1. இந்திரன் பழி தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இந்திரன் பழி தீர்த்த படலம் நூலின் முதல் படலமாகும்.

தேவலோகத்தின் அரசனான இந்திரனை காண வந்தார் தேவ குரு பிரகஸ்பதி. இந்திரன் தேவ மகளீர்களுடன் இருந்தபடியால் தேவ குருவை கவனிக்காமலும் அவருக்கு தகுந்த வரவேற்பை கொடுக்காததாலும் சினம் கொண்ட பிரகஸ்பதி அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின் தேவர்கள் மூலம் குரு வந்ததை அறிந்த இந்திரன் அவரைக் காண ஐராவதமாகிய தனது வாகனத்தில் தேவர்களுடன் தேடிச் சென்றான். அவர்களால் தேவகுருவை கண்டு பிடிக்க இயவில்லை. தேவகுரு இல்லாமல் இந்திரனிடம் இருந்த சக்தியும் செல்வமும் குறைய ஆரம்பித்தது. தேவகுரு இல்லாமல் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பரிகாரம் தேடி அவன் தேவர்களோடு பிரம்மலோகத்திற்குச் சென்றான். தேவர்களுக்கு தற்போது நல்வழிகாட்ட குரு இல்லாததை பிரம்மாவிடம் எடுத்துக் கூறி வருந்தி இந்த சிக்கலுக்கு வழிகாட்டி அருளுமாறு வேண்டினான். அப்போது பிரம்மா இந்திரன் செய்த தவறுக்கு அவனுக்கு தண்டனை கொடுக்க எண்ணி பிரகஸ்பதியை கண்டு பிடிக்கும்வரை அறிவாலும் தொழிலாலும் சிறந்த ஒருவரை உங்களின் தற்காலிக குருவாக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி துவட்டா என்பவனின் மகனும் மூன்று தலைகளை உடையவனும் அசுர குலத்தில் உதித்தவனும் ஆகிய விச்சுவரூபன் என்பவனை தற்காலிக குருவாக்கிக் கொள்ளுமாறு அருளினார். அசுரகுலத்தில் உதித்தவனை குருவாக்கிக் கொள்வதா என்று முதலில் யோசித்த தேவேந்திரன் இறுதியில் பிரம்மாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு விச்சுவரூபனை குருவாக ஏற்றுக் கொண்டான்.

தேவ குரு பிரகஸ்பதியை அலட்சியப் படுத்தியதற்காக வருத்தம் கொண்ட இந்திரன் அதற்கு பரிகாரம் செய்ய எண்ணினான். புதிய குருவான விச்சுவரூபனிடம் தேவர்கள் நன்கு வாழ யாகம் செய்ய வேண்டும் என்று கூறினான். அதற்கு சம்மதித்த விச்சுவரூபனும் வாயினால் தேவர்களின் நலத்திற்காகவும் மனதினால் அசுரர்களின் நலனுக்காகவும் யாகத்தினை நடத்தினான். இதனை தனது ஞானதிருஷ்டியில் அறிந்த கொண்ட தேவேந்திரன் விச்சுவரூபனின் மூன்று தலைகளையும் கொய்தான். அவனின் மூன்று தலைகளும் காடை ஊர்குருவி கிச்சிலி பறவைகளாக மாறின. குருவைக் கொன்ற பாவத்தினால் இந்திரனை பிரம்மகத்தி தோசம் பிடித்தது. இந்திரனின் பிரம்மகத்தி தோசத்தினை தற்காலிகமாக போக்குவதற்காக தேவர்கள் மரங்களிடத்தில் பிசினாகவும் மகளிரிடத்தில் பூப்பாகவும் நீரினிடத்தில் நுரையாகவும் மண்ணிடத்தில் உவராகவும் பிரித்து அளித்தனர். இதனால் தற்காலிகமாக இந்திரனைப் பற்றிய பிரம்மகத்தி தோசம் நீங்கப் பெற்று பொலிவுடன் விளங்கினான்.

