ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 230

கேள்வி: மெய்யான மெய்யை எவ்வாறு தேடுவது?

தேடுவது என்பது ஒரு வார்த்தைக்காகக் கூறுவது. உண்மையில் தேடுவதும் ஒன்றுதான். தேடப்படுவதும் ஒன்றுதான். இவை இரண்டும் ஒன்று என்கிற உணர்வு வரும்வரை ஒன்று ஒன்றை தேடிக் கொண்டே தான் இருக்கும். அந்தத் தேடல் எப்பொழுது பூர்த்தி அடைகிறது? என்பது தேடுகின்ற அதற்கே தெரியாத ஒரு நிலையாகும். எனவே அதுவரை தேடிக் கொண்டு இருப்பதுதான் தேடுகின்ற பொருளின் பணியாகும். தேடத் தேடத்தான் தேடுதல் என்ன? என்பதே தேடுகின்ற பொருளுக்கே தெரியுமப்பா. தேட வேண்டும் தேட வேண்டும் என்ற அந்த வேட்கை (விருப்பம்) இருக்கும் வரை தேடுகின்றது எதைத் தேட வேண்டுமோ அதைத் தேடிக் கொண்டே இருக்கும். ஒரு வேளை தேட வேண்டியதைத் தேடாமல் வேறு எதையாவது தேடினாலும் அது தேட வேண்டியது இல்லை என்று தேடுகின்ற அதற்குத் தெரிந்த பிறகு எதைத் தேட வேண்டுமோ அதைத் தேடிக் கொண்டே செல்லும். எப்பொழுது அந்தத் தேடுதல் நிற்கிறதோ அப்பொழுதும் தேடுவதும் தேடப்படுகின்ற பொருளும் ஒன்று என்பது ஒரு நிலையான காட்சியாக மாறும். அது வரை தேடு தேடு தேடு தேடிக் கொண்டே இரு என்பதுதான் எமது வாக்கு.

கேள்வி: ஆன்மா இருதய குகையில் இருப்பதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது அது குறித்து:

காற்று எப்படி ஒரு இடத்தில்தான் இருக்கிறது என்று கூற முடியாதோ பரந்த வான்வெளி இந்த இடத்தில்தான் இருக்கிறது. இந்த இடத்தில் இல்லை என்று எப்படிக் கூற முடியாதோ அப்படித்தான் ஆன்மா என்பதும் இறைவனைப் போல தேகமெங்கும் நீக்கமற பரவியிருக்கிறது. சில குறிப்பிட்ட இடங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது புரிய வைப்பதற்கான ஒரு குறியீடான முயற்சி. அங்கும் இருக்கிறது. எங்கும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.