ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 96
கேள்வி: பெண்கள் மூத்தோனை (விநாயகரை) எவ்வாறு வழிபடுவது?
பெண்களுக்கு மூத்தோன் என்றால் முதலில் கணவன் என்று நாங்கள் கூறுவோம். கணவனை வணங்கு என்று நாங்கள் பெண்களைப் பார்த்து கூற இயலுமா இக்காலத்திலே? இன்னொரு வகையில் பார்த்தால் உடன் பிறந்தவர்களில் யார் மூத்தவர்களோ அவர்களை வணங்க வேண்டும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க விநாயகப்பெருமானை வணங்குகின்ற தன்மையைத்தான் நீ வினாவாகக் கேட்டிருக்கிறாய். இறைவனை வணங்குவதற்கென்று விதிமுறைகள் என்று வேதங்களிலும் ஆகமங்களிலும் எத்தனையோ கூறப்பட்டிருந்தாலும் கூட எம்மிடம் வருகின்ற சேய்களுக்கு(பிள்ளைகளுக்கு) நாங்கள் அதனையெல்லாம் வலியுறுத்துவதில்லையப்பா. ஏனென்றால் விதிமுறைகளைக் கூறினால் பிறகு விதிமுறைகள்தான் அங்கே இருக்குமே தவிர பக்தி இல்லாமல் போய் விடும். விதிமுறைகள் புரிவதற்காக வகுக்கப்பட்டவை. அதனையே பிடித்துக் கொண்டு மனிதன் தொங்குவதுதான் வேதனையிலும் வேதனை.
காசியிலே இருந்தால் முக்தி என்றால் இவன் காசியில் இறந்தால் முக்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். காசி என்றால் ஆக்ஞா சக்கரம். அங்கே நினைவை நிறுத்தி நிறுத்தி நிறுத்தி சதாசர்வகாலம் அந்த காசியிலே (புருவ மத்தி) இருந்தால் அது முக்திக்கு வழிவகுக்கும். பஞ்சமா பாதகங்களை செய்துவிட்டு காசியிலே இறந்தால் முக்தியா கிட்டும்? தனி நரகமே ஏற்படுத்த வேண்டுமல்லவா? தேர் இழுக்க வேண்டுமென்றால் குண்டலினி எனப்படும் தேரினை எண்ணங்கள் என்னும் கயிற்றால் வைராக்யம் எனும் வலிமையால் மேலே ஏற்றி ஏற்றி மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிப்பூரகம் என்று ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து சஹஸ்ர ஆதாரத்திற்கு கொண்டு வந்து அதனை நிலைநிறுத்த வேண்டும். அந்தத் தேர் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடும். இந்தத் தேர் மேலே வந்துவிட்டால் கீழே இறங்குவது கடினம். ஆனால் வைராக்யம் பெற்ற ஞானிகள் மேலும் கீழும் இந்த குண்டலினி தேரையும் இழுப்பார்கள். இதற்கு உவமானமாக ஒரு தேரை வைத்து அதனுள் சுவாமியை வைத்து இழுப்பது என்று சுட்டிக்காட்டினால் அந்தத் தேர் இழுப்பதையே பெருமையாக வைத்துக் கொண்டு இதிலும் கலவரத்தை வளர்த்துக் கொண்டு வாழ்கின்ற மனித கூட்டத்திற்கு எதனைக் கூறுவது? எனவே விதிமுறைகளை விட்டுவிட்டு ஆத்மார்த்தமாக ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எப்படியெல்லாம் இறைவனை வணங்கத் தோன்றுகிறதோ பாசத்திற்குரிய தந்தையை அன்பிற்குரிய மனைவியை பாசத்திற்குரிய அன்னையை குழந்தையை எப்படியெல்லாம் பார்க்கிறார்களோ அப்படி பார்த்து அப்படி பேசிக்கொண்டால் அதுதான் உண்மையான வழிபாடு.