ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 209

அகத்தியர் மாமுனிவரின் பொதுவாக்கு

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் யாம் அடிக்கடி எமை (அகத்திய மாமுனிவர்) நாடுகின்ற மாந்தர்களுக்கு கர்ம வினைகளின் தாக்கம் குறித்து எடுத்து இயம்பிக் கொண்டே இருக்கிறோம். இந்த பாவவினைகள் ஒரு மனிதனை சுற்றி பின்னிப் படர்ந்து கொண்டே இருக்கும் அந்த நிலையிலே ஒன்று நல்லதை செய்ய மனம் விரும்பாது. அடுத்தாக மேலும் தவறு மேல் தவறு செய்து பாவங்களை சேர்த்துக் கொள்ளவே தூண்டும். ஆனால் அந்த பல்வேறு பாவங்களிலும் ஏதாவது ஒரு புண்ணியம் (அவன்) இறை வழியில் வர வேண்டும் என்று இருக்கும் பட்சத்திலே அந்த ஆத்மாக்கள் மட்டுமே பிறக்கும் தருணம் ஓரளவு மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இறை ஆலயங்களை தரிசித்து இயன்ற தர்மங்களை செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெறும் தனத்தை சேர்த்துக் கொண்டு அதனால் ஆவது என்ன? என்ற ஒரு முடிவுக்கு வரும். ஆனால் அந்த நிலையில் வந்தாலும் மனம் தடுமாறும். பிறரை ஒப்பிட்டுப் பார்த்து அவர்களெல்லாம் இது போல் எதுவும் செய்யாமல் நன்றாக வாழ்கிறார்களே? நேற்றை விட இன்றைக்கும் இன்றை விட நாளைக்கும் பொருளாதாரத்தில் உயர்ந்து காணப்படுகிறார்களே? நாம் அவ்வாறில்லாமல் கடவுள் பிறவி தர்மம் என்று ஒருவேளை தவறாக புரிந்து கொண்டு செல்கிறோமோ என்றெல்லாம் குழப்பம் வரும்.

இது போன்ற தருணங்களில் எம் (அகத்திய மாமுனிவர்) வழியில் வருகின்ற மனிதர்கள் பொறுமையோடும் திட சிந்தனையோடும் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையிலே ஒரு மனிதனின் வினைப் பயனை ஒட்டியேதான் வாழ்வு முழுவதும் நடக்கும் என்றாலும் யாம்(அகத்திய மாமுனிவர்) அந்த வினையில் வேறு வகையான மாற்றங்கள் செய்கிறோமோ இல்லையோ தொர்ந்து இறை வழியில் வருவதற்குண்டான வலுவை தரத்தான் நாங்கள் (சித்தர்கள்) எமை நாடுகின்ற மாந்தர்களுக்கு உதவுகிறோம். ஆனால் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. எமை நாடுகின்ற மனிதர்கள் மனோரீதியாக வல்லவனாகவும் இருக்க வேண்டும். அது எங்ஙனம் என்றால் தன்னை சுற்றியுள்ள மனிதர்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். வெறும் தவறுகளையே செய்து கொண்டு சுயநலமாய் வாழ்ந்து கொண்டு தனம் தான் பிரதானம் என்று வாழ்கின்ற மனிதர்களுக்கே அத்தனை தன்னம்பிக்கையும் தைரியமும் இருக்கும் பொழுது நிரந்தரமில்லாத ஒரு வாழ்வை நோக்கி செல்கின்ற அந்த மனிதனே திடமாக இருக்கும் பொழுது இறைவனை நோக்கி செல்கின்ற ஒரு மனிதன் திடமாக இருக்க வேண்டாமா? சிறிய கஷ்டம் வந்து விட்டாலும் கூட சித்தர்களை நம்பினோம். சித்தர்கள் இப்படி செய்து விட்டார்களே என்று அங்கலாய்ப்பது என்பது எம்(அகத்திய மாமுனிவர்) வழியில் வருகின்ற மனிதர்களுக்கு இயல்பாகிக் கொண்டே இருக்கிறது. அல்லது இவையெல்லாம் நடக்கப் போகிறது என்று சித்தர்களுக்குத் தெரியாதா? ஏன் எச்சரிக்கைவில்லை? என்றும் கேட்கிறார்கள்.

