50. சுந்தரப் பேரன் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சுந்தரப் பேரன் செய்த படலம் ஐம்பதாவது படலமாகும்.

வங்கிசேகரப் பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது விக்கிரம சோழன் என்ற சோழ அரசன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவனுக்கு உதவியாக வடநாட்டு அரசர்கள் பலர் பாண்டிய நாட்டினை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருந்தனர். சோழனின் படைகள் பாண்டிய நாட்டிற்குள் புகுந்து நீர் நிலைகளை உடைத்தும் பசுக்களைக் கவர்ந்தும் வியாபாரிகளிடம் கொள்ளை அடித்தும் தாக்குதல் நடத்தினர். இச்செய்தியை வீரர்கள் மூலம் அறிந்த வங்கிசேகர பாண்டியன் பாண்டிய நாட்டினை சொக்கநாதரை தவிர யாராலும் காப்பாற்ற இயலாது என்று எண்ணி அவரைச் சரணடைந்தான். திருகோவிலுள் நுழைந்த பாண்டியன் எம் தந்தையே விக்கிரம சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான். என்னிடமோ சோழனை எதிர்க்கும் அளவுக்கு படை வலிமை இல்லை. ஆதலால் தாங்கள்தான் பாண்டிய நாட்டினையும் என்னையும் காத்தருள வேண்டும் என்று வேண்டினான். அப்போது இறைவனார் வானத்தினின்றும் பாண்டியனே நீ முதலில் சென்று சோழனை எதிர்கொள். யாம் பின்னால் வந்து வெற்றியை உமதாக்குவோம் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

சொக்கநாதரின் திருவாக்கினைக் கேட்டதும் வங்கிசேகர பாண்டியன் தெளிவடைந்து சோழனை எதிர்க்கப் புறப்பட்டான். போர்க் களத்தில் பாண்டிய மற்றும் சோழப் படைகள் ஒன்றை ஒன்று எதிர்த்து போரிட்டன. அப்போது சோழனுக்கு உதவியாக வடநாட்டுப் படைகள் போர்க்களத்தை அடைந்தன. இதனால் பாண்டியனின் படைகள் சோழனின் படைகளை எதிர்க்க முடியாமல் சிதறி ஓடின. சோழன் போரில் வெற்றி பெற்றோம் என்று எண்ணி சங்கை முழங்கினான். அப்போது சொக்கநாதர் வேடுவ வடிவம் கொண்டு பாண்டியனின் சேனைக்கு தலைவராக சுந்தரேசன் என்ற திருப்பெயருடன் போர்க் களத்திற்கு வந்தார். தம்முடைய கணைகளை சோழனின் படைகளின் மீது எய்தார். அவர் விட்ட ஒவ்வொரு அம்பும் சோழப்படையில் பதினாறாயிரம் வீரர்களைக் கொன்றது. சோழப்படைகளின் எண்ணிக்கை குவியல் குவியலாக குறைந்தது. இதனைக் கண்ட சோழன் ஐயமுற்று இந்த அம்புகளுக்கு இவ்வளவு வலிமை எப்படி வந்தது என்று எண்ணி அம்பினை ஆராய்ந்த போது அம்பில் சுந்தரேசன் என்ற பெயர் பொறித்திருந்ததைக் கண்டான். வேடுவ வடிவில் உள்ளவர் சொக்கநாதர் பாண்டியனுக்கு துணையாக வந்துள்ளார் என்பதை உணர்ந்தான் விக்கிரம சோழன். மற்ற அரசர்களை அழைத்து இந்த அம்பை எறிந்தவர் சொக்கநாதர். அவர் போர் முனைக்கு வந்திருக்கிறார். தெய்வ பலத்தை மனித சக்தியால் வெல்ல முடியாது. அதனால் யுத்தத்தை நிறுத்தி ஊருக்குப் போகலாம் என்றான். சிலர் சம்மதித்தனர். சிலர் சண்டையிட்டு மாண்டார்கள். சோழன் போர்க் களத்தை விட்டு வெளியேறி சோழநாட்டிற்கு பயணமானான்.

வங்கிசேகர பாண்டியன் போரில் வெற்றி பெற்றான். இறைவனார் பாண்டியனின் வெற்றிப் புன்னகையைப் பார்த்து அருள்நகை புரிந்து மறைந்தருளினார். வெற்றி பெற்ற திருக்கோயிலுக்குச் சென்று வங்கிசேகர பாண்டியன் இரத்தினத்தால் செய்த வில்லும் சுந்தரர் என்று பேர் எழுதிய அம்பும் செய்து சாற்றி வணங்கினான். பின்னர் நீதிதவறாமல் ஆட்சி செய்து வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எவ்வளவு பெரிய வலிமையானவனாக எதிரி இருந்தாலும் தன்னை சரணடைந்தவர்களை இறைவன் காப்பாற்றுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.