ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 182

அகத்திய மாமுனிவர் பொது வாக்கு:

இஃதொப்ப அறம் வருகை அதைத் தொடர்ந்து இறை வருகை.
இயம்புங்கால் சத்தியம் வருகை பின்னாலே பரம்பொருள் வருகை.
இயம்பிடுவோம் நல் உறவு வருகை அவற்றால் நல் உரிமை வருகை.
நன்றில்லா சூழல் வருகை. என்றால் அதோடு தீ கர்மா வருகை.
நலமான பிராத்தனை வருகை. தொடர நன்றில்லா சூழல் வருகையாகா.
திருப்தி வருகை. பெருங்கால் அமைதி வருகை.
அழகு வருகை. பெருங்கால் உடன் அவதி வருகை.
யுவதி (பெண்) வருகை. பெருங்கால் உடன் சலனம் வருகை.
பக்தி வருகை. அவற்றாலே புண்ணியம் வருகை.
பொன் வருகை. நல்கிடும் தேவையற்ற பொறாமை வருகை.
நன் வருகை. உள்ளத்தில் எழ பரப்பிடும் நல்மதிப்பு வருகை.
உயர் சொல் வருகை. வரத்தான் பல் வருகை வருமே.
அதிக நெல் வருகை. கிருடி தசத்தோனுக்குத் தருமே மகிழ்வு வருகை.
எவ்வருகை ஆனாலும் எதிர்பார்ப்பு வருகை இல்லாதிருக்க என்றும் தொடரும் சாந்தி வருகை.
பிழை வருகை தொடர அழும் வருகை தொடரும்.
பீடு வருகை. வேண்டுமென்றால் வாயை மூடும் வருகை வேண்டும்.
உள்ளுக்குள் இறைவனைத் தேடும் வருகை. அவற்றை நாளும் தேடு வருகை.
நாடி நாடி அயர்ந்து போகாமல் புத்துணர்வில் சிலிர்க்கும் வருகை.
மயக்க வருகையால் வரும் தயக்க வருகை. உள்ளம் சோர்வு வருகை.
தொடரும் எண்ண வருகை. நல் எண்ண வருகை சோரா வருகையாகும்.
பொன் வருகை விட்டு புகழ் வருகை விட்டு பற்றற்ற வருகை.
நிதி வருகை விட்டு நீதி வருகை. அதுவே புண்ணிய நதி வருகையாகும்.
காலம் காலமாக நல் இசை வருகை. மனதிற்கு நல் சுவை வருகை.
கடந்த கால அசை வருகை. சோகம் தரா சுகம் தர எதிர்கால நிலை வருகை.
எதுவானாலும் இறை வருகை இருக்கும் வண்ணம் சுகம் வருகை.
தொடரும் நேரம் வருகை. தொடரா தேகத்தில் பிணி வருகை கர்மத்தின் தனி வருகையாகும்.
இனி வருகை இதம் வருகையாக உள்ள உலைச்சல் வருகை விட்டுவிடும் வருகையாக
நித்தம் நித்தம் சித்தம் வருகையாக மனம் கொண்டாடு வருகையாக
தேகத்தில் அசதி வருகை வரா. ஆக்கையில் தளர் வருகை வரா.
என்றென்றும் அன்பு வருகை வர தேவையில்லா விமர்சன வருகை விட.
உள்ள ஆசனத்தில் இறை வருகை தன்னை அமர வைக்க.
இரை வருகை வாழ்வில்லை.
இறை வருகை வாழ்விருக்கும்.
இனி வருகை இனிய வருகை வாழ மற்றவரிடம் இருந்து தனி வருகை வாழ.
வாழ்க்கையில் நீடித்த இன்பக்கனி வருகை வாழ
பல முனி வருகை நல்லாசி தர முகத்தில் ஜோதி வருகை மிளிர
அசதி வருகை நீங்கி அயர்வு வருகை ஒழிந்து என்றென்றும் மகிழ்வு வருகை தொடர
இறை வருகை எண்ணி இனி இறையருளே செல்லும் வண்ணம் வாழ்வை அமைத்துக் கொள்ள அதுவே நல் வருகையாகும். ஆசிகள்.

வருகை என்ற தமிழ் வார்த்தை வைத்து அகத்தியர் தமிழில் விளையாடி இருக்கிறார். இதன் விளக்கம் பலருக்கு புரியாது என்கின்ற காரணத்தால் இதன் விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.

