25. பழி அஞ்சின படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பழி அஞ்சின படலம் நூலின் இருபத்தி ஐந்தாவது படலமாகும்.

நடராஜரின் கால் மாறிய நடனத்திற்கு காரணமான இராசசேகரப் பாண்டியனுக்குப் பின் அவனது மகன் குலோத்துங்கப் பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். அப்போது மதுரையை அடுத்த திருப்பத்தூரில் வேதியன் ஒருவன் தனது மனைவி குழந்தையுடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மதுரையில் இருக்கும் தனது மாமன் வீட்டிற்கு காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தான். அவ்வாறு வரும்போது வேதியனின் மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. எனவே வேதியன் தனது மனைவி மற்றும் குழந்தையை ஒரு ஆலமரத்தின் நிழலில் விட்டுவிட்டு தான் மட்டும் தண்ணீர் தேடிச் சென்றான். இலைகள் நிறைந்த ஆலமரத்தில் முன்னொரு நாளில் யாரோ ஒரு வேடன் விட்ட அம்பு சிக்கிக் கொண்டு இருந்தது. ஆலமர இலைகளில் அம்பு சிக்கி இருந்ததை அப்பெண் கவனிக்கவில்லை. வேதியனின் மனைவி தனது குழந்தையை அருகில் விட்டுவிட்டு ஆலமரத்தின் நிழலில் அயர்வுடன் படுத்தாள். காற்றினால் அசைந்து அக்கூரிய அம்பு கீழே படுத்திருந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் ஊடுருவியது. ஊழ்வினையால் வேதியனின் மனைவி மாண்டாள். அப்பொழுது ஆலமரத்தின் மற்றொரு புறத்தில் வேடன் ஒருவன் இளைபாறிக் கொண்டிருந்தான். அவ்வேடன் மரணமடைந்திருந்த வேதியனின் மனைவியைக் கவனிக்கவில்லை. தண்ணீர் தேடிச் சென்ற வேதியன் தண்ணீருடன் ஆலமரத்தடிக்கு திரும்பினான். அங்கே அவனுடைய மனைவி அம்பால் கிழிக்கப்பட்டு இறந்து கிடந்ததையும் அவனுடைய குழந்தை அருகில் விளையாடிக் கொண்டிருந்ததையும் கண்டான்.

வேதியன் மரத்தைச் சுற்றிப் பார்த்தபோது இளைப்பாறிய வேடனைக் கண்டான். அவ்வேடன்தான் தன்னுடைய மனைவியைக் கொன்றதாகக் கருதி அவனை அரசனிடம் முறையிட அழைத்தான். அவ்வேடனோ தனக்கும் வேதியன் மனைவியின் இறப்பிற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தான். ஆனால் வேதியனோ வேடனின் அம்பால்தான் தன்மனைவி இறந்தாகக் கருதி அவனை வலுக்கட்டாயமாக அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அரண்மனையை அடைந்த வேதியன் குலோத்துங்கப் பாண்டியனிடம் நடந்தவைகளைக் கூறி தன்னுடைய மனைவியின் இறப்பிற்கு இவ்வேடனே காரணம் என்று கூறினான். குலோத்துங்கப் பாண்டியனும் வேடனிடம் விசாரித்தான். வேடனோ தனக்கும் வேதியன் மனைவியின் இறப்பிற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தான். அரசனோ வேடனை சந்தேகப்பட்டு சிறையில் அடைத்து அவனை சித்திரவதை செய்த போதும் வேடன் வேதியனின் மனைவியைக் கொல்லவில்லை என்பதையே கூறினான். இதனை அறிந்த மன்னன் தன் நாட்டில் நடைபெற்ற ஒரு மரணத்திற்கு நீதி கொடுக்க முடியாமல் போய் விடுமோ என்று மிகவும் வேதனையடைந்து சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து வேதியன் மனைவியின் இறப்பில் உள்ள சந்தேகத்தை தீர்த்தருள வேண்டினான். அப்போது இறைவன் பாண்டியா கவலை வேண்டாம். மதுரை நகரில் உள்ள வைசிய வீதியில் இன்று திருமணம் நடைபெற உள்ளது. நீ அங்கு வேதியனோடு வருவாயாக. அங்கே வேதியன் மனைவியின் இறப்பில் உள்ள சந்தேகம் தீரும் என்று திருவாக்கு அருளினார்.

