சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம் நூலின் எட்டாவது படலமாகும்.
இறைவன் அருளிய வடவைத்தீ என்னும் பசி நோயினால் குண்டோதரன் தடாகை ஏற்பாடு செய்த திருமண விருந்து உணவு முழுவதையும் உண்டான். ஆனாலும் அவனுடைய பசி நோயானது தீராமல் அதிகரித்துக் கொண்டே சென்றது. சொக்கநாதரிடம் சென்று தனது பசி நோயினை போக்கி அருள வேண்டி நின்றான். சொக்கநாதரும் அவன் மீது இரக்கம் கொண்டு உலகிற்கு எல்லாம் உணவளிக்கும் தனது சக்தியான அன்னபூரணியை மனதில் நினைத்தார். உடனே அங்கே தயிர் அன்னத்தினை உடைய நான்கு பெரிய குழிகள் தோன்றின. சொக்கநாதர் குண்டோதரனிடம் பசி நோயால் வாடும் குண்டோதரனே இந்த குழிகளில் உள்ள தயிர் அன்னத்தினை உண்பாயாக என்று அருளினார். இறைவனின் ஆணையின்படி குண்டோதரனும் தன்னுடைய இரு கைகளாலும் அன்னக்குழியில் இருந்த தயிர் அன்னத்தை எடுத்து உண்டான்.
இறைவனின் கருணையால் குண்டோதரனைப் பிடித்திருந்த பசி நோய் மறைந்தது. அன்னக்குழியில் இருந்து உணவினை உண்ட குண்டோதரனின் வயிரானது பருத்து பெரியதானது. உணவினை உண்ட மயக்கத்தால் அவன் பூமியில் வீழ்ந்தான். இங்கும் அங்கும் புரண்டான். சிறிது நேரத்தில் குண்டோதரனுக்கு உண்ட உணவின் காரணமாக தண்ணீர் தாகம் ஏற்பட்டது. உடனே அவன் மதுரையில் நீர் இருக்கும் இடங்களைத் தேடிபோய் நீரினை அருந்தினான். குண்டோதரனின் தண்ணீர் தாகத்தின் காரணமாக மதுரையின் நீர்நிலைகள் வற்றின. ஆனாலும் அவனுடைய தண்ணீர் தாகம் அடங்கவில்லை. அவன் மீண்டும் சொக்கநாதரை சரணடைந்து உலகினை காத்து அருளும் பெருமானே. அடியேனின் பசி நோய் போய் இப்போது தண்ணீர் தாகம் அதிகரித்துள்ளது என்றான். இங்குள்ள நீர் நிலைகளில் உள்ள நீரினை எல்லாம் குடித்த பின்னும் என்னுடைய தாகம் தணியவில்லை. பசி நோயினை போக்கிய தாங்களே என்னுடைய தாகத்தினையும் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்.
சொக்கநாதரும் குண்டோதரனிடம் அன்பு கொண்டு தன் தலையில் சூடியிருந்த கங்கையை நோக்கி பெண்ணே நீ இம்மதுரை மாநகரின் பக்கத்தில் ஒரு பெரிய நதியாக விரைந்து ஓடி வருவாயாக என்று கட்டளை இட்டார். கங்கை சிவபெருமானை நோக்கி முன்னர் பகீரதன் பொருட்டு ஒருமுறை தீர்த்தமாக என்னை அழைத்தீர்கள். இப்போதும் அவ்வாறே அழைக்கிறீர்கள் என்றாள். என்னுள் மூழ்கியவருக்கு பக்தியும் அன்பும் மெய்ஞானமும் வீடுபேறும் பெறுமாறு தாங்கள் எனக்கு திருவருள் புரிய வேண்டும் என்று கங்கை வரம் வேண்டினாள். இறைவனும் அவ்வாறே அருள் புரிந்தார். உடனே கங்கை அளவற்ற வேகத்துடன் பெரிய நதியாக ஆரவாரத்துடன் பெரிய மரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்தது. சிவபெருமான் குண்டோதரனிடம் அந்த நதி நீரில் வை உன்னுடைய கை என்று நீரை பருகக் கட்டளையிட்டார். குண்டோதரனும் ஆற்றின் அருகே சென்று இருகைகளை அந்த நீரில் கை வைத்து வாரிக் குடித்தான். உடனே அவனுடைய தண்ணீர் தாகம் தணிந்தது. குண்டோதரன் கையை வைத்து நீர் குடித்த நதியாதலால் அது வைகை என்று அழைக்கப்பட்டது. தண்ணீர் தாகம் தணிந்த குண்டோதரன் மகிழ்ந்து இறைவனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். ஆனந்தத்தில் பல பாடல்களைப் பாடினான். அவனது பாடல்களைக் கேட்ட சிவபெருமான் அவனை தனது பூதகணங்களுக்கு தலைமை ஏற்கும் பதவியை அவனுக்கு அருளினார்.
சிவபெருமானின் தலையில் இருந்து இறங்கி வந்ததால் வைகை சிவகங்கை என்று அழைக்கப் படுகிறது. தன்னை பருகுபவர்களுக்கு தெளிந்த சிவஞானத்தை அளிப்பதால் இது சிவஞானத் தீர்த்தம் என்றும் காற்றைப் போல் வேகமாக வருவதால் வேகவதி என்றும் மதுரையை சூழ்ந்து வருவதால் கிருத மாலை என்றும் அழைக்கப்படுகிறது.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறைவனை சரண் அடைபவர்களை இறைவன் கட்டாயம் காத்து அருளுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார். மேலும் மதுரை நகருக்கு வற்றாத வைகை புண்ணிய நதியை இந்த திருவிளையாடல் மூலம் அளித்து அருளினார்.
நமசிவாயம் ஐயா.
🙏🙏🙏🙏🙏
தாங்களது பதிவினை தொடர்ந்து படித்தும் பகிர்ந்தும் வருகிறேன், மிகவும் அற்புதமான இறைப்பணி இப்பிறவியில் அடியேன் பெற்ற பாக்கியம்.
🙏🙏🙏🙏🙏
வடிவேல் சண்முகம்
அருள்மிகு அலங்காரவல்லி அன்னை உடனுரை பசுபதீஸ்வரர் ஆலயம்
வ. கோவில்பட்டி
வத்தல தோப்பம்பட்டி கிராமம்
சாணார்பட்டி ஒன்றியம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
நன்றி