ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 518

கேள்வி: பொது நலவாதிகளை விட சுயநலவாதிகள் தான் சுகமாக வாழ்கிறார்கள் இன்றைய காலகட்டத்தில் ஏன் இந்த மாறுபட்ட நிலை?

பதில்: இறைவன் அருளால் சுகம் என்றால் என்ன என்று நீ எண்ணுகிறாய்? (மன நிம்மதி வறுமையில்லாத நோய் நொடியில்லாத வாழ்வு) ஒன்றைப் புரிந்து கொள். ஒரு மனிதனுக்கு எந்த சூழலும் நிம்மதியையோ சந்தோசத்தையோ தருவதில்லை. அவனுடைய மனநிலையை பொறுத்து தான் வாழ்க்கை நிலை என்பது. நிறைய தனம் தான் சந்தோசம் என்றால் தனவான்கள் அத்தனை பேரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். (இருக்கிறார்களா?) மிகப்பெரிய பதவிதான் நிம்மதி என்றால் பதவியில் இருக்கக் கூடியவர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும். (இருக்கிறார்களா?) ஆக ஒவ்வொரு மனிதனின் மனநிலை மனப்பக்குவம் மனமுதிர்ச்சி இதை பொறுத்துதான் சுகமும் துக்கமும் உன் மனதை நீ திடமாக வைரம் போல் உறுதியாக வைராக்யமாக பெருந்தன்மையாக நேர்மையாக நீதியாக சத்திய நெறியில் வைத்துக் கொண்டால் இறை வழியில் செல்வதற்கு உன்னை தயார்படுத்திக் கொண்டால் நீ எங்கு இருந்தாலும் சுகமாக இருக்கலாம். நலமாக இருக்கலாம். எனவே சுகம் என்கின்ற லோகாய விஷயத்தை பார்த்து அதை உன்னோடு ஒப்பிட்டுப் பார்த்து குழப்பம் கொண்டிட வேண்டாம்.

உன் தேவைகள் என்ன? என்பதை உன்னைப் படைத்த இறைவன் நன்றாக புரிந்திருக்கின்றான். நோயற்ற குழந்தைக்கு எதைத் தர வேண்டும்? ஆரோக்கியமான குழந்தைக்கு எதை தர வேண்டும்? என்பதை தாய் அறிவாள் என்பதைப் போலத்தான் உன்னுடைய துன்பம் அல்லது உன்னொத்து உள்ளவர்களின் துன்பத்திற்கு காரணம். முன் ஜென்ம பாவத்தின் தாக்கம். இந்த பாவத்தை குறைத்துக் கொள்ளத்தான் நாங்கள் விதவிதமான வழிபாடுகளை கூறுகின்றோம். கண்ணீர் மல்க எம் முன்னே அமருகின்ற ஒவ்வொரு மனிதனையும் பார்க்க பரிதாபமாக இருந்தாலும் அந்த மனிதன் செய்த செயலால் பாதிக்கப்பட்ட ஆத்மாவின் கதறல்கள் என் செவியின் விழும் சமயம் இறைவன் சரியாகத்தான் ஒவ்வொரு மனிதனையும் வைத்திருக்கிறான் என்று எமக்கு தெரிகிறது. அதையும் தாண்டி எத்தனையோ பிறவிகளில் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு இப்பொழுது நாங்கள் நல்லவர்களாக இருக்கிறோம் எங்களை வாழ விடுங்கள் என்று ஒவ்வொரு மனிதனும் மெய்யாக மெய்யாக மெய்யாக இறைவனை நோக்கி வேண்டினால் கட்டாயம் நன்மைகள் நடக்கும். ஒருவன் சுகமாக இருக்க வேண்டும் என்றால் பிறர் சுகத்தை கெடுக்கக்கூடாது. ஒருவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் பிறர் நிம்மதியை கெடுக்கக்கூடாது. ஒருவன் பிறரின் வார்த்தைகளால் காயப்படக்கூடாது என்றால் பிறறை வார்த்தைகளால் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். எனவே இதையெல்லாம் மனதிலே வைத்துக் கொண்டு உன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு நீ உன் பக்தி வழியில் தொடர்ந்து செல்ல செல்ல உன் வாழ்க்கையிலும் நிம்மதி வரும்.

இறைவனின் கருணையை கொண்டு சிறு வயது முதலே மனதை அடக்கி தக்க உணவை ஏற்பதும் வாய் பார்த்து உண்ணாமல் வயிறு பார்த்து உண்ணுகின்ற பழக்கமும் உடல் உழைப்பிற்கு ஏற்ப உணவை தேர்ந்தெடுக்கின்ற அறிவும் அதுபோல் அன்றாடம் சிறு சிறு உடற்பயிற்சியும் யோகாசனங்களையும் முறையாக செய்வதும் அனைத்தையும் ஒரு நெறிக்கி உட்படுத்தி காலாகாலத்தில் செய்து கொள்ள பழகிக் கொள்வதும் கட்டாயமாகும். இதனையும் தாண்டி பாவ கர்ம வினையால் நோய் பற்றும் பொழுது மனிதன் இறை வழிபாடு குறிப்பாக தன்வந்திரி வழிபாட்டை செய்வதோடு அதுபோல் நோயற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் அதாவது எந்த மனிதன் ஏழை நோயாளிகளுக்கு முடிந்த மருத்துவ உதவிகளை செய்கிறானோ அவன் நோயிலிருந்து காப்பாற்றப்படுவான். முன்னோர் காலத்தில் 300 ஜென்மத்திலே இலவச மருத்துவ மனைகளை கட்டி சேவை செய்தவன் மறு ஜென்மத்திலே முழுக்க முழுக்க ஆரோக்கியமானவனாக பிறக்கிறான் இதை மனதிலே கொண்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய ஏழை எளிய மக்களுக்கு எவனோருவன் மருத்துவ சிகிச்சைக்கு உண்டான செலவினங்களை ஏற்கிறானோ அவன் கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாகாமல் இறைவனால் ஆட்கொள்ளப்படுவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.