துவட்டா தன் மகன் விச்சுவரூபனின் முடிவினை அறிந்து இந்திரனை அழிக்க முடிவு செய்து வேள்வி ஒன்றினைத் தொடங்கினான். அவ்வேள்வியிலிருந்து பயங்கரமான உருவத்துடன் அசுரன் ஒருவன் தோன்றினான். அவ்வசுரனுக்கு விருத்தாசுரன் எனப் பெயரிட்ட துவட்டா விருத்தாசுரனுக்கு இந்திரனை அழிக்க ஆணை இட்டான். தேவேந்திரனுக்கும் விருத்தாசுரனுக்கும் பயங்கரப் போர் ஏற்பட்டது. இறுதியில் தேவேந்திரன் விருத்தாசுரனின் மீது தனது வஜ்ராயுதத்தை ஏவினான். விருத்தாசுரன் வஜ்ராயுத்தை வீழ்த்திவிட்டு தன்னிடம் இருந்த இரும்பு உலக்கையால் இந்திரனை அடித்து அவனை மூர்ச்சை அடையச் செய்தான். மூர்ச்சை தெளிந்த இந்திரன் இவ்வசுரனுடன் நேருக்கு நேர் போர் புரிய என்னிடம் வலிமை இல்லை எனக் கருதி மீண்டும் பிரம்மாவை சரணடைந்தான். இப்பிரச்சினையிலிருந்து தப்பிக்க திருமால் ஒருவரே உனக்கு வழிகாட்டுவார். ஆகையால் அவரை சரணடைந்து விருத்தாசுரனை அழிக்க உபாயம் கேள் என்று பிரம்மா கூறினார்.

திருமாலிடம் சென்ற தேவர்கள் தங்கள் பிரச்சினையை சொல்லி அதற்கு தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அதற்கு திருமால் பாற்கடலைக் கடைந்தபோது உங்களின் ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைக்க ததீசி முனிவரிடம் தந்தீர்கள். பின்பு அந்த ஆயுதங்களை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளத படியால் அவர் அந்த ஆயுதங்களை பாதுகாக்க திரவமாக்கி குடித்து தனது முதுகுத்தண்டில் சேகரித்து வைத்துள்ளார். அவரிடம் சென்று அவரின் முதுகெலும்பைப் பெற்று புதிய வலிமைமிக்க வஜ்ராயுத்தை உருவாக்கி அந்த ஆயுதத்தைக் கொண்டு அசுரனை வெல்லலாம் என்று கூறினார். திருமால் கூறியதை ஏற்றுக் கொண்ட தேவர்கள் ததீசி முனிவரை சந்தித்து நடவற்றை எல்லாம் கூறினர். கருணையுள்ளம் கொண்ட ததீசி முனிவரும் இறைவனான சிவபிரானின் விருப்பப்படியே நான் என்னுடைய முதுகெலும்பினைத் தருகிறேன். தாங்கள் அதனைக் கொண்டு அசுரனை வெல்லுங்கள் என்று சொல்லி ததீசி முனிவர் யோகத்தில் அமர்ந்து தனது உடலை விட்டு சிவலோகம் சென்றார். பின் ததீசி முனிவரின் முதுகெலும்பைப் பெற்ற இந்திரன் தேவதச்சன் மூலம் புதிய வலிமைமிக்க வஜ்ராயுதத்தை உருவாக்கினான்.

இறைவனின் அருளால் புதிய வஜ்ராயுதத்தைப் பெற்ற இந்திரன் மீண்டும் விருத்தாசுரனுடன் போரிட்டான். இந்திரனுடன் சண்டையிட முடியாத விருத்தாசுரன் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டான். அசுரனைக் காணாது திகைத்த இந்திரன் பிரம்மாவிடம் சென்று நடந்ததைக் கூறி அசுரனைக் கண்டறிய வழி கேட்டான். பிரம்மாவும் அகத்தியரின் உதவியுடன் கடலினை வற்றச் செய்து அசுரனை அழிக்கலாம் என்று வழி கூறினார். இந்திரனும் அகத்தியரைச் சென்றடைந்து நடந்தவைகளைக் கூறி உதவிடுமாறு கேட்டான். அகத்தியரும் கடல் நீரை உளுந்தளவாக்கி குடித்து விட்டார். கடல் நீர் வற்றியதால் வெளியேறிய விருத்தாசுரனை இந்திரன் தன்னுடைய புதிய வஜ்ராயுதத்தால் அழித்தான். இதனால் இந்திரனை மீண்டும் பிரம்மகத்தி தோசம் பிடித்துக் கொண்டது. பிரம்மகத்தியால் மனம் பேதலித்த இந்திரன் குளத்தில் மலர்ந்திருந்த தாமரைத் தண்டினுள் போய் ஒளிந்து கொண்டான்.

