15. மேருவை செண்டால் அடித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மேருவை செண்டால் அடித்த படலம் நூலின் பதினைந்தாவது படலமாகும்.

உக்கிரபாண்டியன் அகத்தியர் கூறிய முறைப்படி சோமவார விரதமுறையைப் பின்பற்றி மதுரையை நல்வழியில் ஆட்சி செய்து வந்தான். சோமவார விரதத்தின் பயனாக உக்கிரபாண்டியனுக்கு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு வீரபாண்டியன் என்று பெயரிட்டனர். சோமவார விரதத்தின் பயனாக வீரபாண்டியன் இயற்கையிலேயே அழகும் அறிவும் நிரம்பியவனாக இருந்தான். பல கலைகளிலும் தேர்ச்சி பெற்று அவன் விளங்கினான். அப்போது ஒரு சமயம் மதுரையில் மழை வளம் குன்றி பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் அரசுக்கு வரி செலுத்த முடியாமல் திணறினர். தம்மக்களின் குறைகளைப் போக்க எண்ணிய உக்கிரபாண்டியன் நேரே திருக்கோவிலை அடைந்து சொக்கநாதரையும் மீனாட்சி அம்மையும் வணங்கி மக்களின் துயர் போக்க வழியினை வேண்டி வழிபாடு நடத்தினான். அன்றைய இரவில் உக்கிரபாண்டியனின் கனவில் சொக்கநாதர் சித்தர் வடிவில் தோன்றி இமயத்தை தாண்டி இருக்கும் மேருமலையின் அரசன் ஏராளமான பொன் மற்றும் பொருள்களை தன்னகத்தே கொண்டுள்ளான். தற்போது செல்வச் செழிப்பினால் மேரு மலையானது செருக்கு கொண்டுள்ளது. நீ அந்த மலையை சுந்தரபாண்டியனார் கொடுத்த செண்டினால் அடித்து அதன் செருக்கை அழித்து அதனிடமிருந்து பொருளைப் பெற்று உன் நாட்டு மக்களின் துயரத்தைப் போக்கு. உனக்கு தேவையான பொருளினைப் பெற்றவுடன் அதன் மீது பாண்டிய நாட்டின் சின்னத்தைப் பொறித்துவிடு. அதே நேரத்தில் மேருமலையை அடைவதற்கு நீ நீண்ட கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிஅருளினார்.

இறைவனின் திருவாக்கினைக் கேட்ட உக்கிரபாண்டியன் அதிகாலையில் விரைந்து எழுந்து நித்திய கடன்களை முடித்து பெரும் படையைத் திரட்டி மேருமலையை நோக்கி பயணம் ஆவதற்கு தயார் ஆனான். காலையில் சொக்கநாதரையும் மீனாட்சி அன்னையையும் வழிபட்டு தன்னுடைய படைகளுடன்  மேருமலையை நோக்கிய பயணத்தைத் தொடங்கினான். அவன் காசியை அடைந்து விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் வணங்கி தனது பயணத்தைத் தொடர்ந்தான். பின் இமயத்தைக் கடந்து பொன்போல் ஒளி வீசும் மேருமலையை அடைந்தான். உக்கிரபாண்டியன் மேருமலையை நோக்கி மலைகளுக்கு எல்லாம் அரசனே எம் தந்தையாகிய சிவபெருமானின் கையில் உள்ள வில்லே நிலவுலகின் ஆதாரமே வானத்தில் உள்ள தேவர்கள் எல்லோரும் வசிக்கும் கோவிலே நீ விரைந்து வருவாயாக என்று கூவி அழைத்தான். உக்கிரபாண்டியன் அழைத்தும் வராததால் கோபம் கொண்டு சுந்தரபாண்டியனார் கொடுத்த செண்டு எனப்படும் பொன் பந்தினால் மேருவின் சிகரத்தில் ஓங்கி அடித்தான். செண்டினால் அடிபட்ட மேருமலை வலியால் துடித்தது. அம்மலையை சுற்றியுள்ள அனைத்தும் நடு நடுங்கின. பின் மேருமலையானது நான்கு தலைகளும் எட்டு தோள்களும் வெண்ணிற குடையையும் தாங்கியவாறு உக்கிரபாண்டியனின் முன்னால் வந்து நின்றது.

உக்கிரபாண்டியனும் கோபம் தணிந்து நீ காலம் தாழ்த்தி வந்ததற்கு காரணம் யாது? என்று கேட்டான். அதற்கு அம்மலை எனக்கு அசையும் உருவம் அசையா உருவம்  இரண்டும் உண்டு.  அசையும் வடிவத்தில் நான் தினந் தோறும் சென்று சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சி அம்மனையும் ஆகாய மார்க்கமாக சென்று வழிபட்டு வந்தேன். ஆனால் ஒரு பெண்ணின்பால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக நான் பறக்கும் சக்தியை இழந்ததோடு அறிவு மயக்கத்தில் சோமசுந்தரரையும் வழிபட மறந்திருந்தேன். செல்வம் என்னிடம் அத்திகமாக இருக்கிறது என்ற ஆணவத்தில் காலம் தாழ்த்தி வந்தேன். அதன் காரணமாக தங்களிடம் இறைவன் கொடுத்த பந்தினால் அடியும் பட்டேன். என்னை மன்னித்தருளுங்கள். தாங்கள் இங்கே வந்த காரணம் யாது? என்று கேட்டது. உடனே பாண்டியனும் நான் என் மக்களின் துயரினைப் போக்க பொருளினை விரும்பி இவ்விடத்திற்கு வந்தேன் என்றான். அதற்கு மேருமலை உக்கிரபாண்டியரே என் உடலாகவே உள்ள இந்த மலையில் மாசுள்ள இடம் மாசற்ற இடம் என இரண்டு பகுதி உள்ளது. மாசற்ற இடத்தில் சூரிய ஒளிபோல் மிகத் தூயதான ஒரு பாகம் உண்டு. நீங்கள் விரும்பிய பொன்னானது அந்த தூய்மையான பாகத்தில் பாறையால் மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறி பொருள்கள் இருக்கும் அறையை தன் கையினால் சுட்டிக் காட்டியது மேருமலை. உக்கிரபாண்டியன் அப்பொன்னறையின் அருகே சென்றான். மூடிய பாறையை நீக்கி வேண்டிய அளவு பொன்னை எடுத்துக் கொண்டு ஏற்கனவே இருந்தபடி மூடி வைத்தான். பின்னர் தான் எடுத்துக் கொண்ட பொருளின் மீது பாண்டிய நாட்டின் சின்னத்தைப் பொறித்து தன் படைகளோடு புறப்பட்டு மதுரையை அடைந்தான்.

மதுரையை அடைந்த உக்கிரபாண்டியன் சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சியையும் வணங்கினான். பின் அரண்மனையை அடைந்து தான்கொண்டு வந்த பொன் பொருட்களைக் கொண்டு தன்னுடைய குடிமக்களின் பசித் துன்பத்தை நீக்கினான். சிவபெருமானின் திருவருளால் மீண்டும் பாண்டிய நாட்டில் மழை பெய்து வளங்கள் பெருகின. நீதிதவறாமல் அரசாண்ட உக்கிரபாண்டியன் தன்மகனான வீரபாண்டியனுக்கு அரசுரிமையை அளித்தான். பின் சொக்கநாதரின் திருவடியில் இரண்டறக் கலந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

செல்வ செருக்கும் முறையற்ற பெண்ணாசையும் ஒருவனை தன்னுடைய நிலையில் இருந்து கீழ் நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.