அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:
ஒவ்வொரு மனிதனின் மனம் எப்படி? என்பது எமக்குத் தெரியும். ஒவ்வொரு மனிதனையும் இறை சக்தியைக் கொண்டு பக்குவம் அடைந்த மனிதனாக மாற்ற முடியும் என்றாலும் கூட இறைக்கு வேலை அதுவல்ல. அன்னவன் உழன்று சிதிலப்பட்டு பக்குவப்பட்டு வேதனைப்பட்டு கவலைப்பட்டு கஷ்டப்பட்டு தன்னைத் தானே மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் இறையின் எண்ணமாகும். பல்வேறு மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) சிந்தனை செயல் வழியில் அனேக உளைச்சல்கள் வருவது இயல்புதான். முதலில் மனிதன் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். ஒருவன் கூறுகின்ற யோசனை மற்றவருக்கு நன்மையாக படலாம் அல்லது தீமையாக படலாம். அதைக் கேட்பவனுக்கு எது நன்மையோ அதை பின்பற்ற வேண்டும். பொது நலம் கருதி கூறப்படும் விஷயங்கள் எல்லாம் ஏக ஏக மாந்தனும் (மனிதனும்) பின்பற்றுவது என்பது அவனவன் மனவலிமையைப் பொறுத்தது. பலருக்கும் தன சிக்கல். அன்னை மகாலட்சுமியையும் குபேரனையும் வழிபட உரைத்தால் யாரும் செய்வதில்லை. இதோடு அவரவர் சார்ந்த தொழிலில் முயன்று ஈடுபட நலம் விளையும். தோல்வி பற்றி கலக்கம் கொள்ளாமல் முயற்சியைத் தொடர வேண்டும். வெற்றி நிச்சயம் என்று அறிந்து கொண்டு எவன் ஒருவன் ஈடுபடுகிறானோ அவன் செயல் வீரன் அல்ல. தோல்வி நிச்சயம் என்று தெரிந்த பிறகும் ஈடுபடுவது உசிதமல்ல என்றாலும் தெரியாத நிலையில் முயற்சி செய்வதும் தவறு இல்லை. அந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