இது போலவே அறம் தர்மத்தை யார் கடைபிடித்து வந்தாலும் அதைத் தொடர்ந்து இறைவனும் வருவான். சொல்லப் போனால் சத்தியத்தை யார் கடைபிடித்து வந்தாலும் அவர்களின் பின்னாலேயே பரம்பொருள் வருவான். சொல்லுவோம் நன்மையான உறவுகளை எவர் வளர்த்துக் கொள்கிறாரோ அவற்றால் அவருக்கு நல்ல உரிமைகளும் கிடைக்கும். நன்மை இல்லாத சுற்றுப் புறத்தை யார் வளர்த்துக் கொள்கிறாரோ அவருக்கு அந்த சுற்றுப் புறத்தோடு தீய கொடுமையான கர்மங்களும் வரும். நல்ல விதத்தில் அன்போடு செய்யப்படும் பிராத்தனை யார் செய்கிறார்களோ அவரைத் தொடர்ந்து நன்மை இல்லாத சுற்றுச் சூழல் எப்போதும் வராது. தம்மிடம் இருப்பதில் எவர் திருப்தியாக இருக்கின்றாரோ உண்மையான திருப்தி கிடைத்த பொழுதே மன அமைதியும் கிடைக்கும். வெறும் உடல் அழகை வளர்த்து வந்தால் அழகு கிடைத்த பொழுதே அதனுடன் சேர்ந்து துன்பமும் நோய்களும் வரும். இளம் பெண்ணை அடைய வேண்டும் என்று நினைத்தால் அப்பெண் கிடைத்த பொழுதே அவளுடன் சேர்ந்து மனதில் காம சலனங்களும் வரும். உண்மையான பக்தி ஒருவருக்கு வந்தால் அந்த பக்தியினாலே புண்ணியம் வரும். ஒருவருக்கு அதிகமாக செல்வம் வந்தால் அது கொடுக்கும் தேவை இல்லாத / வீணான பொறாமையும் வரும். நன்மைகள் உள்ளத்தில் வந்தால் அவருடைய உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் எழுந்து அவரைச் சுற்றி நல்ல அதிர்வலைகளாக பரவி அதனால் பிறருக்கு அவர் மேல் நல்ல மரியாதை வரும்.

உயர்வான / கனிவான / இனிமையான வார்த்தைகள் ஒருவரிடமிருந்து வந்தால் அது வர வரவே அனைத்து பல்லும் தெரியும் படி ஆத்மார்த்தமான சிரிப்பும் பிறரிடமிருந்து வந்து கொண்டே இருக்குமே. அதிகமாக நெல் தானியங்கள் விளைந்து வந்தால் கஷ்டப்பட்டு விவசாயத்தில் இருக்கும் பத்து விதமான செயல்களையும் செய்து அறுவடை செய்தவனுக்கு அதுவே தரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்கும். எந்த விதமான நன்மை தீமைகள் வருவதாக இருந்தாலும் அதை எதிர்பார்த்து வருகின்ற உள்ளம் இல்லாமல் எவர் இருக்கிறாரோ அவருக்கு எப்போதும் தொடர்ச்சியாக அமைதி வரும். தவறானவை வரும் பொழுது அதைத் தொடர்ந்து துன்பத்தினால் அழுகை வருவதும் தொடரும். கெடுதல் வரும் பொழுது அதை அனைவருக்கும் சென்று சொல்லிக் கொண்டு இருக்காமல் வரும் கெடுதல்களைத் தாங்கிக் கொண்டு இருக்கும் மன பலம் வர வேண்டும். உள்ளுக்குள் இறைவனை உண்மையான தேடுதல் வந்து விட்டால் அவற்றை தினமும் அவரைத் தேடி இறை ஞானமும் தன்னாலேயே வரும். இறைவனைத் தேடி தேடி சோர்ந்து போகாமல் புத்துணர்ச்சி பெற்று நடக்கும் அதிசயங்களால் சிலிர்த்து விடும் அளவிற்கு நன்மைகள் வரும். மாயையில் மயங்கி இருக்கின்றவர்கள் இறைவனுக்காக எதைச் செய்தாலும் அதில் ஒரு இனம் புரியாத தயக்கமே வந்தால் அவர்களின் உள்ளம் சோர்ந்து போகும். ஒருவருக்குத் தொடர்ச்சியாக நல்ல எண்ணங்கள் வந்து கொண்டே இருந்தால் அந்த நல்ல எண்ணங்களால் வரும் நல்ல அதிர்வலைகளால் எப்போதும் சோர்வு என்பதே வராமல் இருக்கும்.