எதைக் கூற வேண்டும், எதைக் கூறக் கூடாது என்று நாங்கள் மட்டும் முடிவெடுப்பதில்லை. இந்த இந்த ஆத்மாக்களுக்கு இதை இதை உணர்த்து என்று இறை கட்டளையிடுகிறது. அந்த கட்டளைக்கு ஏற்பவும் எமை நாடுகின்ற மனிதனின் மனோ திடத்திற்கும் பக்குவத்திற்கும் ஏற்பவும்தான் நாங்கள்(சித்தர்கள்) வாக்கை பகிர்ந்து கொண்டே இருக்கிறோம். ஆக கடுமையான ஊழ்வினை தோஷம் ஒரு மனிதனை பாடாய் படுத்துகிறது. எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் வருகிறது. அந்த நிலை இன்னும் அவனுக்கு 20 ஆண்டுகள் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலை உள்ள ஒரு மனிதன் எமை நாடுகிறான். இன்னும் 20 ஆண்டுகள் உனக்கு கஷ்டம் தான் நீடிக்கும் என்று எமது வாக்கால் கூற இயலுமா? அவனுக்கு இருக்கின்ற கர்ம வினைகளை எப்படி குறைக்க வேண்டும்? எந்த வினையை எப்படி மாற்ற வேண்டும் என்றெல்லாம் நாங்கள் அனுமானம் செய்து இறையிடமும் உத்தரவைக் கேட்டு அதற்கு ஏற்றாற் போல் நாங்கள் செய்து கொண்டே இருக்கிறோம்.

அந்த நிலையிலே அது போல மனிதன் வரும் பொழுதெல்லாம் இதை செய் அதை செய் என்றும் சில சமயங்களில் 3 மாதங்கள் ஆகட்டும் 6 மாதங்கள் ஆகட்டும் முன்பு உரைத்த வழிபாட்டை செய் என்றும் கூறி அவனுடைய கர்ம வினையை குறைக்க முயற்சி செய்கிறோம். ஆனால் எமது வாக்கையோ வாக்கின் நுட்பத்தையோ சரிவர புரிந்து கொள்ள முடியாத நிலையிலே மனிதன் குழம்புகிறான். இங்கு வந்து விட்டாலோ சித்தர்களின் வாக்கை கேட்டு விட்டாலோ மறுதினமே எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று எண்ணுகிறான். தீரலாம் தீருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு ஒரு ஆன்மா தன்னை தயார் செய்து தகுதி படைத்திருக்கிறதா? என்று பார்க்கவேண்டும். பொறுமை இருக்க வேண்டும். எனக்கு இப்படியெல்லாம் சோதனை வருகிறது. நான் நம்புகிறேன். என் தாய் தந்தை இதை (ஜீவநாடி) நம்பவில்லை. என் மனைவி நம்ப மறுக்கிறாள். என் குழந்தைகள் நம்பவில்லை. அவர்களையும் உங்கள் வழியில் மாற்றுங்கள் என்று கோரிக்கை வைப்பதும் நகைப்புக்குரியது (சிரிப்புக்குரியது). யாருக்கு இதில் எப்பொழுது ஆர்வம் வரவேண்டும்? யாருக்கு இந்த வழி ஏற்புடையது என்றெல்லாம் பிறக்கும் பொழுதே விதி தீர்மானித்து விடுகிறது. அதைத் தாண்டி எம் (அகத்திய மாமுனிவர்) வழியில் வரக்கூடாத மனிதனை வேறு வழியில்லாமல் இங்கு வருகின்ற மனிதன் அழைத்து வந்தாலும் திசை மாறிதான் செல்வான்.

