ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 403

கேள்வி: மனித சக்திக்கு அப்பாற்பட்ட கண்ணுக்கு புலப்படாத விஷயங்கள் குறித்து பின்னர் உரைக்கிறோம் என்று சொல்லியிருந்தீர்கள். இப்பொழுது உரையுங்கள் குருநாதா குறிப்பாக இச்சாதாரி பாம்புகள் குறித்து உரையுங்கள்:

பலவிதமான வினாக்களுக்கு யாங்கள் பின்னர் உரைக்கிறோம் என்றுதான் கூறியிருக்கிறோம். காரணம் ஒன்று இறை அனுமதிக்க வேண்டும். அல்லது கேட்கின்ற மனிதனின் கிரக நிலை அதற்கு இடம் தரவேண்டும். எல்லாவற்றையும்விட நாங்கள் கூறுவதை சரியாக புரிந்து கொள்ளக் கூடிய மனோபாவம் அவனுக்கு இருக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டிதான் சில வாக்குகளை யாங்கள் கூற இயலும். எல்லாவற்றையும்விட எந்தெந்த கிரக நிலையில் எந்த வாக்கை கூற வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதுபோல் நிலையிலே மனித சக்திக்கு மேற்பட்ட பல்வேறு விஷயங்கள் மனிதனுக்கு புரிவதில்லை என்பது இருக்கட்டும். மனித சக்திக்கு உட்பட்ட பல விஷயங்களே மனிதர்களுக்கு புரிவதில்லையே? ஓரே காலம் இதே நூற்றாண்டு இதே தேசம் இங்குள்ள மனிதர்களிலேயே எத்தனை வேறுபாடுகள்? ஒரு மனிதனிடம் இருக்கும் திறமை இன்னொரு மனிதனிடம் இல்லை. ஒரு மனித கூட்டத்திடம் இருக்கும் ஆற்றல் இன்னொரு மனித கூட்டத்திடம் இல்லை.

புதிதாக ஒன்றை அவன் கண்டுணர வேண்டாம். ஏற்கனவே யாரோ கண்டு பிடித்ததைக் கூட அதை பார்த்து பிரதியெடுக்க தெரியாமல்தானே மனிதர்கள் வாழ்கிறார்கள். இந்த பாரத பூமியில் தன்னுடைய ஆற்றலையே உணர முடியாமல்தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எனவே மனிதர்கள் தன்னை நன்றாக புரிந்து கொண்டால்தான் தனக்கு மீறிய ஆற்றலை புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும். நாங்கள் ஆயிரம் வார்த்தைகளில் கூறினாலும் அது புரிவது கொஞ்சம் கடினம்தான்.

இச்சாதாரி பாம்பு இருக்கிறது என்றால் அடுத்த வார்த்தை அது எங்கே இருக்கிறது? யாங்கள் புறக்கண்ணால் பார்க்க முடியுமா? என்றெல்லாம் கேட்பான். அவன் கண்ணால் பார்த்தால்தான் அவன் நம்பக்கூடிய நிலை வரும். அப்படி கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் அந்தக் கண்ணுக்கென்று சில ஆற்றல்கள் வேண்டும். சில விஷயங்கள் மனிதனின் புறக்கண்ணுக்கு தெரிவதில்லை என்பதால் அது இல்லை என்று ஆகிவிடுகிறது. எத்தனையோ விதமான கதிரியக்கங்கள் மனிதனை சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுபோல் அக சிகப்பு கதிர்கள் புற ஊதா கதிர்கள் இவைகள் மனிதனின் கண்ணுக்குத் தெரியாது. தெரியாது என்பதால் இவைகள் இல்லை என்று ஆகிவிடாது. எனவே மனிதர்கள் தனக்கு மேற்பட்ட சக்தியையோ அல்லது வேறு விஷயத்தையோ புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற ஆற்றலை அல்லது தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக் கொண்டால் ஒவ்வொரு விஷயமும் புரியும். தன்னை சுற்றி நடக்கின்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றையும் இறையாற்றலோடு தொடர்புபடுத்தி பார்க்க பழகிவிட்டாலே ஒவ்வொன்றிலும் அற்புதம் இருப்பதும் புரியும். மனித சக்திக்கு மேம்பட்ட விஷயம் இருப்பதும் புரியும். எனவே தன்னைத்தான் உயர்த்திக் கொண்டு தன்னிடம் பாவ கர்மா இல்லாத நிலையில்தான் இவைகள் எல்லாம் சொன்னாலும் புரியும் புரிந்து கொள்ளவும் இயலும் நேரில் பார்க்கவும் இயலும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.