சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாமனாக வந்து வழக்குரைத்த படலம் முப்பத்தி ஒன்பதாவது படலமாகும்.
மதுரையில் தனபதி என்றொரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி பெயர் சுசீலை. இத்தம்பதியினருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. இருவரும் எவ்வவோ அறச் செயல்கள் செய்தும் குழந்தையே பிறக்கவில்லை. அதனால் தனபதி தன் தங்கையின் புதல்வனை தன் பிள்ளைபோல் எண்ணி வளர்த்து அந்தப் பிள்ளையை தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டார். ஒரு நாள் அவரது சகோதரி அலட்சியமாக அவர்கள் குழந்தை பாக்கியமில்லாத மலடு என்றும் என்னுடைய பிள்ளையால் தான் உங்களுக்கு இம்மை மறுமைப் பயன்கள் கிடைக்கப் போகிறது என்று கூறினாள். இதனைக் கேட்டதும் தனபதி அடுத்த பிறவியிலாவது பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும் என்று எண்ணி காட்டிற்குச் சென்று தவம் மேற்கொள்ள எண்ணினார். ஆகையால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய தங்கை மகனுக்கு உரிமையாக்கிவிட்டு தன் மனைவியோடு தவம் செய்ய காட்டிற்குச் சென்றார். தனபதி காட்டிற்குச் சென்றதை அறிந்த அவரது பங்காளிகள் அவரது தங்கையை வஞ்சித்து சொத்துக்களை எல்லாம் பறித்துக் கொண்டு அவளை அடித்து விரட்டி விட்டனர். இதனால் தனபதியின் தங்கை செய்வதறியாது திகைத்தாள். இறுதியில் சொக்கநாதரைச் சரணடைந்தாள்.
சொக்கநாதரே என் தமையன் மனம் வருந்தும்படி பேசிய பலனை இப்போது இப்படி அனுபவிக்கிறேன் என்னை மன்னியுங்கள். எல்லோருக்கும் தாயும் தந்தையுமாய் இருப்பவரே என்னுடைய தமையனார் குழந்தைப்பேறு வேண்டி தவத்திற்குச் செல்லும் போது தத்துப் பிள்ளையான எனது மகனுக்கு அவருடைய செல்வங்கள் அனைத்தையும் விட்டு சென்றார். இதனை அறிந்த எங்களது உறவினர்கள் பொய் வழக்கு பேசி சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர். ஐயனே நான் யாருமில்லாமல் தனியாக இருக்கிறேன். எனக்கு இவன் ஒருவனே புதல்வன். இவனோ நல்லது கெட்டது அறியாத சிறுவன். எங்களுக்கென்று யாரும் இல்லை. இறைவா எங்களை இந்நிலையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று மனமுருக வழிபட்டாள். பின் சோர்வு மிகுதியால் அங்கேயே கண்ணயர்ந்தாள். அப்போது சொக்கநாதர் அவளுடைய கனவில் தோன்றி பெண்ணே நீ நாளை உன்னுடைய சுற்றத்தாரை உன்னுடைய சொத்துக்களை கேட்டு வழக்காடு மன்றத்திற்கு அழைத்து வா. யாம் இப்பொய் வழக்கினைத் தீர்த்து உம்முடைய பங்கினை உமக்கு அளிப்போம் என்று கூறினார். இறைவனாரின் திருவாக்கினைக் கேட்டதும் திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பது இதுதானோ என்று எண்ணி தன்னுடைய வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றாள். மறுநாள் தன்னுடைய உறவினர்களிடம் சென்று தன்னுடைய சொத்துக்களை திருப்பி அளிக்கும்படி கேட்டாள். அவர்கள் அவளையும் அவளுடைய மகனையும் திட்டி அடித்து விரட்டினர். உடனே அவள் அழுதபடியே வழக்காடு மன்றத்திற்குச் சென்று தன்னுடைய சொத்துக்களை உறவினர்களிடமிருந்து திருப்பித் தரும்படி கேட்டாள். வழக்காடு மன்றத்தினர் தனபதியின் உறவினர்களை அழைத்துவர உத்தரவு இட்டனர். வழக்காடு மன்றத்தில் தனபதியின் தங்கைக்கும் உறவினர்களும் வழக்கு நடைபெற்றது. அப்போது இறைவனார் தனபதியின் உருவில் வழக்காடு மன்றத்திற்கு வந்தார். தனபதியைக் கண்டதும் அவருடைய உறவினர்கள் நடுங்கினர்.
இறைவனான தனபதி தன்னுடைய தங்கையையும் மருமகனையும் கட்டிக் கொண்டார். பின்னர் சபையோர்களிடம் என் தங்கையின் வழக்கை ஆராய்ந்து தர்மத்தின் வழியில் நின்று முடிவினைத் தெரிவியுங்கள் என்றார். பின் வழக்காடு மன்றத்தில் இருந்தவர்கள் இருதரப்பினரையும் நன்கு கேட்டறிந்து உறவினர்களின் கூற்று பொய் என்று கூறினர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் வந்திருப்பது தனபதியே அல்ல என்றனர். இதனைக் கேட்டதும் இறைவனான தனபதி அவருடைய சொத்துக்களின் விவரம் உறவினர்களின் விவரம் அவர்களின் குடிப்பெயர் உடன் பிறந்தோர் அவர்களின் குணங்கள் அவர்கள் செய்யும் தொழில்கள் ஆகியவற்றை விளக்கமாக எடுத்து உரைத்தார். இதனைக் கேட்டதும் வழக்காடு மன்றத்தினர் இவர் தனபதியே என்றனர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் எல்லோரும் இனியும் இங்கிருந்தால் அரச தண்டனைக் கிடைக்கும் என்று கருதி ஒருவர் பின்னர் ஒருவராக வெளியேறினர். பின்னர் வழக்காடு மன்றத்தினர் தனபதியின் சொத்துக்கள் முழுவதும் அவருடைய தங்கை மகனுக்கு உரியது என்று கூறி சாசனம் அளித்தனர். தனபதியான இறைவனார் அந்த சாசனத்தை தனபதியின் தங்கையிடம் கொடுத்தார். பின்னர் எல்லோரும் பார்த்திருக்கும் போது அங்கிருந்து மறைந்தருளினார். இதனைக் கண்ட அங்கிருந்தோர் மாமனாக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்தனர். இதனை சுந்தரேச பாத சேகர பாண்டியனிடம் தெரிவித்தனர். இறைவனின் திருவிளையாடலை எண்ணி வியந்தார் சுந்தரேச பாத சேகர பாண்டியன். மதுரையை நல்வழியில் ஆட்சி புரிந்து சிறிது காலத்திற்குப் பிறகு தன் மகனான வரகுண பாண்டியனிடம் நாட்டை ஒப்புவித்து இறைவனின் திருவடியை அடைந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
தனது தவறை உணர்ந்து அதனை திருத்திக் கொண்டு இறைவனை சரணடைபவர்களை இறைவன் கட்டாயம் காப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.