52. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் ஐம்பத்தி இரண்டாவது படலமாகும்.

வங்கிசூடாமணிப் பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த போது நந்தவனம் அமைத்து இறை வழிபாட்டிற்காக அதில் மலரும் பூக்களைப் பயன்படுத்தினான். அந்த நந்தவனத்தில் வண்டுகள் மொய்க்காத செண்பக மலர்களும் இருந்தன. வங்கிசூடாமணிப் பாண்டியன் செண்பக மலர்களை சொக்கநாருக்கு அணிவித்து வழிபாடு நடந்தினான். ஆதலால் சொக்கநாதர் செண்பக சுந்தரேசர் என்ற பெயரினையும் பெற்றார். வங்கிசேகர பாண்டியனும் செண்பகப் பாண்டியன் என்று சிறப்பாக அழைக்கப்பட்டான். வசந்த காலத்தில் ஒருநாள் செண்பகப் பாண்டியன் தன்னுடைய மனைவியுடன் நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்போது ஒரு நறுமணம் வருதை உணர்ந்தான். காற்றிற்கு இயற்கையில் மணம் இல்லை. ஒருவேளை அரசியின் கூந்தலிருந்து இம்மணம் வருகிறதா? என்று எண்ணினான். பின்னர் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டா? அல்லது பூக்கள் மற்றும் நறுமணப் பொருட்களை பூசிக்கொள்வதால் மணம் உண்டாகிறதா? என்ற சந்தேகம் வந்தது. தன்னுடைய சந்தேகத்தை அரசியிடம் கேட்டான். அதற்கு அரசி தங்களின் சந்தேகத்தை சங்கப் புலவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினாள். பாண்டியனும் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழியை சங்கமண்டபத்தின் முன்னர் கட்டித் தொங்க விட்டான். என்னுடைய சந்தேகத்தை பாடல்கள் மூலம் தீர்ப்பவருக்கு இப்பொற்கிழி பரிசளிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்தான்.

பாண்டியனின் அவையில் இருந்த புலவர்கள் பலரும் பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்க்க முடியாமல் திணறினர். அப்போது மதுரையில் ஆதி சைவர் மரபில் தோன்றி தருமி என்பவன் அரசனின் அறிவிப்பினை அறிந்தான். சொக்கநாதரிடம் பேரன்பு கொண்ட அவனுக்கு தாய் தந்தை மனைவி என நெருங்கிய உறவினர் எவரும் இல்லை. ஆனால் திருமணம் செய்து கொள்ள ஆசை கொண்ட தருமி ஒருவேளை உணவிற்கு மிகவும் திண்டாடினான். ஆகையால் அவனுக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை. சொக்கநாதர் முன்னர் சென்று அப்பனே பாண்டியன் தன்னுடைய சந்தேகத்தைப் போக்கும் பாடலை அளிப்போருக்கு ஆயிரம் பொற்காசுகளை பரிசாக அறிவித்து உள்ளான். எனக்கோ பாடல் ஏதும் எழுதத் தெரியாது. ஆனால் ஆயிரம் பொன் கிடைத்தால் நான் திருமணம் செய்து கொண்டு சுற்றத்தாரோடு இனிது வாழ்வேன். ஆகையால் எனக்கு ஆயிரம் பொற்காசுகளை கிடைக்க அருள வேண்டும் என்று மனமுருகி வேண்டினான். அப்போது இறைவனார் புலவரின் வடிவத்தில் வந்து பாண்டியனின் சந்தேகத்தைப் போக்கும் பாடலை தருமிக்கு அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட தருமி நேராக செண்பகப் பாண்டியனைச் சந்தித்து அரசனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினான். பாண்டியனும் அப்பாடலை வாசிக்கச் சொன்னான்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமஞ்செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியிற்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

என்று தருமி இறைவன் அளித்த பாடலை வாசித்தான். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பதாக அமைந்த பாடலின் உட்கருத்தை அறிந்த செண்பகப் பாண்டியன் மகிழ்ச்சி அடைந்து தருமிக்கு பரிசளிக்க உத்தரவிட்டான். இதனைக் கேட்டதும் தருமி கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சங்கமண்டத்திற்கு முன்னே கட்டியிருந்த பொற்கிழியை தருமி எடுக்கச் செல்கையில் நக்கீரர் பொற்கிழியை எடுக்க விடாமல் தடுத்தார். அங்கே வந்த செண்பகப் பாண்டியனிடம் இப்பாடலில் சொல் குற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் பொருள் குற்றம் உள்ளது. இதற்கு தாங்கள் பரிசளிப்பது ஆச்சரியமாக உள்ளது என்று கூறி தருமியிடம் பாடலைத் திருப்பிக் கொடுத்தார். தருமி நேரே சொக்கநாதரின் சந்ததிக்குச் சென்றார். பொருள் வேண்டும் என்ற ஆசையில் உன்னைக் கூட மறந்து பாடலை அரசரிடம் எடுத்துச் சென்றேன். அப்பாடலில் பிழை இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பி விட்டனர். குறையுள்ள பாடலை என்னிடம் கிடைக்கச் செய்ததேன்? என்று புலம்பினான். அப்போது மீண்டும் புலவர் வடிவில் தோன்றிய சொக்கநாதர் தருமியிடம் நடந்தவற்றைக் கேட்டறிந்து நேரே சங்கமண்டபத்துக்குச் சென்றார்.

