ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 43

கேள்வி: ஐயனே சரிவிகித உணவு என்பது என்ன? எப்பொழுது எவ்வகையான உணவை மனிதன் உண்ண வேண்டும்?

இறைவன் அருளால் நாங்கள் அடிக்கடி கூறுவது போல உணவை மனிதன் உண்ண வேண்டும். எந்த உணவும் மனிதனை உண்ணக் கூடாது. அப்படிப் பார்த்து மனிதன் உண்ணும் ஒரு முறையை கற்க வேண்டும். இன்னும் கூறப்போனால் உணவு என்பது ஒரு மனிதன் வாயைப் பார்த்து நாவைப் பார்த்து உண்ணக் கற்றுக் கொண்டிருக்கிறான். அப்படியல்ல வயிற்றைப் பார்த்து வயிற்றுக்கு எது சுகமோ வயிற்றுக்கு எது நன்மை தருமோ அப்படிதான் உண்ண பழக வேண்டும். உணவும் ஒரு கலைதான். இன்னும் கூறப்போனால் உணவு எனப்படும் இரை சரியாக இருந்தால் மாற்று இரை தேவையில்லை. அதாவது மாத்திரை தேவையில்லை என்பது உண்மையாகும். எனவே உடல் உழைப்பு சிந்தனை உழைப்பு இவற்றைப் பொறுத்து ஒரு மனிதன் உணவை தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதுமே உணவிலும் சாத்வீகத்தைக் கடைபிடிப்பது அவசியமாகும். ஒருவனின் அன்றாடப் பணிகள் என்ன? அதிலே உடல் சார்ந்த பணிகள் என்ன? உள்ளம் சார்ந்த பணிகள் என்ன? இவற்றையெல்லாம் பிரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற் போல் உணவை பயன்படுத்த வேண்டும். அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் உணவைக் குறைத்துக் கொள்வதும் உணவிற்கு பதிலாக கனி வகைகளை சேர்த்துக் கொள்வதிலும் இன்னும் கூறப்போனால் மசை பண்டம் இன்னும் அதிக காரம் அதிக சுவையான பொருள்கள் செயற்கையான உணவு பொருள்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து உணவை ஏற்பதே சிறப்பாக இருக்கும்.

வயது தன்னுடைய உடலின் தன்மை அன்றாடம் செய்கின்ற பணியின் தன்மை மனநிலை இவற்றை பொருத்துதான் எப்பொழுதுமே உணவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம் ஒருவன் எந்த சூழலில் இருக்கிறானோ எந்த தட்ப வெப்ப நிலையில் இருக்கிறானோ அதற்கு ஏற்றாற் போல் மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட கவனம் வேண்டியது உணவை பகிர்ந்துண்டு ஏற்பது. அது மட்டுமல்லாமல் உயர்ந்த உணவாயிற்றே இதை வீணடிக்கக் கூடாது என்பதற்காக ஏற்காமல் உணவு வீணானாலும் உடல் வீணாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஏற்பதே சிறந்த உணவாக இருக்கும். உணவு நல்ல உணர்வை தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும். சாத்வீக உணவாக இருக்க வேண்டும். எனவே உணவை ஒவ்வொரு மனிதனும் உண்ணும் பொழுது அந்த உணர்வை சிரமப்படுத்தாத உணவாகப் பார்த்து ஒரு உணவு உள்ளே செல்கிறதென்றால் அந்த உணவு பரிபூரணமாக செரிமானம் அதாவது ஜீரணம் அடைந்த பிறகே அடுத்ததொரு உணவை உள்ளே அனுப்பும் முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

காலம் தவறாமல் நாழிகை தப்பாமல் உண்ணுகின்ற முறையை பின்பற்ற வேண்டும். வேறு வகையில் கூறப்போனால் சமையல் செய்கின்ற ஒரு தருணம் ஒருவன் ஒரு அடுப்பிலே ஒரு பாத்திரத்தை ஏற்றி நீரை இட்டு அதிலே அரிசியை இட்டு அன்னம் சமைத்துக் கொண்டிருக்கிறான். அப்பொழுது அங்கே மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். அதனால் மூன்று மனிதர்களுக்கு ஏற்ப அன்னம் தயாரித்துக் கொண்டிருக்கிறான். அன்னம் பகுதி வெந்துவிட்டது. இப்பொழுது மேலும் மனிதர்கள் அங்கே வந்துவிட்டார்கள். உடனடியாக ஆஹா இப்பொழுது சமைத்த உணவு பத்தாது. இப்பொழுது வெந்து கொண்டிருக்கும் இந்த அரிசியிலேயே இன்னும் மூன்று பேருக்குத் தேவையான அரிசியைப் போடுகிறேன் என்று யாராவது போடுவார்களா? மாட்டார்கள். இதை முழுமையாக சமைத்தப் பிறகு வேறொரு பாத்திரத்தில் மேலும் தேவையான அளவு சமைப்பார்கள். இந்த உண்மை சமைக்கின்ற அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏற்கனவே உண்ட உணவு அரைகுறையான செரிமானத்தில் இருக்கும் பொழுது மேலும் உணவை உள்ளே அனுப்புவது உடலுக்கு வியாதியை அவனாகவே வரவழைத்துக் கொள்வதாகும். ஒரு மனிதனுக்கு பெரும்பாலான வியாதிகள் விதியால் வராவிட்டாலும் அவன் மதியால் வரவழைத்துக் கொள்கிறான். விதியால் வந்த வியாதியை பிராத்தனையாலும் தர்மத்தாலும் விரட்டலாம். பழக்க வழக்கம் சரியில்லாமல் வருகின்ற வியாதியை மனிதன்தான் போராடி விரட்டும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல உணவு என்பது நல்ல உணர்வை வளர்க்கும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் பக்குவமாக உணவை அகங்காரம் இல்லாமல் ஆத்திரம் இல்லாமல் வேதனை இல்லாமல் கவலையில்லாமல் கஷ்டமில்லாமல் நல்ல மன நிலையில் அதனை தயார் செய்ய வேண்டும். நல்ல மனநிலையில் அதனை பரிமாற வேண்டும். உண்ணுபவனும் நல்ல உற்சாகமான மன நிலையில் உண்ண வேண்டும். இதில் எங்கு குறை இருந்தாலும் அந்த உணவு நல்ல உணர்வைத் தராது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.