சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கடல் சுவற வேல் விட்ட படலம் நூலின் பதிமூன்றாவது படலமாகும்.
சுந்தரபாண்டியனார் தடாதகை ஆகியோரின் குமரனான முருக்கடவுளை ஒத்த உக்கிரபாண்டியன் மதுரையை சிறப்புற ஆட்சி செய்தார். மதுரையின் வளம் குன்றாது இருக்க உக்கிரபாண்டியன் 96 வேள்விகளைச் செய்து முடித்தார். இன்னும் நான்கு வேள்விகளைச் குறைவின்றி செய்து முடித்தால் உக்கிரபாண்டியனுக்கு இந்திரப்பதவி கிடைத்து விடும் என்று எண்ணி தேவர்களின் தலைவனான இந்திரன் உக்கிரபாண்டியனின் மீது பொறாமை கொண்டான். இந்திரனின் பொறாமையால் அவனுடைய மனதில் சூழ்ச்சி ஒன்று உருவானது. அதன்படி அவன் கடலரசனை அழைத்து மதுரையை அழிக்கும்படி கூறினான். கடலரசனும் இந்திரனின் பேச்சுக்கு உடன்பட்டு மதுரையை அழிப்பதாக இந்திரனுக்கு வாக்குறுதி அளித்தான். கடலரசன் இந்திரனுக்கு அளித்த வாக்குறுதிப்படி மதுரை அழிப்பதற்காக பெரும் சீற்றத்துடன் ஊழிக் காலத்தினை ஒத்த அழிவினை மதுரையில் உண்டாக்குவதற்காக பொங்கி எழுந்து மதுரையை நோக்கி வந்தான். கடலரசன் நள்ளிரவில் மதுரையின் கிழக்குப் பகுதியை அடைந்த போது சொக்கநாதர் உக்கிரபாண்டியனின் கனவில் சித்தர் வடிவில் தோன்றினார். பாண்டியனே உன்னுடைய மதுரை நகரினை அழிக்கும் பொருட்டு கடலானது பொங்கி எழுந்து வருகிறது. நீ உன்னுடைய வேல்படையை கடலின் மீது ஏவி அதனை வெற்றி பெற்று மதுரையைக் காப்பாயாக என்று எச்சரிக்கை வார்த்ததை கூறி மறைந்தார்.
சித்தரின் எச்சரிக்கை வார்த்தை கேட்டு கண் விழித்த உக்கிரபாண்டியன் தனது அமைச்சர்களோடு கலந்து ஆலோசித்து விரைந்து சென்று பேரொலியோடு வருகின்றன கடலினைப் பார்த்து வியந்து நின்றான். அப்போது பாண்டியனின் கனவில் வந்த சித்தமூர்த்தி நேரில் அவ்விடத்திற்கு வந்தார். பின் உக்கிரபாண்டியனை நோக்கி பாண்டியனே இனியும் காலம் தாழ்த்தாது உன்னிடம் உள்ள வேல் படையைக் கொண்டு பொங்கிவரும் கடலினை வெற்றி கொண்டு மதுரையை விரைந்து காப்பாய் என்று கூறினார். சித்தரின் வார்த்தைகளைக் கேட்டவுடன் உக்கிரபாண்டியன் தன்னிடம் இருந்த வேல் படையின் கூரியமுனை கடலில் படுமாறு வலஞ்சுழித்து வீசி எறிந்தான். கூரிய வேலின் நுனி கடலில் பட்டவுடன் கடலானது பேரோலியுடன் வற்றி வலிமை இழந்தது. உக்கிரபாண்டியனின் கணுக்கால் அளவுக்கு கடல் நீர் குறைந்தது. மதுரைக்கு கடலினால் வந்த பெரும் ஆபத்து விலகியது. உக்கிரபாண்டியனின் அருகில் நின்றிருந்த சித்தர் வைகைக் கரையில் கடைச்சங்கத்தை நிறுவி தமிழ் வளர்ப்பாய் என்று அருளினார். பின் வானத்தில் உமையம்மையோடு இடப வாகனத்தில் காட்சியருளினார். உக்கிரபாண்டியன் அவரைத் துதித்துப் போற்றினான். இறைவனார் திருக்கோவிலுள் ஜோதி வடிவில் புகுந்தருளினார். உக்கிரபாண்டியனும் இறைவனாரை திருகோவிலினுள் சென்று வழிபாடு செய்தான். பல விளை நிலங்களை திருகோவிலுக்கு சொந்தமாக்கிய உக்கிரபாண்டியன் மதுரையை இனிது ஆட்சி புரிந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
தமிழுக்கு கடைச் சங்கத்தை ஏற்படுத்தி அருளினார். மேலும் வஞ்சனை எண்ணம் கொண்டவர்களோடு சேர்ந்து மற்றவர்களுக்கு தீயது செய்தால் தீய செயலில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.