தேவேந்திரனை காணாது தேவர்கள் பூலோகத்தில் அசுவமேதயாகம் செய்து சிறப்புற்றிருந்த நகுஷன் என்பவனை தேவேந்திரனாகத் தேர்வு செய்து இந்திரப் பதவியை அளித்தனர். இந்திரப்பதவி தந்த மமதையால் நகுஷன் இந்திராணியான சசிதேவியை தனக்கு சொந்தமாக்க விரும்பினான். நகுஷன் தனது விருப்பத்தை தேவர்களிடம் தெரிவித்து இந்திராணியை அழைத்து வரும்படி சொன்னான். இதனை அறிந்த இந்திராணி தங்களது குருவான பிரகஸ்பதியை மனதில் நினைத்து தன் துயர் போக்கும்படி வேண்டினாள். பிரகஸ்பதி நகுஷனை நேரடியாக வெல்ல முடியாது. அதனால் சப்த ரிசிகள் எழுவரும் சுமந்து வரும் பல்லாக்கில் வந்தால் நகுஷனை ஏற்றுக் கொள்வேன் என வேண்டுகோள் விடு என்று சதிதேவிக்கு ஆலோசனை கூறினார். சசிதேவியும் பிரகஸ்பதி சொல்லியவாறே சொல்லி அனுப்பினாள். நகுஷனும் இந்திராணியை அடையும் மோகத்தினால் சப்தரிஷிகள் பெருமை அறியாமல் அவர்கள் தன்னை சுமந்து செல்லும்படி கட்டளையிட்டான். நகுசனின் பல்லாக்கு தேவலோகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு நின்று கொண்டு இருந்த இந்திராணியை பார்த்தவுடன் அவள் மேல் ஏற்பட்ட ஆசை மிகுதியால் விரைவில் இந்திராணியை அடையும் நோக்கில் பல்லக்கை வேகமாக சுமந்து செல்லுங்கள் என்று முனிவர்களை விரைவுப்படுத்தினான்.

முனிவர்களும் நாங்கள் வழக்கமான வேகத்தில்தான் பல்லாக்கை சுமந்து செல்கிறோம் என்றனர். சப்தரிசிகளில் குள்ளமான முனிவர் தான் பல்லக்கு மெதுவாக செல்லக் காரணம் என்று கருதிய நகுசன் குள்ளமாக இருந்த முனிவரைப் பார்த்து சர்ப்ப சர்ப்ப என்று சமஸ்கிருத மொழியில் வேகமாக வேகமாக என்ற பொருளில் தன் கையில் இருந்த குச்சியால் முனிவரை நகுசன் அடித்தான். இந்திராணியின் மீது கொண்ட மையல் காரணமாக தன்னை அடித்த நகுசனை சர்ப்ப என்றால் நாகம் என்ற பொருளில் பூவுலகத்தில் மலைப் பாம்பாக விழக்கடவாய் என சாபமிட்டார். நகுசனும் பூமியில் மலைப் பாம்பாக விழுந்தான். இவ்வாறு இந்திராணிக்கு ஏற்பட்ட துயரம் நீங்கியது. தேவேந்திரனை தங்களுக்கு மீட்டுத்தரும்படி பிரகஸ்பதியிடம் இந்திராணியும் தேவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

