கேள்வி: முற்பிறவியில் செய்த பாவங்களை நீக்குவதற்கு என்ன செய்வது?
இறைவனின் கருணையாலே ஒரு வார்த்தைக்குக் கூறுவதுதானப்பா. சென்ற பிறவியில் செய்தது இந்தப் பிறவியில் தாக்குகின்றது என்று. அது உண்மைதான். ஆனால் அதற்காக இந்தப் பிறவியில் யாரும் பாவமே செய்யாமல் இருக்கிறார்களா? இல்லையே. இந்தப் பிறவியிலும் தவறு மேல் தவறு செய்துவிட்டு அதற்கு சமாதானமும் கூறிக் கொண்டுதான் எம்முன்னே வந்து அமர்கிறார்கள். நீ இந்த பாவங்களை செய்து விட்டு வந்திருக்கிறாய். எம்முன்னே அமராதே. எழுந்து செல் என்று நாங்கள் கூறுவது அத்தனை சிறப்பாக இராது என்பதால்தான் பொதுப்படையாக சென்ற பிறவி பாவம் என்று கூறி வைக்கிறோம். அதே சமயம் ஒரு மனிதன் செய்கின்ற பாவத்தால் எத்தனை ஆத்மாக்கள் எத்தனை காலம் பாதிக்கப்படுகிறது? என்பதைப் பொறுத்தும் அந்த பாவம் முதல் பாவமா? அதாவது முன்னர் அந்த ஆத்மா இவனுக்குத் தீங்கு செய்ததால் அதற்கு பிரதிபலனாக இவன் ஒரு செயல் செய்து அந்த ஆத்மாக்கள் பாதிக்கப்பட்டனவா? அல்லது புதிதாக இவன் எடுத்த முடிவால் செயலால் அந்த ஆத்மாக்கள் பாதிக்கப்பட்டனவா? என்பதையெல்லாம் பார்த்து ஒரு மனிதன் செய்கின்ற செயல் அல்லது அந்த செயலால் ஏற்படுகின்ற விளைவு எத்தனை மனிதர்களுக்கு எத்தனை காலம் எந்தவிதமான கடினங்களைத் தந்திருக்கிறது? என்பதை பார்த்து அதே அளவு அதற்கு சமமான ஒரு பிரதிபலனை செய்த மனிதன் நுகரும் வரை ஒரு பாவம் கூட ஒரு மனிதனை விட்டு செல்லாது. ஆனால் குறுக்கு வழி எதாவது இருக்கிறதா? என்றால் ஏதுமில்லை. பெரும்பாலான பாவங்கள் மனிதன் அறிந்தே செய்வது. சில பாவங்கள் அறியாமல் செய்வது.
பதவி இருக்கிறதே என்ற மமதையில் செய்வது. தன்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது என்ற ஆணவத்தில் செய்வது தன் உடலில் பலம் இருக்கிறது என்று செய்வது. இப்படியெல்லாம் செய்துவிட்டு பிறகு அழுவதால் கூக்குரலிடுவதால் பலனென்ன? எனவே மெல்ல மெல்ல நுகர்ந்துதான் பாவங்களை அனுபவிக்க வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு முதலில் ஒரு மனிதன் செய்ய வேண்டியது இனி விழிப்புணர்வோடு இருந்து கடுகளவு கூட பாவ எண்ணங்கள் இல்லாமலும் செய்யாமலும் வாழ முயற்சி செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அதிகம் அதிகம் அதிகம் அதிகம் புண்ணிய காரியங்களை தர்ம காரியங்களை செய்ய வேண்டும். அன்றாடம் ஒரு ஆலயமாவது சென்று மனம் ஒன்றுபட்டு வழிபாடு செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து கடைபிடித்தால் நல்ல பலன் உண்டு.