செல்வம் வந்தால் அதை விட்டுவிட தர்மத்தை வளர்க்க வேண்டும். புகழ்ச்சி வந்தால் அதை விட்டுவிட பெருந்தன்மை வளர்க்க வேண்டும் அப்போது ஒருவருக்கு எதன் மேலும் பற்று இல்லாத நிலை வரும். செல்வம் வந்தால் அதை விட்டுவிட்டு தர்மத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே புண்ணியங்களை ஆறு போல அழைத்து வரும். காலம் காலமாக நன்றாக அமைக்கப்பட்ட இசை வந்தால் அதை கேட்கின்ற மனதிற்கு நன்மையான இனிமை வரும். கடந்த கால விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி அதில் நாம் செய்த தவறுகளை பார்த்து திருத்திக் கொண்டு இருந்தால் சோகம் இல்லாத சுகத்தை அது தருகின்ற அளவிற்கு எதிர் காலத்தில் நல்ல நிலை கிடைக்கும். எதுவானாலும் இறைவனை நமது எண்ணத்தில் வைத்து இருக்கும்படி செய்து கொண்டே இருந்தால் நல்ல இன்பத்தை கொடுக்கின்ற விஷயங்களும் நடக்கும். நன்மையைத் தொடர்ந்து செய்கின்ற காலங்களில் நன்மை வந்து கொண்டே இருக்கும். நன்மையை தொடர்ந்து செய்யாத உடலில் விதவிதமான நோய்கள் வருவது மட்டுமின்றி தீய கர்மங்களும் தனியாக வந்து சேரும். இனிமேல் எதிர்காலத்தில் வருகின்ற அனைத்தும் இதமான அனுபவத்தைக் கொடுக்கும் காலங்களாகவும் உள்ளத்தில் அமைதி இன்மை வந்து சேர்வதை விட்டு விடுகின்ற காலங்களாகவும் அமைய வேண்டும் என்றால் தினம் தினமும் எண்ணத்தில் இறைவனை வைத்து மனதில் இறைவனையே போற்றி வணங்கி வர வேண்டும் அப்படி செய்பவர்களின் உடலில் சோர்வு என்பதே வராது. அவர் உடலுக்கும் முதிர்ச்சியால் வரும் தளர்வும் வராது.

என்றென்றும் அனைவரிடத்திலும் அன்பு வர வேண்டும் மற்றவர்களிடம் தேவை இல்லாத வீண் விமர்சனங்கள் வருவதை விட்டுவிட வேண்டும். நம்மிடம் உள்ள இருக்கையில் / அமர்ந்து இருக்கின்ற விதத்தில் இறைவனை வரவழைத்து தம்மேடு அவனையும் அமர்ந்து இருக்கும் படி வைக்க வேண்டும் / தியானம் செய்து இறைவனை நமது மனதிற்குள் வீற்றிருக்கும் படி செய்ய வேண்டும். உணவு எப்போது கிடைக்கும் என்று அதற்காக அலைவது வாழ்க்கையின் குறிக்கோள் இல்லை. இறைவன் எப்போது கிடைப்பான் என்று அதற்காக முயற்சி செய்வதே வாழ்க்கையின் குறிக்கோள் ஆகும். இனி எதிர்காலத்தில் வரும் அனைத்தும் இனியவையாகவே வர வேண்டும் என்று வாழ்வதற்கு மற்றவரிடம் இருந்து தனித்து இருக்கும் தியான வாழ்க்கையை வாழுங்கள். வாழ்க்கையில் நீடித்த இன்பங்கள் நல்ல பழங்களைப் போல சுவையுடன் வரும் வாழ்க்கையை முறைப்படி வாழ்பவர்களுக்கு. பல விதமான சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் இந்த உலகத்தில் வருவது நல்லாசி தர முகத்தில் ஜோதி வந்து பிரகாசிக்கவே சோர்வு வருவதை நீக்கி சோர்வு வருவதை ஒழித்து எப்போதும் மகிழ்வு வருவது தொடர்ந்து இருக்க இறைவனை உள்ளத்தில் வர வைத்து அவனையே எப்போதும் எண்ணிக் கொண்டு இனி இறையருளே நோக்கி செல்லும் விதத்தில் நமது வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டால் அதுவே நன்மையான பல இறை அருளைக் கொண்டு வரும் ஆசிகள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.