப்படுவது ஒரு இயக்க நிலையை குறிக்கும் நிகழ்வாகும். இதுபோல் கல்லிற்கும் உயிர் உண்டு. மண்ணிற்கும் உயிர் உண்டு என்றால் அதை மனிதனால் சட்டென்று புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது. தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது. எனவே அதன் மாற்றங்களை மனிதனால் உணர முடிகிறது. வெளிப்படையாக மாற்றங்களை உணர முடியாத இயக்கங்கள் எதுவும் இல்லாத ஒன்றை மனிதன் உயிரற்றவை என்றுதான் குறித்து வைத்திருக்கிறான். ஆனால் மனித கண்களுக்கோ மனித புலன்களுக்கோ புரியாத தெரியாத உணர இயலாத எத்தனையோ இயக்கங்கள் இந்த உலகில் இந்த உலகை தாண்டிய நிலையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு மனிதன் கேட்பான் சதாசர்வகாலம் ஆலயம் சென்று இறைவனை வணங்குவதால் என்ன பலன்? என்று. இன்னொரு மனிதன் கேட்பான் சதாசர்வகாலம் கண்ணை மூடி அமருவதால் உலகிற்கு அதனால் என்ன பலன் கிட்டப் போகிறது? என்று. மனிதன் என்ற பிறவி எடுத்தவன் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். செயல் ஒன்றை குறித்த அறிவும் அந்த அறிவு விவேகம் சார்ந்ததாக இருக்கும் நிலையில் சரியான ஒரு குறிக்கோள். அதை நோக்கி மனதை தளரவிடாத ஒரு உறுதித் தன்மை பிற புற சூழல்களால் பாதிக்கப்படாத மனோ நிலை. பிறகு கடுமையான உழைப்பு. வெற்றி வந்து விடாமல் போய்விடுமா என்ன? என்பது பல மனிதர்களின் வாதம். இப்படி எதையும் செய்யாமல் எல்லாம் வினை என்றும் எல்லாம் விதிப்பயன் என்றும் காலம் கழிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று எண்ணுகின்ற சாராரும் உண்டு. எல்லோரும் கூறுவது உண்மையா? அல்லது உண்மையின் ஒரு பகுதியை ஒவ்வொரு மனிதனும் கூறுகிறானா?

எப்பொழுதுமே மனிதர்களின் கூற்றில் முழுக்க உண்மை இல்லாவிட்டாலும் உண்மையின் எதாவது ஒரு பகுதியை கூறிக்கொண்டுதான் இருப்பான். ஒரு விலங்கை பார்க்கும் பொழுது அந்த விலங்கு மான் என்று வைத்துக் கொண்டால் மான் என்றால் கொம்பு இருக்கும் என்பதை மட்டும் ஒரு மனிதன் கூறினால் மானிடம் கொம்பு இருக்கிறது என்பது உண்மை. ஆனால் கொம்பு இருப்பதெல்லாம் மான் என்று ஏற்றுக்கொள்ள இயலாது. இன்னொருவன் கூறுவான். மான் என்றால் வேகமாக ஓடக் கூடியது என்று. மான் வேகமாக ஓடக்கூடிய திறன் பெற்றிருக்கலாம். ஆனால் வேகமாக ஓடக் கூடிய அனைத்தும் மான் என்றால் அது இல்லை. எனவே இவன் கூறுவது உண்மைதான். ஆனால் அந்த உண்மை முழுமையான மானை வெளிப்படுத்துவதாக இல்லை. இன்னொருவன் கூறுவான். மான்கள் உடலெங்கும் புள்ளிகள் இருக்கும் என்று. இவைகள் உண்மையா? என்றால் புள்ளிகள் இருந்தால் மான். ஆனால் புள்ளிகள் இல்லாமலும் மான்கள் இருக்கலாம். அல்லது புள்ளிகள் இருந்தால் அது மான் மட்டும்தான் என்று கூற இயலாது. எனவே கூறுவது உண்மை என்றாலும் ஒரு உண்மையின் சாராம்சம் முழுக்க முழுக்க ஒரு பொருளை முழுமையாக உணர்த்தும் விதமாக இருந்தால்தான் அது உண்மை முழுமையாக வெளிப்பட்ட ஒரு தன்மையாகும்.

இதுபோல் நிலையிலே ஒரு மனிதன் பண் பட வேண்டும். தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். வெறும் உணர்வுகளுக்கு மட்டும் ஆட்பட்டு அப்படியாகவே வாழ்ந்துவிட்டு போகக் கூடாது. இந்த உடல் என்பது வினைப் பயனால் ஆத்மாவிற்கு தரப்பட்டு இருக்கிறது. எத்தனைதான் யோகாசனம் செய்து சரி விகித உணவை ஏற்றாலும் ஒரு நாள் இந்த உடலை விட்டு இந்த ஆத்மா வெளியே செல்ல வேண்டியதுதான். அதற்காக தேகத்தை பராமரிக்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இருக்கும் வரையில் எப்படி ஒரு மனிதன் விலை உயர்ந்த துணியை பராமரிக்கிறானோ தன் தேகத்தை மறைப்பதற்கு துணி அது போனால் இன்னொரு துணியை வாங்கிக் கொள்ளலாம். அதனால் பாதகம் ஒன்றுமில்லை அவன் அறிந்தாலும் முந்தைய துணியை அவன் விடுவதாக இல்லை. இப்படி மாற்றக் கூடிய மாற்று கிட்டக் கூடிய நிலையில் இருக்கும் துணியை பராமரிக்கிறான். வாகனங்களை பராமரிக்கிறான். ஆனால் ஆத்மா குடியிருக்கும் வீடான அல்லது ஆத்மா சூடியிருக்கும் ஆடையான உடலை பராமரிக்க தவறுகிறான். எனவே உடலை பராமரித்து நன்றாக பேணி அதனோடு நாங்கள் கூறுகின்ற அற வழியும் இறை வழியும் பின்னிப் பிணைந்து செயல்பட நல்ல பலன் உண்டு.

