2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் நூலின் 2 வது படலமாகும். இப்படலக்கதை இதற்கு முந்தைய படலமான இந்திரன் சாபம் தீர்த்த படலத்துடன் தொடர்பு உடையது.

இந்திரன் விருத்தாசூரனை அழித்து அதனால் உண்டான பிரம்மகத்தி தோசத்தை சோமசுந்தரரின் அருளினால் நீங்கப் பெற்று சோமசுந்தரரின் ஆணைக்கிணங்க இந்திரலோகத்துக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினான். இந்திரனை  தேவர்கள் அவனின் வாகனமான வெள்ளை யானை ஐராவதம் உட்பட அனைவரும் அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தேவர்கள் அனைவரும் இந்திரனுக்கு வாழ்த்துக்களையும் பொன்னாலாகிய பரிசுகளையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காசி மாநகரில் துர்வாசர் மாமுனிவர் தன் பெயரால் லிங்கத் திருமேனியை நிறுவி அதனை தினந்தோறும் வழிபட்டு வந்தார். ஒருநாள் துர்வாசர் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் தன் திருமுடியில் இருந்து பொன்னிறமான மணம் வீசும் தாமரை மலரினை துர்வாசகருக்கு கொடுத்தருளினார். துர்வாசரும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். பின்னர் அம்மலரை எடுத்துக் கொண்டு இந்திரனுக்கு பரிசாக தரும் நோக்கில் தேலோகத்திற்கு விரைந்தார். அப்போது இந்திரன் வெள்ளை யானையான ஐராவதத்தின் மீது ஏறி தேவலோகத்தில் பவனி வந்து கொண்டிருந்தான். தேவ மகளிர் மகிழ்ச்சியுடன் பாட்டிசைத்து ஆடிக் கொண்டு அவன் முன்னால் சென்று கொண்டிருந்தனர். வெள்ளை யானையான ஐராவதம் தேவர்களின் தலைவனான இந்திரனை சுமந்து கொண்டு செல்வதை பெருமையாக‌ எண்ணி ஆணவத்துடன் ஊர்வலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தது. துர்வாசர் தேலோகத்தை அடைந்தார். தேவலோகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கண்டதும் துர்வாசர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். இறைவனான சிவபெருமான் தனக்கு கொடுத்த மணம்மிக்க தாமரை மலரினை தன்னுடைய பரிசாக இந்திரனுக்கு துர்வாசர் கொடுத்தார்.

தேவர்களின் வாழ்த்து மழையில் நனைந்திருந்த இந்திரன் தன்னிலை மறந்திருந்தான். அதனால் துர்வாசர் அளித்த பரிசினை அலட்சியமாக வெள்ளை யானையின் மீது வைத்தான். ஆணவம் நிறைந்திருந்த வெள்ளை யானை இந்திரன் வைத்த தாமரை மலரினை தனது துதிக்கையால் எடுத்து காலில் போட்டு மிதித்து நசுக்கியது. இந்நிகழ்ச்சிகளைக் கண்ட துர்வாச முனிவருக்கு கோபம் ஏற்பட்டது. பின் அவர் இந்திரனை நோக்கி இறைவனான சிவபெருமான் கருணைமிகுந்து மணம் மிகுந்த தாமரை மலரினை எனக்கு கொடுத்தார். சொக்கநாதரின் அருளினால் உனக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோசம் நீங்கப் பெற்று புதுப் பொலிவுடன் சொர்க்கலோகத்துக்கு நீ திரும்பிய செய்தியை நான் அறிந்தேன். அதனால் இறைவனின் அருட்பிரசாதமான தாமரை மலரினை உனக்கு பரிசாக கொடுப்பதற்காக நான் இங்கு வந்தேன். ஆனால் நீ தன்னிலை மறந்து அம்மலரின் பெருமைகளை அறியாது உன் யானையிடம் தந்தாய். ஆகையால் உன் தலை எதிர் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனின் சக்கரப் படையால் சிதறடிக்கப்படும். மேலும் அவர் வெள்ளை யானையை நோக்கி இறைவனின் கருணையால் கிடைத்த தாமரை மலரினை அதன் பெருமை அறியாது உன் கால்களால் நசுக்கினாய். ஆகையால் உன் நான்கு கொம்புகளுடன் வெள்ளை நிறமும் நீங்கி பலமும் போய் கருமை கொண்ட காட்டு யானையாக மாறுவாய் என்று இருவருக்கும் சாபம் கொடுத்தார்.

துர்வாசரின் சாபத்தை கேட்டதும் இந்திரன் தன்னிலைக்கு வந்தான். தன்னுடைய ஆணவச் செயலால் மறுபடியும் சாபம் பெற நேர்ந்ததை எண்ணி வருந்தினான். துர்வாசரிடம் முனிவரே தாங்கள் பரிசாக அளித்த தாமரை மலரின் பெருமைகளை அறியாது அதனை தவறாகப் பயன்படுத்தி விட்டேன். எங்களுடைய தவறான செயலினை மன்னியுங்கள். எனக்கும் எனது வெள்ளை யானைக்கும் கொடுத்த சாபத்தினை மாற்றி அருளுங்கள் என்று இந்திரன் வேண்டினான். யானையும் துர்வாசரின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தது. இந்திரன் மற்றும் வெள்ளை யானையின் இச்செயலால் துர்வாசர் மனம் மாறினார். அவர் அவர்களிடம் இறைவனின் அருளினை மதியாது நடந்த உங்களது செயல் குற்றமானது. அதற்கு நிச்சயம் தண்டனை உண்டு. ஆகையால் சாபத்தினை உங்களுக்கு மாற்றித் தருகிறேன். அதாவது உனக்கு தலையளவு கொடுத்த தண்டனை முடியளவாக மாறட்டும். ஆணவச் செருக்கினை உடைய வெள்ளை யானை அறிவிழந்து காட்டு யானையாகி நூறாண்டு கழிந்த பின் இறைவனின் கருணையால் மீண்டும் வெள்ளை யானையாக மாறும் என்று கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