யாரையாவது அழைத்து வந்து இவன் எனக்கு வேண்டிய மனிதன். நல்ல அறப்பணிகள் செய்கிறான். இவனுக்கு வாக்கைக் கூறுங்கள் குருதேவா என்றால் அந்த மனிதனின் அந்த பிறவியை மட்டும் ஒரு சில கால பழக்கம் மட்டுமே இங்கு வருகின்ற மனிதனுக்குத் தெரியும். ஆனால் அவனின் ஆதியோடு அந்தரங்கம் அனைத்தும் எமக்குத்(அகத்திய மாமுனிவர்) தெரியும். அவனுக்கு வாக்கு உரைப்பதால் எவ்விதமான பலனும் இல்லை என்பது எமக்குத் தெரியும். அது மட்டுமல்லாது பல்வேறு மனிதர்கள் மூடர்களாகவே பிறந்து மூடர்களாகவே வாழ்ந்து மூடர்களாகவே இறக்கிறார்கள். அது அவனின் கர்மவினை. அதாவது அவர்களை பொறுத்தவரை புறத் தோற்றம் என்பது மிக முக்கியம். ஒரு ஆன்மீக அமைப்புக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த ஆன்மீக அமைப்பு உலகியல் ரீதியாக பலரும் அறிந்த ஒன்றாக இருக்க வேண்டும். இவன் உலகியல் ரீதியாக யாரையெல்லாம் மதிக்கிறானோ அவர்கள் எல்லாம் அங்கு வந்து போக வேண்டும். அந்த புறத் தோற்றம் ஜொலிக்க வேண்டும். அங்கு அவன் யாரை சந்திக்கிறானோ எந்த சந்தியாசியை சந்திக்கிறானோ அந்த போதகன் மிக உயர்ந்த இடத்திலே அமர்ந்து கொண்டு மிகவும் ஆணவத்தோடு நடந்து கொண்டாலும் அவனை சுற்றி பல்வேறு மனிதர்களும் இருக்க வேண்டும். அப்பேற்பட்ட மனிதனைதான் ஞானி என்றும் இறையருள் பெற்றவன் என்றும் பல்வேறு மனிதர்கள் நம்புகிறார்கள். தனம் இல்லாமலும் ஒரு கிழிந்த குடிசையில் அமர்ந்து கொண்டும் ஒரு அழுக்கு துணியை சுற்றிக் கொண்டும் யாராவது ஒருவன் போதனை செய்தால் யாராலும் அந்த ஞானியை அடையாளம் காட்ட முடியாது. ஞானிகளும் தன்னை நாடி வருகின்ற மனிதர்கள் ஆயிரக்கணக்கில் வர வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஒரு சிலர் வந்தாலும் உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வந்தால் போதும் என்று என்றுதான் எண்ணுகிறார்கள்.

அது போல்தான் இந்த ஜீவ அருள் ஓலையும். இது எல்லோருக்கும் ஏற்றது அல்ல. இதைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு மனிதனின் ஜாதகத்தில் சில ஜாதக பலன்கள் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் லக்னத்தை சுபகிரகங்கள் பார்க்கவேண்டும். அதிலும் குரு பார்க்க வேண்டும். (இவ்வாறு) இல்லாத மனிதர்களை எத்தனை முறைதான் அழைத்து வந்தாலும் போராடி எடுத்து கூறினாலும் இங்கு அமர்ந்து நல்ல பிள்ளை போல் கேட்டு விட்டு பிறகு வெளியே சென்று இவையெல்லாம் ஏற்புடையதல்ல. இதையெல்லாம் நம்பமாட்டேன் என்று கூறிவிட்டு எங்கு சென்றால் ஏமாறுவானோ அங்கு சென்று தான் ஏமாறுவான். இவையெல்லாம் அவனவன் கர்மவினை என்று எடுத்துக் கொண்டு இங்கு வருகின்றவர்கள் அமைதியை கடைபிடித்து எமது வழியில் வர நல்லாசிகள் கூறுகிறோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.