சொக்கநாதர் வடிவில் இருந்த புலவர் அங்கிருந்தோரிடம் யார் என்னுடைய பாட்டில் குற்றம் இருப்பதாகச் சொன்னது என்று சிங்கம் போல் கர்ஜித்தார். அப்போது நக்கீரர் உங்களுடைய பாட்டில் சொல் குற்றம் இல்லை. பொருளில்தான் குற்றம் உள்ளது என்றார். அதாவது பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பதானே உங்கள் பாடலின் கருத்து அதுதான் குற்றம். பெண்கள் நறுமலர்கள் மற்றும் திரவியங்களைப் பூசிக் கொள்ளுதல் போன்ற செயல்களால்தான் அவர்களின் கூந்தலுக்கு மணம் உணடாகிறது. இயற்கையில் அவர்களின் கூந்தலுக்கு மணம் இல்லை என்று கூறினார் நக்கீரர். அதனைக் கேட்டதும் இறைவனார் கற்புக்கரசிகள் தேவலோகத்துப் பெண்கள் ஆகியோரின் கூந்தலுக்குக் கூட இயற்கையில் மணம் இல்லையா? என்று வெகுசினத்துடன் கேட்டார். அதற்கு நக்கீரர் நான் தினந்தோறும் வணங்கும் திருகாளத்தியப்பரின் இடப்பாகத்தில் இடம்பெற்ற ஞானப் பூங்கோதையாகிய உமையம்மையின் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் கிடையாது என்று வாதிட்டார். இறுதியில் இறைவனார் தன்னுடைய நெற்றிக்கண்ணினை திறந்து காட்டினார். வந்திருப்பது இறைவனார் என்று தெரிந்தும் நக்கீரர் நீர் இந்திரன் போல் உடல் முழுவதும் கண்களாக்கிச் சுட்டாலும் உம்பாடல் குற்றமுடையதே என்று கூறினார்.

சொக்கநாதர் நக்கீரா எமது தேவியின் கூந்தலின் வாசத்தை நானே அறிவேன். நீ எல்லாமறிந்தவன் போல எதிலும் குற்றம் காண்பது உன் செருக்கையே குறிக்கின்றது. பூங்குழலி எனப் பெயர்பெற்ற சக்தியின் கூந்தல் வாசனையை அடைய விரும்பி அமராவதியிலுள்ள நந்தவனத்தில் உள்ள செடிகளின் புஷ்பங்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு உமையின் கேசத்தில் குடி இருக்கின்றன. தேவி சூடிக் கொள்வதால் புஷ்பங்களுக்குத் தான் பெருமை கூடுகிறது. துவாதச ஆதித்தர்களும் அம்பிகையின் கூந்தலின் வாசனைக்காக கூந்தலுக்கருகில் இருந்து சேவிக்க ஆசை கொண்டு அம்பிகையின் கிரீடத்தில் உள்ள ரத்தினங்களாக  இருக்கிறார்கள். ஈஸ்வரியின் கரிய கேசம் அதை தியானிக்கும் அடியார்களின் மன இருளைப் போக்குகின்றது. மலிவான வாசனைகளை நீக்கி சத் வாசனை அளிக்கிறது. அப்பேற்பட்ட தேவியின் கூந்தலின் மணத்தை வீம்புக்காக புறக்கணித்து வாதம் செய்கின்றாய். அதனால் சக்தி உன்னை விட்டு விலகுகின்றாள் எனக் கூறினார். உடனே இறைவனாரின் நெற்றிக்கண்ணிலிருந்து வந்த தீப்பொறியானது நக்கீரரைச் சுட்டது. பொறாமையுற்ற நக்கீரர் ஈசனின் நெற்றிக்கண் வெப்பம் தாங்காமல் தண்ணீருக்கு அழுந்தி பொற்றாமரைக் குளத்தில் அழுந்தினார். சொக்கநாதர் அவ்விடத்தைவிட்டு மறைந்து அருளினார். சொக்கநாதரின் கூற்றை மற்றையப் புலவர்களும் பாண்டியனும் ஆமோதித்துப் பொற்கிழியை இறைவன் அருள் பெற்ற சுந்தரநாதனுக்குக் கொடுத்தனர். சுந்தரநாதன் நல்ல குலத்தில் பிறந்த மங்கையை மணமுடித்து நற்புதல்வனை அடைந்து தெய்வத் தொண்டு புரிந்து வாழ்ந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

நடுநிலை வகிப்பவர்கள் யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் நடுநிலை மாறக் கூடாது என்பதையும் தனக்கே அனைத்தும் தெரியும் என்ற செருக்கு இருக்க கூடாது என்பதையும் தகுதியுடையவர்களுக்கு செல்வத்தை கொடுத்து இறைவன் அருள்வார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.