இதுபோல் முன்னர் கூறிய விளக்கங்களை அசைபோட்டுப் பார்த்தால் உண்மையின் சாராம்சம் ஒவ்வொரு மனிதனுக்கும் தெள்ளத் தெளிவாக மிகவும் நுட்பமாக புரியும். இதுபோல் நிலையிலே ஒரு மனிதன் அமைதியாக இருப்பதா? ஆடி ஓடுவதா? அல்லது உலகியல் வெற்றியை தேடுவதா? அல்லது எல்லாம் இறை செயல் என்று இருப்பதா? அல்லது ஆலயம் தோறும் செல்வதா? அல்லது தர்மம் செய்வதா? என்று கேட்டால் முன்னர் கூறிய மான் உதாரணத்தைதான் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறது. எல்லா உண்மைகளையும் தொகுத்து பார்த்துதான் ஒன்றாக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த வகையிலே மனிதன் தன் மனதை பக்குவப்படுத்ததான் இறை வழியை நாடுகிறான். அல்லது ஒரு குருவை நாடுகிறான். மனம் பக்குவப்படாத நிலையில் அல்லது பக்குவப்பட மறுக்கின்ற நிலையிலே ஒரு மனிதன் செய்கின்ற செயல் வெறும் புற செயலாகத்தான் இருக்கும். ஆனால் இது நாள் வரை பூஜைகள் செய்தும் பலனில்லையே? தியானம் செய்தும் மனம் ஒடுங்கவில்லையே? என்பதற்காக அதனை விட்டு விட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. இன்னும் சரியாக ஒரு வாகனத்தை ஓட்ட கற்றுக் கொள்கின்ற மனிதன் எடுத்த எடுப்பிலேயே அதனை சிறப்பாக ஓட்டுவதில்லை. சரியாக இயக்க தெரியவில்லை என்று யாரும் அதனை விட்டு ஒதுங்குவதில்லை. பலமுறை வீழ்ந்தாலும் எழுந்து எழுந்து அந்த சிறு வாகனத்தை ஓட்ட ஒரு மனிதன் பயிற்சி பெறுகிறான்.

அதைப்போலதான். மனம் ஆங்காங்கே அலை பாயும் தன்மை கொண்டது இயல்பாக. அதனை ஒரு நிலைப்படுத்து என்று நாங்கள் கூறுவது வெறும் இறை வழி சார்ந்த ஆன்மீக விஷயங்களுக்கு மட்டுமல்ல. உலகியல் ரீதியாக ஒரு மனிதன் சாதனை செய்ய விரும்புகிறான். உலகியல் ரீதியான வெற்றியை விரும்புகிறான். அதற்கும் சேர்த்துதான். எதுவும் கையில் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று வேண்டும் என்று மனம் விரும்புகிறது. அந்த விருப்பம் ஒரு ஞானியின் பார்வையில் தேவையற்றதாக இருக்கலாம். ஆனாலும் கூட ஒரு மனிதனுக்கு மனோ வலிமை இருந்தால் அந்த விருப்பத்தை அவன் தன் மனோ வலிமையாலேயே சாதித்துக் கொள்ளலாம். அந்தளவிற்கு மனோ வலிமை பெற்ற மனிதன் எதையும் விரும்ப மாட்டான் என்பது வேறு விஷயம். இதுபோல் நிலையிலே மனதை திடமாக உறுதியாக பதட்டமின்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஆதி நிலை பயிற்சியாளர்கள் புறத்தே இருந்து வரும் நிகழ்வுகளுக்கு ஏற்பவும் கான பிம்பப் பேழையிலே சலன காட்சிகளை பார்க்கும்பொழுது அந்த காட்சிகளால் மனம் சிதிலமடைந்து பதட்டம் அடைந்து அச்சத்தில் ஆழ்ந்து சோர்ந்து போகும் நிலையிலே இருக்கும் என்பதால் கூடுமானவரை மனதிற்கு நல்ல ஆக்கத்தை தரும் செய்திகளை கேட்கவும் அதுபோல் பிம்பங்களை பார்க்கவும் மட்டும் மனிதன் ஆதி நிலையில் முயற்சி எடுக்க வேண்டும். மனதை பாதிக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் பார்ப்பது என்பது ஏற்புடையது அல்ல. ஆனாலும் கூட அப்படி பாதிப்பே இல்லாத ஒரு நிலையில் ஒரு மனிதன் வாழ வேண்டும் என்பதையும் நாங்கள் முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை.

எல்லாவகையான ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்ற நிலையில் ஒரு மனிதன் திடமாக உயர்வாக பண்பாடோடு வாழ நாகரீகமாக வாழ எல்லா பெருந்தன்மை குணங்களோடும் வாழ இச்சைகளை கட்டுப்படுத்தி நெறிப்படுத்தி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது உணவிற்கே வழியில்லாதவன் விரதம் இருக்கிறான் என்பதல்ல. உண்ணா விரதத்தை கூறுகிறோம். உணவை உண்ணக் கூடிய வாய்ப்புகள் இருந்தும் உடல் நலம் கருதி அல்லது பக்தி நெறிக்காகவாவது ஒருவன் உண்ணா விரதம் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு ஊமை மௌன விரதம் இருப்பதுபோல் ஆகிவிடும். எனவே இதுபோல் கருத்துக்களை மனதிலே அசைபோட்டு வாழ இறையருள் எல்லோருக்கும் கிட்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.