சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சமணரைக் கழுவேற்றிய படலம் அறுபத்தி மூன்றாவது படலமாகும்.
திருஞானசம்பந்தர் சொக்கநாதரின் திருவருளால் கூன்பாண்டியனின் வெப்புநோயையும் உடல் கூனினையும் போக்கியதைக் கண்டு மங்கையர்கரசியும் குலச்சிறையாரும் பெரிதும் மகிழ்ந்தனர். மதுரையில் மீண்டும் சைவத்தை தளிர்க்கச் செய்யுமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தனர். திருஞானசம்பந்தரும் இறைவனின் திருவருளால் எல்லாம் நல்லதாக நடக்கும் என்று அவர்களிடம் கூறி திருக்கோவிலை அடைந்து இறைவனை மனமார வழிபட்டார். திருஞானசம்பந்தர் இறைவனாரிடம் ஐயனே பாண்டிய நாட்டில் மீண்டும் சைவம் தழைத்தோங்க அருள்புரியுங்கள் என்று வேண்டிக் கொண்டார். பாண்டியனின் வெப்புநோயை தீர்ப்பதில் தோல்வியுற்ற சமணர்கள் திருஞானசம்பந்தரை வாதிட்டு வெல்ல முடிவு செய்தனர். மன்னனிடம் இதனைத் தெரிவித்து அவரை வாதப்போருக்கு அழைத்தனர். மன்னனும் இதற்கு உடன்பட்டான். போட்டியின்படி மதுரை நகருக்கு வெளியே அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. சமணர்கள் தங்களின் பாடல்களை பனைஓலை சுவடியில் எழுதி குண்டத்தில் போட்டனர். திருஞானசம்பந்தரும் போகமார்த்த பூண்முலையாள் என்னும் திருநள்ளாற்றுப் பதிகத்தை அக்னியில் இட்டார்.
அக்னி குண்டம் எரிந்து முடிந்ததும் திருஞானசம்பந்தரின் திருநள்ளாற்றுப் பதிகம் எரியாமல் புதுப்பொலிவுடன் இருந்தது. சமணர்களின் பாடல் தீயில் கருகியது. ஆனால் சமணர்கள் சமாதானம் அடையாமல் புனல் வாதத்திற்கு திருஞானசம்பந்தரை அழைத்தனர். அப்போது பாண்டியன் குறுக்கிட்டு வாதத்தில் தோற்றவர்கள் கழுவேற வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். இருவரும் ஒப்புக் கொண்டனர். வைகை ஆற்றில் சமணர்கள் பனை ஓலையில் எழுதிய தங்களின் பாடல்களை இட்டனர். அச்சுவடிகள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டன. திருஞானசம்பந்தர் தான் எழுதிய வாழ்க அந்தணர் வாழ்க ஆவினம் என்ற பதிகத்தை ஆற்றில் போட்டார். திருஞானசம்பந்தரின் ஏடானது வைகை ஆற்று நீரினை எதிர்த்து கிழித்து சென்று சற்று தூரத்தில் மறைந்தது. இதனைக் கண்ட அரசர் சமணர்களிடம் திருஞானசம்பந்தரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு சைவத்திற்கு மாறினால் கழுவில் ஏற வேண்டாம் என்றார். ஆனால் சமணர்கள் தங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டு தாங்களாகவே கழுவில் ஏறி தங்களின் உயிரினைத் துறந்தனர்.
ஏடு மறைந்த இடத்தில் வில்வமரத்தின் அடியில் இறைவனார் சுயம்புவாய் தோன்றி இருந்தார். அதனைக் கண்டதும் அங்கிருந்தோர் அனைவரும் அவரை வழிபட்டனர். திருஞானசம்பந்தர் அப்போது வன்னியமும் மத்தமும் என்ற பதிகத்தைப் பாடி இறைவனாரை வழிபட்டார். அப்போது ஒரு முதியவர் வடிவில் இறைவனார் அவ்விடத்திற்கு வந்து திருஞானசம்பந்தரிடம் ஏடுகளை தந்து மறைந்தருளினார். பின்னர் சுந்திரபாண்டியன் அவ்விடத்தில் திருகோவில் ஒன்றினைக் கட்டி சிலகாலம் தங்கியிருந்து இறைவனாரை வழிபட்டான். அவ்விடம் தற்போது திருவேடகம் என்று அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் சிலகாலம் தங்கியிருந்து பல தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி மீண்டும் சோழ நாட்டிற்குச் சென்றார்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறையருளை யாராலும் எதனாலும் வெற்றி கொள்ள முடியாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.