இறைவனின் திருவாக்கின்படி குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் வைசிய வீதியில் நடைபெற இருந்த திருமண மண்டபத்தினை அடைந்தனர். திருமண வீட்டின் திண்ணையில்  அமர்ந்திருந்த பலருக்கு நடுவில் நிலக்கரி போல் கறுத்து பனைமரம் போல் உயர்ந்திருந்த இருவர் அரசனின் கவனத்தைக் கவர்ந்தனர். அவர்கள் பேசுவதை உன்னிப்பாய் கவனித்தான் அரசன். அவர்கள் மெதுவாக உரையாடியதை குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் கவனத்துடன் கேட்டார்கள். இறைவனின் திருவருளால் அவர்கள் எமதூதர்கள் என்று இருவரும் புரிந்து கொண்டார்கள். எமதூதர்களில் ஒருவன் இங்கே மணமகனாக அமர்ந்திருப்பவனின் உயிரினை எடுத்து வர நமது தலைவர் கட்டளையிட்டுள்ளார். எவ்வாறு இவனுடைய உயிரினை எடுப்பது? என்று கேட்டான். அதற்கு மற்றவன் ஆலமரத்தில் சிக்கியிருந்த கூரிய அம்பினை காற்றால் அசைத்து கீழே படுத்திருந்த வேதியன் மனைவியின் வயிற்றினை கிழிக்கச் செய்து அவளுடைய உயிரினை எடுத்தோம் அல்லவா? அதுபோல திருமணம் முடிந்ததும் கோ தானம் செய்வதற்காக திருமண மண்டபத்திற்கு வெளியில் நிற்கும் கன்று ஈன்ற பசு நிற்கிறது. அதனை இவ்விழாவின் ஆரவாரத்தால் கோபம் மூட்டி மணமகனை முட்டச் செய்து அவனுடைய உயிரினைப் பறிப்போம் என்று கூறினான். எமதூதர்களின் பேச்சினைக் கேட்ட குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வேதியன் அரசனிடம் இங்கு கூறியபடியே மணமகன் இறந்தால் என் மனைவியும் அவ்வாறு இறந்ததாக ஏற்றுக் கொள்வேன். ஆகையால் இங்கு நடக்கும் நிகழ்ச்சியைக் காண்போம் என்றான்.

குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் அங்கே நடப்பதை அறிய இருந்தனர். திருமண விழாவிற்காக எல்லோரும் கூடினர். அங்கே பலவித இசைக்கருவிகள் முழங்கின. இதனால் அவ்விடத்தில் பேரிரைச்சல் ஏற்பட்டது. பேரிரைச்சலால் கன்று ஈன்ற பசு கோபம் கொண்டு திருமணம் நடக்கும் இடத்திற்குள் புகுந்தது. மக்கள் எல்லோரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். பசுவானது மணமகனை கோபத்தில் முட்டியது. மணமகன் அவ்விடத்திலேயே இறந்தான். இதனைக் கண்ட வேதியன் பெரிதும் வருத்தம் கொண்டான். அரசன் அரண்மனையில் எல்லோருக்கும் நடந்தவைகளை விளக்கிக் சொல்லி வேடனை விடுதலை செய்து தன்னுடைய பிழையைப் பொறுத்துக் கொள்வாயாக என்று கூறி அவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினான். வேதியனுக்கு பொன்னும் பொருளும் அளித்து மறுமணம் செய்து கொள்ளச் சொன்னான். குலோத்துங்கப் பாண்டியன் திருக்கோவிலை அடைந்து எம்பெருமானே எனக்காக தாங்கள் பழி அஞ்சிய நாதராய் இருந்தீர் என்று கூறி பலவாறு போற்றி வழிபட்டான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தன் நாட்டில் நடந்த ஒரு மரணத்திற்கு நீதி கொடுக்க முடியாமல் கொடும்பழிக்கு ஆளாவோம் என்று அஞ்சிய குலோத்துங்க பாண்டியனுடைய தெளியாத மனத்தினைத் இறைவன் தெளிய வைத்தார். தர்ம வழியில் செல்லும் போது ஏதேனும் துன்பம் வந்தால் தன்னை நம்பியவர்களை இறைவன் கைவிட மாட்டார் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.