ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 472

கேள்வி: மக்களின் துன்பங்கள் தீர்க்க தாங்கள் எப்பொழுது தனி நபர் வாக்கை அருள்வீர்கள்?

இறைவனின் கருணையைக்கொண்டு யாங்கள் கூறவருவது என்னவென்றால் ஒருவன் உயர்ந்தவன் ஒருவன் தர்மம் செய்கிறான் ஒருவன் நல்லவனாக இருக்கிறான் அவனுக்கு வாக்கு சொல்ல வேண்டும். ஒருவன் தாழ்ந்தவன் தீய எண்ணங்கள் கொண்டிருக்கிறான் அவனுக்கு வாக்கு சொல்லக்கூடாது என்றெல்லாம் இல்லை. பொதுவாகக் கூறுவோம் நல்ல எண்ணங்களும் தர்ம எண்ணங்களும் சாத்வீகமான சிந்தனையும் உள்ள மனிதர்களுக்கும் நாங்கள் வாக்கினை கூறுவோம் என்று. ஆனால் உண்மையில் எல்லோருக்கும் இறைவன் அருளால் யாங்கள் வாக்கை கூறிக்கொண்டுதான் இருக்கிறோம். இதுபோல் நிலையிலே இறைவனின் அருளாணையைப் பெற்று எப்பொழுது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நாங்கள் வாக்கு கூற தயாராகத்தான் இருக்கிறோம். எனவே மனிதர்கள் எங்கள் வாக்கினை புரிந்துகொண்டு அந்த வழியில் வருவது அவர்களுக்கு பல நேரங்களில் கடுமையாக கடினமாக இருப்பதால் மௌனத்தைக் காட்டுகிறோம். இன்னொன்று எங்கள் வாக்கை கேட்டுவிட்டாலோ ஓலைசுவடியிலே எங்களோடு தொடர்பு வந்து விட்டாலோ வாழ்க்கையில் ஒரு துன்பம் கூட வரக்கூடாது ஒரு கஷ்டம் கூட வரக்கூடாது என்று மனிதன் எண்ணுகிறான். நியாயம்தான் ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் எத்தனை பூஜைகள் தர்மங்கள் செய்தேன் எத்தனை ஸ்தலங்கள் சென்றேன் எனக்கு ஏன் இப்படியொரு துன்பம் வந்துவிட்டது? என்றெல்லாம் கேட்கிறார்கள். எம்மிடம் வந்தால் துன்பம் போவதற்கு பதிலாக துன்பங்கள் அதிகமாகும். சம்மதம் என்றால் எமது வாக்கை யார் வேண்டுமானாலும் வந்து கேட்கலாம்.

அடுத்து இன்னொரு மிகப்பெரிய பிரச்சினை மனிதனிடம் இருக்கிறது. தன்னுடைய மகனோ மகளோ காந்தர்வம் (விரும்பியவர்களை திருமணம்) கொண்டுவிட்டால் ஏதோ கொலைபாதகம் செய்து விட்டது போல் எண்ணுகிறார்கள். அதை எப்படியாவது தடுக்க வேண்டும் குருநாதா என்று மௌனமாக எம்மிடம் பிரார்த்தனை வைக்கிறார்கள். எம் வழியில் வருபவர்கள் எதை செய்யக்கூடாது? என்று நாங்கள் எண்ணுகிறோமோ அதை செய்வதற்கு எங்களையே துணைக்கு அழைக்கிறார்கள். என் பெண் விரும்புகின்ற வாழ்க்கை அமையக் கூடாது. நாங்கள் பார்க்கின்ற மாப்பிளையைதான் அவள் திருமணம் செய்யவேண்டும். இதற்கு நீங்கள் வழி காட்டக்கூடாதா குருநாதா என்று எம்மிடமே வந்து கேட்கிறார்கள். யாங்கள் கூறுவதோ அல்லது அவன் கூறுவதோ இருக்கட்டும். முதலில் அந்தப் பெண்ணின் விதி எப்படியோ அப்படிதான் நடக்கும் என்பதை யாரும் புரிந்து கொள்வதேயில்லை.

அடுத்ததாக காந்தர்வம் என்பது நல்லதாக இருந்துவிட்டால் பாதகமில்லை குருநாதா. தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டால் எங்களுக்குதானே மனக்கஷ்டம ? அதனால்தானே தடுக்கிறோம்? என்றெல்லாம் கேட்கலாம். அப்படித்தான் நடக்க வேண்டும் என்ற விதியிருந்தால் அதை யாரும் மாற்ற முடியாது. அது ஒருபுறமிருக்கட்டும். முதலில் இப்படியொரு அனாச்சாரம் நடக்கக் கூடாது என விரும்பக் கூடியவர்கள் சிறு வயது முதலே அதிக பூஜைகளையும் முன்னோர்களின் சாபங்களை நீக்கும் பூஜைகளையும் தர்ம காரியங்களையும் செய்து கொண்டே வந்தால் பருவ தடுமாற்றம் என்பது ஆணுக்கோ பெண்ணுக்கோ இராது. ஆனால் இதை குற்றமாக பார்ப்பது மனிதனின் இயல்பாகிவிட்டது. இதை இறைவனோ சித்தர்களோ குற்றமாக பார்ப்பதில்லை. தன்னை சமுதாயத்தை கெடுக்காத தன் குடும்பத்தை நியாயமான வழியிலே பாதிக்காத எதனையும் நாங்கள் குற்றமென்று எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பெண்ணும் ஆணும் வளர்ந்த பிறகு நல்லது கெட்டதை போதிப்பதுதான் ஈன்றோரின் கடமையே தவிர வாழ்க்கையை இப்படித்தான் நீ வாழ வேண்டும் இந்த வேலைக்குதான் செல்ல வேண்டும் இந்த வியாபாரம்தான் செய்ய வேண்டும் இந்த பெண்ணைதான் நீ திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எவனொருவன் கூறுகிறானோ அவன் எமது வழியில் வருபவன் அல்ல.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.