முனிவரின் சாபத்தால் வெள்ளை யானை அறிவிழந்து கருமை நிறம் கொண்ட காட்டு யானையாக மாறி தேவலோகத்தைவிட்டு பூலோகத்திற்குச் சென்றது. காட்டு யானையாக மாறிய ஐராவதம் பூலோகத்தில் உள்ள காடுகளில் சுற்றித் திரிந்தது. நூறாவது ஆண்டின் இறுதியில் கடம்ப வனத்தில் புகுந்தது. கடம்ப வனத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தினையும் சொக்கநாதரையும் கண்டது. தான் யார் என்பதினை அறிந்து பொற்றாமரைக் குளத்தில் இறங்கி நீராடியது. உடனே காட்டு யானை வடிவம் நீங்கி மீண்டும் வெள்ளை யானையாக மாறியது. பின் பொற்றாமரை தீர்த்தத்து நீரினைக் கொண்டு சொக்கநாதரை அபிசேகம் செய்து பொற்றாமரையால் சொக்கநாதரை வழிபட்டது. வெள்ளை யானையின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சொக்கநாதர் வெள்ளை யானைக்கு காட்சி தந்தார். அவர் வெள்ளை யானையிடம் நீ இங்க வந்த காரணம் என்ன? உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். அதனைக் கேட்ட வெள்ளை யானை ஆவணத்தால் தான் சாபம் பெற்றதையும் தற்போது சொக்கநாதரின் அருளால் சாபம் நீங்கப் பெற்றதையும் கூறி ஆணவம் இல்லாமல் பணிந்து வணங்கியது. பின் அது இறைவனாரிடம் தங்களுக்கு கூரையாக அமைந்திருக்கும் இவ்விமானத்தினை தாங்கும் எட்டு யானைகளோடு நானும் ஒன்பதாவது யானையாகி இவ்விமானத்தை தாங்கி தங்களைப் பிரியாது இருக்க வேண்டும். என்று வேண்டியது. அதற்கு சொக்கநாதரும் இந்திரன் என்னிடம் மிகுந்த அன்பு பூண்டவன். ஆதலால் அவனை நீ சுமப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று கூறி பல வரங்களை அருளினார். பின்னர் வெள்ளை யானை சோமசுந்தரருக்கு மேல்திசையில் ஐராவத தீர்த்தத்தையும் ஐராவதேச்சுரர் லிங்கத் திருமேனியையும் ஐராவத விநாயகப் பெருமானையும் உருவாக்கி வழிபட்டு வந்தது.

இந்திரன் தனது வெள்ளை யானையின் சாபம் நீங்கப் பெற்றதை அறிந்து அதனை அழைத்து வர தேவர்களை அனுப்பினான். அவர்களிடம் அந்த யானை வருவேன் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டது. பின் சொக்கநாதருக்கு கீழ்திசையில் ஐராவதநல்லூர் என்ற ஊரினை உருவாக்கியும் அவ்வூரில் இந்திரேஸ்வரர் என்ற லிங்கத்தை உண்டாக்கியும் வழிபட்டு வந்தது. இந்திரன் மீண்டும் தேவர்களை அனுப்பி ஐராவதத்தை அழைத்து வரச் சொன்னான். வெள்ளை யானையும் இந்திரனின் வேண்டுகோளை இறைவனை வழிபட்டு விடை பெற்றது. இறைவன் வெள்ளை யானை உண்டாக்கிய ஐராவதேஸ்வரரை வழிபட தீவினைகள் நீங்கப் பெறுவர் என்றும் இந்திரேஸ்வரரை வழிபட இம்மையில் எல்லா வளங்களும் பெற்று மறுமையில் இந்திரப் பதவி பெற்று இறுதியில் வீடுபேற்றினைப் பெறுவர் என்றும் வரம் கொடுத்து ஐராவதம் யானைக்கு விடை கொடுத்தார். ஐராவதம் இந்திரலோகம் சென்று தனது கடமையை ஆற்றத் தொடங்கியது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

ஐராவதேஸ்வரர் மற்றும் இந்திரேஸ்வரர் ஆகிய இரண்டு லிங்கங்களை உலகிற்கு காட்டி அருளினார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் அனைவருக்கும் சொல்லும் கருத்து:

உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் தன்னிலை மறந்து ஆணவச் செயல்களில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவர்களுக்கான தண்டனையானது வந்தே தீரும். தான் செய்த தவறை உணர்ந்து ஐராவதேஸ்வரர் மற்றும் இந்திரேஸ்வரரை சரணடைந்தால் இறைவன் அவர்களுக்கு நன்மை புரிந்து அருளுகிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.