பிரகஸ்பதி அவர்கள் மீது இரக்கம் கொண்டு தாமரைத் தண்டினுள் ஒளிந்திருந்த தேவேந்திரனை அழைத்தார். குருவின் குரல் கேட்டு தேவேந்திரன் சித்தம் தெளிந்து தாமரைத் தண்டிலிருந்து வெளிப்பட்டான். ஆனாலும் அவனை பிடித்திருந்த பிரம்மகத்தி தோசம் நீங்கவில்லை. பிரகஸ்பதி இந்திரனிடம் பூலோகத்தில் இருக்கும் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால் பிரம்மகத்தி தோசம் நீங்கும் என்று வழி கூறினார். பிரகஸ்பதியுடன் பூலோகத்தை அடைந்த இந்திரன் ஒவ்வொரு சிவாலயமாகச் சென்று வழிபாடு நடத்தினான். அவ்வாறு ஒவ்வொரு ஆலயமாக சிவாலய தரிசனம் செய்து கொண்டு செல்லும் போது கடம்பவனத்தை கடந்த சமயத்தில் அவனை பிடித்திருந்த பிரம்மகத்தி தோசம் நீங்கி புதுப்பொலிவு பெற்றான். கடம்பவனத்தில் இருக்கும் இறைவனின் கருணையால்தான் இந்திரனுக்கு பிரம்மகத்தி தோசம் நீங்கியது. ஆகையால் இங்கிருக்கும் இறைவனைக் கண்டறியுங்கள் என்று பிரகஸ்பதி இந்திரனிடம் கூறினார். இந்திரனும் தேவர்களும் தேடி இறுதியில் கடம்பவனத்தில் லிங்கத் திருமேனியையும் தீர்த்தத்தையும் கண்டறிந்தனர்.

பிரகஸ்பதியின் அறிவுரையின்படி இந்திரனும் தேவர்களும் கடம்பவனத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டான். இறைவனின் திருவருளால் அத்தீர்த்தத்தில் பொற்றாமரைகள் மலர்ந்தன. இந்திரனும் அம்மலர்களைக் கொண்டு சிவபிரானை வழிபட்டான். பின்னர் அவ்விடத்தை சீராக்கி எட்டு யானைகள் 32 சிங்கங்கள் 64 சிவகணங்கள் கொண்ட அழகிய விமானத்துடன் அவ்விட இறைவனுக்கு அமைத்து கோவில் கட்டினான் இந்திரன். அவனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் இந்திரனே உன்னுடைய பிரம்மகத்தி தோசம் முற்றிலும் நீங்கிவிட்டது. இங்கு நீ வேண்டுவது யாது? என்று கேட்டார். இறைவனே நான் என்றைக்கும் இங்கிருந்து தங்களை வழிபடும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் இந்திரன். அதற்கு சிவபெருமான் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியில் இங்கு வந்து வழிபடு. அன்றைய தினம் இவ்வாலய வழிபாடு உனக்கு ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனை உனக்கு கொடுக்கும். இவ்வாலயத்தில் சொக்கநாதர் சோமசுந்தரர் என்ற திருநாமங்கள் கொண்டு எம்மை வழிபடுவோர் உன்னைப் போலவே தங்களின் துன்பங்கள் நீங்கப் பெறுவர். நீ பல்லாண்டு இந்திரப்பதவியை வகித்து இறுதியில் எம்திருவடி சேர் என்று அருளினார். இன்றைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவருக்கு இந்திரன் அமைத்த விமானம் இந்திர விமானம் என்றும் கடம்பவனத் தீர்த்தம் பொற்றாமரைக்குளம் என்றும் இறைவனார் சொக்கநாதர் சோமசுந்தரர் என்றும் அழைக்கப் படுகின்றனர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் அனைவருக்கும் சொல்லும் கருத்து:

  1. சுக போகங்களில் மூழ்கியும் ஆசைகளினால் தான் செய்ய வேண்டிய கடமையை மறந்தால் அதிகம் துன்பப்பட நேரிடும்.
  2. எந்த சூழ் நிலையிலும் வழிகாட்டிய‌ குருவை மறக்க கூடாது. அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை முறையாக கொடுக்க வேண்டும்.
  3. மிகவும் உயர்ந்த நிலையில் எவ்வளவு பெரிய பதவி கிடைத்தாலும் தான் என்ற அகங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும். தானே பெரியவன் என்றும் மற்றவர்கள் தன்னைவிட தாழ்ந்தவர் என்ற அகங்காரம் கொண்டாலும் பெண்களை இழிவுபடுத்தினால் அழிவு உறுதி.
  4. திக்கற்ற நிலையில் இறைவனே துணையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.